தானா சேர்ந்த கூட்டம் / விமர்சனம்

சி.பி.ஐ என்ற மூன்றெழுத்து அதிகாரத்தின் உச்சந்தலையில் நறுக்கென்று குட்டியும், சுருக்கென்றும் கிள்ளியும் வைத்தால் எப்படியிருக்கும்? அதை ஜஸ்ட் லைக் தட் செய்துவிடுகிற ஒரு ஹீரோ. அவனது தில்லுமுல்லுகள். அதற்கு பின்னாலிருக்கும் வலி. இவைதான் ‘தானா சேர்ந்த கூட்டம்’!

நயன்தாரா புகழ் விக்னேஷ்சிவன் இயக்கியிருக்கிறார்.

சி.பி.ஐ அலுவலகத்தில் குமாஸ்தாவாக இருக்கும் தம்பி ராமய்யாவின் மகன் சூர்யா, படித்து உயர்ந்து அதே டிபார்ட்மென்ட்டில் வேலைக்கு சேர இன்டர்வியூவுக்கு போனால்…? போன இடத்தில் அவமானப்படுத்தி அனுப்புகிறார் சி.பி.ஐ அதிகாரி சுரேஷ்மேனன். அப்புறமென்ன? தானே போலி சி.பி.ஐ ஆபிசராக மாறி ஒரு கும்பலோடு ஊர் ஊராக ரெய்டு நடத்துகிறார் சூர்யா. அகப்படுகிற பணத்தை என்ன பண்ணுகிறார்கள் என்பதை விடுங்கள். வெறி பிடித்து தேடுகிறது சி.பி.ஐ. கடைசியில் யார் யாரிடம் சிக்கினார்கள்? காதில் பூ வைக்கிற க்ளைமாக்சுடன் சுபம்.

துரை சிங்கம், தன் சிங்கம் கெட்டப்பை சற்றே தள்ளி வைத்ததற்காகவே ஒரு ஸ்பெஷல் விசில்! ரிக்டர் அளவை பெருமளவு குறைத்த சூர்யாவுக்கு இந்தப்படம் வெற்றி திலகமிட்டால், அதைவிட வேறு சந்தோஷம் இல்லை.

போலீஸ் கெட்டப் இல்லையே தவிர, ஐடி கார்டை நீட்டி, ‘ஐ ஆம் பிரம் சி.பி.ஐ’ என்று சொல்லும்போதே எதிராளிக்குள் இடி இறக்குகிறார் சூர்யா. அதிலும் இவர் நடத்தும் அந்த முதல் ரெய்டு… செம த்ரில் அண்டு சுவாரஸ்யம். சைட் வாக்கில் லவ்வும் வந்து சேர்ந்துவிட, டிராக்கை மாத்திராதீங்கய்யா என்ற பதற்றம் வருகிறது. நல்லவேளை தப்பித்தோம். சூர்யாவின் டூயட்டுகளை விட, அவர் விடும் முரட்டுக் குத்துகளும் பைட்டும் மின்னல் வேக மிரட்டல்.

பாகுபலி ராஜமாதா ரம்யாகிருஷ்ணன், இதில் அகா சுகா அட்டு! இவரும் ஒரு போலி சி.பி.ஐ ஆபிசராக வேஷம் போட்டு, சூர்யாவுடன் இணைந்து தரும் அதிரடி ‘கொள்ளை’ அழகு. ஒரு பாடல் காட்சியில் ரம்யாகிருஷ்ணனின் வேஷ்டி அவதாரம், ராம்ராஜ் காட்டன் உலகுக்கும் சேர்த்து விற்பனையை கூட்டும். டவுட் இல்லை. 15 வயசுலேயே கல்யாணம் ஆகிருச்சு என்று சிரித்துக் கொண்டே தன் வாரிசுகளை வரிசை கட்டும்போது நமக்கு மூச்சு முட்டுகிறது.

மெழுகு பொம்மை உயிர் கொண்டது போல இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஐயோ கொடுமை. பிராடு கூட்டத்தில் இவரும் உண்டு. படத்தில் நெடு நேரம் காட்டாமல் சீக்கிரமே என்ட் கார்டு வாங்கிக் கொள்கிறார் சோ க்யூட் கீர்த்தி. ஸோ சேட்!

பழைய ஹீரோ கார்த்திக்கும், சுரேஷ்மேனனும்தான் சி.பி.ஐ ஆபிசர்ஸ். தன் பாணியை மாற்றிக் கொள்ளாத கார்த்திக், ஏதோ ஒப்பேத்துகிறார். சுரேஷ்மேனன் இன்னும் நாலு படத்திலாவது நின்று அடிப்பார்.

பழைய செந்தில், ஆர்.ஜே.பாலாஜி, ஆனந்தராஜ் என்று காமெடி கூட்டம் இருந்தாலும், ஆனந்தராஜுக்கு ஏனோ அவ்வளவு அப்ளாஸ். அவர் சும்மா பார்த்தாலே கலீர் என்கிறது தியேட்டர். கொஞ்ச நேரமே வந்தாலும் மனுஷன் என்னமா பார்ம் ஆகியிருக்கார்?!

அனிருத்தின் இசையில் அத்தனை பாடல்களும் அடடா… அடடா! எடிட்டிங், ஒளிப்பதிவு எல்லாமே கச்சிதம்.

கதை 87 களில் நடக்கிறது. செல்போனும் சி.சி.டிவியும் இல்லாத காலமாச்சே? அதுவே கதையின் ஓட்டைகளை ‘கம்’ போட்டு அடைத்துக் கொள்கிறது.

‘எளியோரை வலியார் மிதித்தால்…’ இந்த வலிமையான வரிகளுக்குள் இருக்கும் அர்த்தத்தை வைத்துக் கொண்டு எத்தனை எத்தனை விதமாகவோ கதை பண்ணியிருக்க முடியும். ஆனால் கூட்டமாக சேர்ந்து குஷி படுத்தினால் போதும் என்று முடித்துக் கொண்டதுதான் அதிர்ச்சி.

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Naachiyaar – Official Theatrical Trailer

https://www.youtube.com/watch?v=DTtnh86GnTY

Close