உடல் நிலை சரியில்ல… இருந்தாலும் பாடுவேன்! விதி மதி உல்டா நிகழ்ச்சியில் கானா பாலா நெகிழ்ச்சி
தான் சார்ந்த பட விழாக்களுக்கே வராமல் ‘டிமிக்கி’ கொடுக்கும் சினிமா கலைஞர்கள் மத்தியில், கானா பாலா ஒரு ‘ஜிமிக்கி கம்மல்’ என்றால் ஒருவரும் மறுக்கப் போவதில்லை. இத்தனைக்கும் அவர் சினிமாவில் பாடுவதையே நிறுத்திவிட்டார். தன்னை தேடி வரும் மியூசிக் டைரக்டர்களிடம், “வேணாங்க. என்னை மாதிரிய நிறைய பசங்க இருக்காங்க. அவங்களை அழைச்சு பாட வைங்க” என்றும் கேட்டுக் கொள்வது சினிமாவில் இதற்கு முன் யாரும் செய்திராத சிறப்பு.
விதி மதி உல்டா என்ற படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் அவர். இந்த படத்திற்கான ஒரு சிறப்பு நிகழ்ச்சி எக்ஸ்பிரஸ் அவன்யூவில் நடந்தது. இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தியின் துள்ளலான டான்ஸ்சை அங்கு வந்த பல நூறு இளசுகள் சந்தோஷமாக ரசித்துக் கொண்டிருக்க… திடீரென மேடை ஏற்றப்பட்டார் கானா பாலா.
“எனக்கு உடம்பு சரியில்ல. இருந்தாலும், என்னை இந்தப்படத்தில் பாட வச்ச அஸ்வினுக்காக நான் வந்தே ஆகணும் அல்லவா? அதனால் வந்துட்டேன். நிறைய பேசணும்னு நினைக்கிறேன். பட்… உடம்பு ஒத்துழைக்கல. ரெண்டு வரி பாடி முடிச்சுக்குறேன்” என்று ஜனங்களை சந்தோஷப்படவும், கவலைப்படவும் வைத்தார் கானாபாலா. அவ்வளவு கொடுமையிலும், “நான் சினிமாவில் பாடுறதை நிறுத்திட்டேன். மற்றவங்களுக்கு அந்த வாய்ப்பை கொடுங்க” என்று அவர் கேட்டுக் கொண்டது இனிப்பு.
அடுத்தவர் வாய்ப்பை தட்டிப்பறிக்கும் கோடம்பாக்கத்தில், இப்படியும் ஒரு மனுஷன். நீங்க ஒதுங்கிட்டாலும் ஒங்க பாட்டு நின்னு பேசும் தலைவா…
பின்குறிப்பு- படத்தின் ஹீரோ ரமீஸ் ராஜா, ஹீரோயின் ஜனனி அய்யர் உட்பட விதி மதி உல்டா தொடர்பான அத்தனை பேரும் மேடை ஏறினார்கள்.