காதல் மீட்புக் கழகம்! விஜய்சேதுபதிக்கும் த்ரிஷாவுக்கும் இதுதான் வேல!
‘இமயமலையின் உச்சிக்குப் போய், அப்படியே லெஃப்ட்ல திரும்பி, ரைட்ல பார்த்தீங்கன்னா பச்சை பசேல்னு ஒரு செடி இருக்கும். அதிலிருந்து நாலு இலையை பறிச்சு வாயில போட்டு பச்சையா மென்னீங்கன்னா என்னய மாதிரி இளமையா இருக்கலாம்’ என்று த்ரிஷா சொன்னால், மொத்த பேரும் கிளம்பிப் போய் இமயமலைக்கே இம்சை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், அப்படியிருக்கிறார் த்ரிஷா!
இளமை அமைவதெல்லாம் இதயம் கொடுத்த வரம் என்றால், த்ரிஷா அதற்கும் பொருத்தமே! 96 படத்தில் இவருக்கும் விஜய் சேதுபதிக்கும் ஏகப்பட்ட லவ் காட்சிகள். எல்லாமே 60 வயது கிழவனையும் அப்படியே தள்ளிக் கொண்டு போய் டென்த் ப்ளஸ் டூ காலத்தில் நிறுத்தும் என்பதிலும் சந்தேகமில்லை. டவுட் இருந்தால் 96 படத்தின் ட்ரெய்லரை கண்டு களிக்கவும். இப்படத்தின் இரண்டு பாடல்களை ஸ்பெஷலாக கண்ணுறும் பாக்யம் பிரஸ்சுக்கு ஏற்பட்டது தனி ஹேப்பி.
படத்தின் கலை இயக்குனர், மியூசிக் டைரக்டர் உள்ளிட்ட அத்தனை டெக்னீஷியன்களும், ‘நான் படிக்கிற காலத்திலேயே த்ரிஷா மீது உசுரா இருந்திருக்கேன்’ என்று உணர்ச்சி வசப்பட்டு பேசி பேசி அவருக்கு எதையோ புரிய வைக்க ட்ரை பண்ணிக் கொண்டிருந்தார்கள். பொங்கி வரும் சந்தோஷத்தில் எல்லாவற்றையும் ரசித்துக் கொண்டிருந்தார் அவர். “என்னோட சீனியர்தான் அவங்க. ஆனால் வயசுல என்னைவிட ஏழு வயசு கம்மியா இருப்பாங்க. சினிமாவுக்கு அவங்க ரொம்ப சின்ன வயசுலேயே வந்திட்டதால் அப்படி” என்று தன் ஹீரோயினின் இமேஜையும் காப்பாற்றினார் விஜய் சேதுபதி.
ஸ்கூல் டேஸ் லவ்வை மீண்டும் உரசிப்பார்க்கும் படமாக இது இருக்கக் கூடும். மனசை தாக்குகிற அந்த புயல் இன்னும் ஒரு வாரத்தில் தியேட்டருக்கு வரப்போகிறது. இழந்த காதல்களை மீட்டெடுக்க நினைக்கிற எல்லாரும் படையெடுத்து தியேட்டருக்கு வருவார்கள்.
என்னைக்குப்பா அலைகள் ஓய்ஞ்சிருக்கு?