செக்கச் சிவந்த வானம் / விமர்சனம்

‘கருவாடு மீனாகாது. காலாவதியான கலாவதிக்கு கல்யாணமும் நடக்காது’ என்றெல்லாம் மணிரத்னத்தின் அண்மைக்கால படங்களை ரசித்து(?) ஒரு முடிவுக்கு வந்த ரசிகனையெல்லாம் வாரி அள்ளி வண்டியில் ஏற்றியிருக்கிறார் மணி சார்! சொல்லிதான் ஆக வேண்டும். தரமற்ற சாலையில் ஒரு தங்கமான பயணம்!

‘எதுக்கு வேலை மெனக்கெட்டு மும்பைக்கு போய் இந்தி பேசுற தாதாவை தேடணும். இங்கே சென்னையிலேயே இருக்கிற ஒரு தாதாவை வச்சுக்கலாமே?’ என்று நினைத்த மணிசாருக்கு முதலில் ஒரு நன்றி. மும்பை என்றால் சேட்டுகள் வருவார்கள். மிசஸ் சேட்டுகள் கதறுவார்கள். பார்த்து பார்த்து சலிச்சாச்! ஆனால் மும்பையோ, சென்னையோ… துப்பாக்கி அதேதான். தோட்டாவும் அதேதான். மணி சார் மாறவேயில்லை, அந்த தோட்டா சவுன்ட் போல!

பிரபல தாதா பிரகாஷ்ராஜ் தம்பதியை கொல்ல ஒரு சதி நடக்கிறது. பிழைத்துக் கொள்கிறார் அவர். அருகிலேயே இருக்கும் மூத்த மகன் அரவிந்த்சாமி எதிர் கோஷ்டி மீது டவுட்டாகி ஒருவனை போட்டுத்தள்ளுகிறார். பலருக்கு படு காயம். செர்பியாவிலிருக்கும் ஒரு மகன் சிம்புவுக்கும், துபாயிலிருக்கும் இன்னொரு மகன் அருண்விஜய்க்கும் தகவல் சொல்லப்படுகிறது. தன்னை போட்டுத்தள்ள முடிவெடுத்தது யார் என்று அறியும் பிரகாஷ்ராஜ், மனதிற்குள்ளேயே மருகி மருகி ‘மர்கயா’ ஆகிவிட, சென்னைக்கு மீண்டும் கிளம்புகிறார்கள் வெளிநாட்டு மகன்கள். அவர்களுக்கு நேரும் அவஸ்தைகளும், மகன்களுக்குள் நடக்கும் நாற்காலி சண்டையும் மிச்சசொச்ச செகன்ட் ஹாஃப்!

ஆர்ட்டிஸ்டுகள் சம்பளமே படத்தின் பட்ஜெட்டில் பாதியை தின்றிருக்கும். விஜய்சேதுபதி, சிம்பு, அருண்விஜய், அரவிந்த்சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, அதிதி ராவ், டயானா எரப்பா (ஏய்.. யாருப்பா இது?) என்று கூட்டம் கூட்டமாக ஆர்ட்டிஸ்டுகள். ஆளுக்கு அஞ்சு நிமிஷம் கொடுத்தாலே அரிச்சந்திரன் டிராமா போல அரை நாளை முழுங்கிடுமே? ஐயோ பாவம் எடிட்டர். கவனித்து வெட்டி, கதையை கெட்டிப்படுத்தியிருக்கிறார்.

நடிப்பில் எல்லாரும் முண்டியடித்து முதல் ரேங்க் வாங்கியிருக்கிறார்கள். குறிப்பாக விஜய் சேதுபதியும் சிம்புவும். கம்பீரமான, அதே நேரத்தில் கலகலப்பான போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி. முதல் காட்சியில் மட்டும்தான் யூனிபாஃர்ம். அதற்கப்புறம் புல் மஃப்டி! மகாபாரத கண்ணன் போல, முழு கலகத்திற்கும் இவரே காரணமாகி நிற்கிறார். கடைசியில் தர்மத்தை காப்பாற்றி… அதர்மத்தை ஒழித்து… களேபரம் பண்ணியிருக்கிறார். படம் சீரியஸ்சாக போய் கொண்டிருக்கும் நேரமெல்லாம் ஒரு ஜோக்கை போட்டு தியேட்டரை அதிர விடுகிறார்.

அப்பா செத்துட்டாரு… என்று தகவல் வர, ‘நான் வரணுமா?’ என்று அலட்டிக் கொள்ளாமல் கேட்கிற போதே கைதட்டலை அள்ளுகிறார் சிம்பு. சற்றே பூசிய வயிறு. சொல்பேச்சு கேட்காத உடம்பு. இருந்தாலும், நடிப்பு ராட்சசனாச்சே? மிரள விட்டிருக்கிறார். அதிதிராவ் தன் அண்ணனின் வாக்கப்படாத அண்ணி என்று தெரிந்திருந்தாலும், அவரை வச்சுக்க(?) துடிக்கும் இந்த கொழுந்தனின் கேரக்டர் கொழுப்போ கொழுப்பு. (மணி சாருக்கு அடுத்தப்பட கதைக்கு ‘நாட்’ கிடைச்சாச்சு போல)

தன் அண்ணனை தேடி வரும் அந்த ஒரு காட்சியில் மொத்த கிளாப்சையும் அள்ளிக் கொள்கிறார் அருண் விஜய். மற்றபடி அவர் துபாயில் என்ன பண்ணுகிறார். ஷேக்குகளிடம் என்ன பேசுகிறார்? என்பதெல்லாம் துக்கடா. அவரது காதல் மனைவி ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வளவு சீக்கிரம் ஜெயிலுக்குப் போவார். அதுவும் செய்யாத குற்றத்துக்கு? என்பதெல்லாம் பூ சுற்றல். ஆமா… அந்த குழந்தை எங்கேங்க?

எப்போதாவது பூத்தாலும் ஜோ. ஜோதான்! கணவன் சிக்கிக் கொள்ளக் கூடாதே என்கிற கவலை ஒருபக்கம். கொழுந்தன்கள் மீதிருக்கிற பாசம் ஒரு பக்கம் என்று தள்ளாடி தவிக்கிறார். புருஷனின் ‘செட்டப்’பை காண நேராகவே போகும் அவருக்கு அங்கு கொதிக்கும் மீன் குழம்பு அளவுக்கு கூட மனசு கொதிக்கலையே என்று நினைத்தால்தான் பக் என்கிறது. ஹ்ம்ம்ம்… மணி சார் படம்! செட்டப் அதிதிக்கு இது தேவையில்லாத படம். பூனை மயிர் அளவுக்கு பிரயோஜனப்படாது.

அரவிந்த்சாமியின் கம்பீரத்தையும், அந்த கட்டுக்கோப்பான பாடி ஷேப்பையும் கேள்விக்குள்ளாக்கிவிடுகிறது அவரது பயந்தாங்கொள்ளி ஓட்டம்.

பிரகாஷ்ராஜுக்கு அதிக வேலையில்லை. கிடைக்கிற குளோஸ் அப்பில் ஒரு பெயின் மாத்திரைக்கு முன் வருகிற ரீயாக்ஷனை கொடுத்துவிட்டு அமைதியாகிவிடுகிறார். தியாகராஜன் தன் உருட்டும் விழியால் ஒரு மிரட்டு மிரட்டிவிட்டு காணாமல் போய்  விடுகிறார்.

நல்லவேளை… எவ்வளவு லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் அது தெரியாதளவுக்கு படத்தின் ஓட்டம் இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள் எடிட்டரும் இயக்குனரும். மின்னலாய் ஓடி முடிகிறது படம்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் தனியே கேட்டால் மயங்கி விழ வைக்கும் பாடல்கள் எல்லாம் படத்தில் வெட்டியாய் விழுந்த புல்லட் ஓட்டைகள் போல போன இடம் தெரியவில்லை. பின்னணி இசையில் மயங்குகிறோம். அது நமக்கு புதுசு இல்லையே?

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் செர்பியாவுக்கும் துபாய்க்கும் இலவச ட்ரிப் அடித்த சந்தோஷம் பொங்குதே?

செக்கச் சிவந்த வானம்- அழகான மீன் தொட்டி! ஆனால் ஆக்சிஜன் இல்லேயே மணி சார்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஃபைட் மாஸ்டர் யூனியனில் ஃபைட்! கோர்ட்டுக்கு போன கும்மாங்குத்து!

Close