மக்கள் ஒரே சக்தியாக இணைவதற்கு திட்டிவாசல் படம் அட்வைஸ்?

கதை பிடித்துப்போய் தன் நெருக்கடியான தேதிகளை அனுசரித்து நாசர் கால்ஷீட் கொடுத்து நடித்துள்ள படம்தான் ‘திட்டி வாசல்’. இது மலைவாழ் மக்களின் பிரச்சினைகள், போராட்டங்கள் பற்றியும் அவர்களின் வாழ்வியல் பற்றியும் பேசுகிற ஒரு படமாக உருவாகியுள்ளது. திட்டிவாசல் என்றால் சிறையில் இருக்கும் சிறிய கதவுடைய வழியைக் குறிப்பதாகும்.

படத்தை இயக்கியுள்ளவர் எம். பிரதாப் முரளி.

“படம் பற்றி அவர் பேசும்போது. “போலீஸ் ஸ்டேஷனில் போடப்படும் எப்.ஐ.ஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கையைப் பொறுத்தே வழக்கின் தன்மை இருக்கும். ஆனால் அதிலுள்ள உண்மை நிலை தெரிவதற்குள் பல்வேறு சம்பவங்கள் நடக்கும். அந்தப் பாதிப்புகள் பற்றிய கதைதான் திட்டிவாசல் படம். இது முழுக்க முழுக்க சிறை பின்னணியில் நடக்கும் கதை. இது மலைவாழ் மக்களின் வாழ்க்கையையும் பிரச்சினைகளையும் யதார்த்தமாகப் பேசுகிறது. ” என்கிறார்.

படம் பற்றி இயக்குநர் மேலும் பேசும் போது “இன்று மக்களிடம் உள்ள பிரச்சினைகளும் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கைச் சூழலும் தான் அவர்களில் சிலரை மாவோயிஸ்ட், நக்சலைட் என்று தீவிரவாத வழிகளில் செல்ல வைக்கிறது. ஆனால் என்றுமே வன்முறை பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது. ஜனநாயக புரட்சி வழியில்தான் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் .அது எப்படி சாத்தியம்? சிறு சிறு குழுக்களாக இயங்கும் மக்கள் ஒரே சக்தியாக இணைய வேண்டும். அப்போது வெற்றி நிச்சயம் என்று படத்தில் சொல்லியிருக்கிறோம்” என்கிறார்.

ஒளிப்பதிவு ஜி.ஸ்ரீனிவாசன். ஹரீஷ், சத்தீஷ் ஜெர்மன்விஜய் என மூவர் இசையமைத்துள்ளனர். பாடல்கள்- நா.முத்துக்குமார், சதீஷ், சிவ முருகன். நடனம் -‘தில்’ சத்யா, ராஜு. ஸ்டண்ட், ‘வயலன்ட் ‘வேலு, த்ரில்லர் மஞ்சு.

படத்தில் நாசர் முக்கிய பாத்திரம் ஏற்றுள்ளார். முன்னணி கதை மாந்தர்களாக மகேந்திரன், கன்னட நடிகர் சின்னிவினோத் வருகிறார்கள். தனு ஷெட்டி, ஐஸ்வர்யா, அஜய்ரத்னம், தீரஜ்அஜய்ரத்னம், ஸ்ரீதர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

சென்னை , கோத்தகிரி, கேரளா, வயநாடு ,கோவா போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. முப்பத்தைந்து நாட்களில் காடு, மலை சார்ந்த பகுதிகளிலேயே முழுப்படப்பிடிப்பும் நடத்தி தங்கள் தொழில் வேகத்தைக் காட்டியுள்ளது. படக்குழு. இப்படத்தை ‘கே 3 ‘சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீனிவாசராவ் தயாரித்திருக்கிறார்.

‘திட்டிவாசல்’ படம் செப்டம்பர் 22-ல் திரையரங்கு வாசல் வருகிறது.

இது தனி ஒருவரின் கதையல்ல. ஒரு விளிம்புநிலை சமூகம் சார்ந்த பதிவு .

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அர்ஜுன் ரெட்டி ரீமேக்! தனுஷுக்கு ரஜினி செய்த அட்வைஸ் என்ன?

Close