டூலெட் / விமர்சனம்

வேல்டு மேப்பில் இடம்பெறாத நாட்டில் கூட நுழைந்து கோல்டு கோல்டாக விருதள்ளிய படம் டூ லெட்! எருமை மாட்டு முதுகில் வெள்ளை வேஷ்டியை காய வைத்த பதற்றத்தோடு பார்க்க வைக்கும் விருது படங்களின் வரிசையில் இது வேறு டைப்! ‘இந்த குடும்பத்துக்கு வீடு கிடைச்சுதா, இல்லையா?’ இந்த கேள்வியை நெற்றி முடிச்சில் ஒட்ட வைத்துக் கொண்டு ஓட விடுகிறார்கள் ரசிகர்களை. ஒன்றரை மணி நேர படம்தான். ஆனால் ஒரு நூறு வருஷத்தின் மிடில் கிளாஸ் ஜாதகத்தை புட்டு புட்டு வைக்கிறது.

கோடீஸ்வரன் வீட்டு கார் ஷெட் போல ஒரு வீட்டை வைத்துக் கொண்டு, தானே கோடீஸ்வரிகளாக ஃபீல் பண்ணும் வீட்டு ஓனர்கள், குடியிருப்பவர்களுக்கு கொடுக்கிற குடைச்சல்தான் முழு படமும். ‘இந்த மாசம் வீட்டை காலி பண்ணிடுங்க’ என்று கறாராக கூறிவிடுகிற அந்த பெண்மணிக்கு ஓகே சொல்லிவிட்டு வாடகை வீடு வேட்டைக்கு கிளம்புகிறது ஒரு குடும்பம்! அது சந்திக்கும் இன்னல்களும், ஏமாற்றமும்தான் முழு படமும்!

பேங்க் அக்கவுன்ட் கூட வைத்திராத ஒரு சுமார் குடும்பம், தன் சேமிப்பை எங்கு வைத்து பாதுகாக்கும்! வீட்டு ஓனர் முன் வாடகை வீட்டுப் பெண்மணிகள் அடங்கி ஓடுங்கிப் போகும் அந்த தருணம் எப்படிப்பட்டது! வீட்டு ஓனர்களின் கேள்வி, தனியார் நிறுவனங்களின் இன்டர்வியூவைவிட படுமோசமாக இருக்கிறதே, அது எப்படி! இந்த ஒடுக்கு குடித்தனத்திற்குள் நிகழும் ரொமான்ஸ், குழந்தைகளின் சுதந்திரம், இதெல்லாம் எப்படியிருக்கும்! இப்படி சகல அவலங்களையும் ஒரு படத்தில் போட்டு உலுக்கியெடுத்திருக்கிறார் இயக்குனர் செழியன். ஒளிப்பதிவாளரும் இவரே என்பதால், இவர் மனம் சொல்ல நினைத்ததை படத்தில் வரும் நிழல் கூட ஒப்பிக்கிறது.

படு இயல்பான நடிப்பால், இது படம் என்பதை மறக்க வைக்கிறார்கள் சந்தோஷ் மற்றும் ஷீலா. இவ்விருவரின் குழந்தையான தருண், கேமிரா அச்சம் சிறிதுமின்றி இயல்பாக நடித்திருக்கிறான். ஒரு உதவி இயக்குனரின் தாகம் சோகம் இரண்டையும் குழைத்து (ந)அடித்திருக்கிறார் சந்தோஷ். அதில் அவ்வளவு யதார்த்தம்! இரண்டு வயது குழந்தை தன் கல்யாணத்துக்குப் பிறகும் நம்மை கவனிச்சுப்பானா? என்கிற வரைக்கும் கற்பனையை தட்டிவிட்டு கவலை கொள்கிறார் ஷீலா. சொந்த வீட்டுக் கனவை ஏக்கத்தோடு சொல்லி முடிக்கும் ஷீலா நடுத்தர குடும்ப பெண்களின் நகல்!

கவிஞர் ரவி சுப்ரமணியன், பத்திரிகையாளர் அருள் செழியன் என்று படத்திற்கு பலம் சேர்த்தவர்களுக்கும் பாராட்டுகள். கையில் கிடைத்தால் நறுக்கென ஒரு குட்டு வைக்கலாம் என்கிற அளவுக்கு வீட்டு ஓனரின் வெறுப்பு வெர்ஷனில் வருகிறார் ஆதிரா பாண்டியலட்சுமி. சிறப்பு.

பின்னணி இசையே இல்லாத படம். ஆனால் எல்லா காட்சிகளிலும் ஒரு விறுவிறுப்பை ஏற்படுத்துகிறது ஸ்ரீகர்பிரசாத்தின் எடிட்டிங்! துருத்திக் கொண்டு நிற்காத குறியீடுகளும் ஆங்காங்கே உண்டு. ‘இனிமே கருப்பு சட்டை போடாதீங்க’ ‘நீங்க என்ன ஆளுங்க?’ என்று ஒரு வீட்டு உரிமையாளர் வாடகையாளரிடம் கேட்கிற காட்சி புனைவுமில்லை, பொய்யுமில்லை! ஆங்காங்கே நடைபெறுகிற நிஜம்!

ஸ்பெஷல் சவுண்ட் ஸ்பெஷலாக ஈர்க்கிறது. ஒரு காட்சியில் தருண் கையிலிருக்கிற விளையாட்டுப் பொருள் காற்றில் உராயும் சத்தம் கூட அவ்வளவு துல்லியம்!

வாஷ் அவுட் படங்களுக்கு வாரி வாரி இறைக்கும் பட அதிபர்கள், வருஷத்திற்கு ஒரு ‘டூலெட்’ வகை படங்களுக்கு செலவு செய்யலாம்.

ஏனென்றால் தமிழ்சினிமாவின் பெருமை ‘டூலெட்’டுகள் அன்றி வேறில்லை!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”- ’வலைபேச்சு’ அந்தணன், சக்திவேல் Fun Interview

https://www.youtube.com/watch?v=3jSyc24RI9I

Close