திரையுலகத்தினர் கலைஞருக்கு அஞ்சலி!

மறையும் வரைக்கும் தமிழுக்கு உரமாக இருந்த கலைஞர், மண்ணில் உரமாகிவிட்டார். இந்திய அரசியல் வரலாற்றில் கலைஞர் கருணாநிதிக்காக ஒதுக்கப்பட வேண்டிய பக்கங்கள் நிறைய இருக்கும். அந்த வரலாற்று நாயகனை அரசியல் உலகம் இழந்து தவிப்பது எப்படியோ, அப்படியே கலையுலகமும் இழந்து தவிப்பதை நேற்று உணர முடிந்தது.

வசன சினிமாவுக்கு தமிழ்ப்பட ரசிகர்கள் ஓய்வு கொடுத்துவிட்டாலும், தமிழ்சினிமாவை புரட்டிப்போட்ட கலைஞரின் வசனங்களுக்கு யாராலும் ஓய்வு கொடுத்துவிட முடியாது. சினிமாவிலிருந்து பல முதல்வர்களை எடுத்துக் கொண்டது தமிழகம். அவலர்களில் யார் சினிமாவுக்கு அதிக நன்மைகள் செய்தார்? என்று கேட்டால், கட்டாயம் முதல் மார்க் கலைஞருக்குதான்.

அந்த நன்றியை காட்ட வேண்டும் என்பதற்காகவே லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் மத்தியில் சிரமப்பட்டு ராஜாஜி ஹாலுக்கு வந்தார்கள் பல நட்சத்திரங்கள். ரஜினி, கமல், அஜீத், தனுஷ், உள்ளிட்ட ஏராளமான ஹீரோக்கள் அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்தாலும், அந்த படப்பிடிப்பை ரத்து செய்திருந்தார் விஜய். அவரது மனைவி சங்கீதா நேரில் வந்து மலரஞ்சலி செலுத்தினார்.

அமெரிக்காவில் சிகிச்சையில் இருக்கும் விஜயகாந்த் கண்ணீர் மல்க அனுப்பிய வீடியோ இரங்கலுக்கு கண்ணீர் சிந்தாத உள்ளங்களே இருக்க முடியாது.

அப்படியொரு வைரமுத்துவை அதற்கு முன் யாரும் பார்த்திருக்கவே முடியாது. தன் கம்பீரம் மறந்து அப்படியே கதறி கதறி அழுதார். சவப்பெட்டியை பற்றிக் கொண்டு அவர் தேம்பிய காட்சியை கலங்காத நெஞ்சமில்லை.

இப்படி பாசத் தலைவனுக்கு பாராட்டுவிழா நடத்திய அத்தனை உள்ளங்களும் அதே பாசத்தலைவனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது ஒருவகையில் நன்றிக்கடன்தான்.

சினிமாவுலகத்திலிருந்து இனி ஒரு முதல்வர் தமிழகத்திற்கு அமைந்தாலும், ஒட்டுமொத்த சினிமாக்காரர்களாலும் அவர் கொண்டாடப்படுவாரா? சந்தேகம்தான்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கூத்தடிச்சது போதும்! நல்லப்படங்களை நோக்கி தமிழ்சினிமா!

Close