ஐயா வடிவேலு! நீங்க செய்யறது நியாயமா?
தமிழ்சினிமாவில் வடிவேலுவின் இடத்தை நிரப்ப, அவரது அப்பாவே திரும்ப பிறந்து வந்தாலும் முடியாது! திடீரென ஒரு நாள் இரவில் ஆயிரம் ஐநூறு நோட்டுகள் செல்லாமல் போனது போல, ஒரே நாளில் இவரை செல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்று தமிழ்சினிமாவின் தலைவிதி தப்புக் கணக்குப் போட்டது. ஆனால், சேனல்கள் இருக்கிற வரைக்கும் வடிவேலு என்ற மண்ணின் கலைஞனை யாரால் அழிக்க முடியும்?
இப்படி அழியாப் புகழ் பெற்ற வடிவேலு, “என்னை அழிக்கவோ ஒழிக்கயோ யாரும் தேவையில்ல. அதை நானே செஞ்சுப்பேன்” என்று முண்டா தட்டிக் கொண்டு கிளம்பினால், அந்த சோகத்தை எங்கு போய் சொல்வது? எந்த சுவற்றில் முட்டிக் கொள்வது?
குற்றம்! நடந்தது என்ன?
வடிவேலுவின் கேரியரில் மிகப்பெரிய வெற்றி என்றால், அது ‘இம்சை அரசன் 23 ம் புலிகேசி’தான். வெறும் காமெடியனாக இருந்தவரை, கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்த்திய படம். அந்த படத்தை சிம்புதேவன் இயக்க, ஷங்கர் தயாரித்தார். அதற்கப்புறம் எல்லா காலமும் கொடி கட்டி பறந்திருக்க வேண்டிய வடிவேலுவின் பங்கு சந்தையில் செத்த எலிகளும், திராணியில்லாத சருகுகளும்தான் பரந்து விரிந்து கிடக்கிறது.
மீண்டும் ஒரு வசந்த காலத்தை உருவாக்குவோம் என்று நினைத்த சிம்புதேவன், வடிவேலு, ஷங்கர், என்று ரிப்பீட் அடிக்க… சந்தோஷமாக பேச்சு வார்த்தை தொடங்கியது. வடிவேலு ஒரு சம்பளம் கேட்டார். அதை கொடுக்க முன் வந்தார் ஷங்கர். வடிவேலுவின் சம்மதத்தின் பேரிலேயே அவருக்கு பிடித்த நடிகர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். இன்னொரு புறம், 23 ம் புலிகேசியை மிஞ்சிய செட்டுகள் அமைக்கும் பணியும் ஆரம்பித்து முக்கால்வாசி வேலை போய் கொண்டிருக்கிறது.
கடந்த மார்ச் 15-ல் படப்பிடிப்பு நடக்க இருந்த நிலையில் வடிவேலு படப்பிடிப்பிற்கு வராமல் தனக்கு பேசப்பட்ட சம்பளத்தைவிட கூடுதலாக ஒரு தொகை கொடுத்தால்தான் படப்பிடிப்புக்கு வருவேன் என்று தயாரிப்பாளர்களையும் படக்குழுவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். தயாரிப்பாளர் பட்ஜெட் தாங்காது என்று கூறி விட, இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இதனால் படக்குழு ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. செட் வேலைகள் பாதியில் நின்று விட்டது. படத்தை அவரை வைத்து தொடருவதா அல்லது அவரிடம் அட்வான்ஸை திரும்ப வாங்குவதா என்று யோசித்துக் கொண்டிருக்கிற்தாம் தயாரிப்பு தரப்பு.
பல ஆயிரம் பணியாளர்களின் உழைப்பு, அவர்களுக்கான சம்பளம், கால்ஷீட் தேதிகள் என்று எல்லாம் வீணாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதெல்லாம் வடிவேலு என்கிற ஒரே ஒரு கலைஞனால் ஏற்பட்ட இழப்பு.
வைகை புயலே… உங்களால் ஒரு வார்தா புயல் வரணுமா? யோசிங்க… ப்ளீஸ்!
https://youtu.be/UsiQRWsuJII