விதார்த்துக்கு ஒரு ஹெவி வெய்க்கிள் லைசென்ஸ் பார்சேல்!
தலைப்புக்காக மண்டையை பிய்த்துக் கொள்வது இருக்கட்டும். அந்த தலைப்பை டிசைன் செய்வதகே தனியாக மண்டையை பிய்த்துக் கொள்வது இன்னொரு ‘தலை’யாய பிரச்சனை. இத்தகைய பிரச்சனையில் சிக்கி கொஞ்ச நஞ்ச முடியை இந்த கோடம்பாக்கத்துக்கு அர்ப்பணிக்கிற பல டிசைனர்களில் ‘வண்டி’ பட டிசைனருக்கு ஸ்பெஷல் மகுடமே தரித்து விடலாம் என்று தோன்றியது.
அறிமுக நிகழ்வில் எல்லாரும் படம் பற்றி பேசினார்களே ஒழிய, இந்த டிசைனர் பற்றி ஒரு சிறு குறிப்பும் இல்லை. அவர் மேடையேற்றப்படவும் இல்லை. போகட்டும்…. சில படங்களின் முதல் லுக், நம்மை தொட்டு இழுத்து ஹக் பண்ணிக் கொள்வது வழக்கம். இந்த வண்டியும் அப்படியே.
விதார்த், சாந்தினி நடிக்கும் இப்படத்தை ராஜேஷ் பாலா இயக்க, ஹரீஷ் என்கிற மலையாளி தயாரித்திருக்கிறார். “இந்தப்படத்தில் நடிச்சதே புது அனுபவமா இருந்திச்சு. மக்கள் நடமாடும் இடத்தில் ஒரே நேரத்தில் நாலைந்து கேமிராவை வச்சுருவாங்க. ஒரே ஷாட்தான். படக்குன்னு எடுத்துட்டு கிளம்பிருவோம். அப்படியே இந்தப்படம் முடிகிற வரைக்கும் நாலைந்து கேமிரா போட்டு எடுத்துகிட்டேயிருந்தாங்க. நிறைய காசு வச்சுருக்காங்க போல. அதனால்தான் இப்படின்னு நினைச்சேன். ஆனால், இதன் மூலம் எவ்வளவு துல்லியமா எக்ஸ்பிரஷன்களை காட்ட முடியும்னு படத்தை பார்க்கும் போதுதான் தோணுச்சு” என்றார் ஹீரோ விதார்த்.
டூ வீலர்களையும் அதில் பயணிப்பவர்களையும் பற்றி ஒரு பாடல் வைத்திருக்கிறார்கள். அட… சாதாரண டூ வீலர்ல இவ்வளவு விஷயம் இருக்கா என்று எண்ண வைத்தது.
விதார்த் பெரிய ஹீரோ இல்லைதான். ஆனால் அவர் நடிக்கும் படங்களின் உள்ளடக்கம் கவனிக்கக் கூடியதாக இருக்கிறது. அவரும் படமும் ஒரு சேர வளர, வண்டி உதவட்டும்!
விதார்த்… இந்தா பிடிங்க ‘ஹெவி வெய்க்கிள்’ லைசென்சை!