கயல் ஆனந்தியின் ஆசை! நிறைவேற்றிய பெருமாள்!

ஆனந்த விகடன் வாசகர்களுக்கு தெரிந்திருக்கும் மாரி.செல்வராஜ் என்கிற எழுத்தாளனின் ஆளுமையும் ஈர்ப்பும். அவரே ஒரு படத்தை இயக்கினால் எப்படியிருக்கும் என்கிற ஆசை, அவரை படித்த வாசகர்களுக்கு இல்லாமலிருந்திருக்காது. ஆனந்த விகடன் தந்த அடையாளத்திற்கு முன்பே, அவர் இயக்குனர் ராமின் குழுவில் உதவி இயக்குனர். அப்புறமென்ன? ஆ.வி விமர்சனம் 60 மார்க்கை நோக்கி மீண்டும் செல்வதற்கான நேரம் கனிந்துவிட்டது.

இன்னும் சில வாரங்களில் திரைக்கு வரப்போகும் ‘பரியேறும் பெருமாள்’ மாரி.செல்வராஜின் அற்புதப் படைப்பாக விளங்கப்போகிறது. ‘படம் திரைக்கு வருவதற்கு முன்பே இப்படி சொல்வது வஞ்சகமில்லையா?’ என்று நினைக்கும் அன்பர்களுக்கு ஒரு தகவல். இப்படத்தை பார்த்த ஒரு சில சினிமா பிரமுகர்கள் தானே அப்படத்தின் பி.ஆர்.ஓ வாக மாறி, ‘நல்ல படம் நல்ல படம்’ என்று பரப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

ப.பெ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. படத் தயாரிப்பாளர் பா.ரஞ்சித், மாரி.செல்வராஜின் குருநாதர் இயக்குனர் ராம் தவிர்த்து டெக்னிஷியன்கள், ஹீரோ கதிர் மற்றும் ஹீரோயின் ஆனந்தி ஆகியோர் வந்திருந்தார்கள்.

ஏராளமான விஷயங்கள் குறித்து பேசிய மாரி.செல்வராஜ், ஹீரோயின் ஆனந்தி பற்றி பேசியதை சொன்னால் ரசிக்கும்படி இருக்கும். “நடிக்க வந்த கொஞ்ச நாள் வரைக்கும் ஆனந்திக்கு ஒண்ணுமே புரியல. ஆரம்பத்தில் சில நாட்கள் எங்க கிராமத்தில்தான் படப்பிடிப்பு நடந்திச்சு. படத்தில் நாலைந்து நாய்களும் நடிச்சுருக்கு. அதுங்க பாட்டுக்கு ஸ்பாட்ல ஆனந்தியை சுற்றி சுற்றி வரும். அப்பறம் நடிகர்கள் எப்படி நடிச்சு முடிச்சுட்டு வந்து மானிட்டார் பார்ப்பாங்களோ, அதே மாதிரி அந்த நாய்களும் வந்து மானிட்டர் பார்க்கும். எங்கள் கிராமத்து மனிதர்கள். அவங்க பேசுறது எல்லாமே அவங்களுக்கு புதுசா இருந்திச்சு.

“அப்பறம் போக போக இந்தப்படத்தின் முக்கியமான விஷயம் என்னன்னு புரிஞ்சுகிட்டாங்க. அடிக்கடி எங்கிட்ட வந்து ‘இவ்வளவு நல்ல படத்தில், நானே என் குரல்ல டப்பிங் பேசணும்‘னு சொல்லிகிட்டே இருந்தாங்க. அவங்க ஆசையை நிறைவேற்றியாச்சு. அவங்கதான் டப்பிங் பேசியிருக்காங்க” என்றார்.

பின் குறிப்பு- ஒரு நாய்க்கும் ஹீரோவுக்குமான உறவை சொல்லும் படமாக உருவாகியிருந்தாலும் கருப்பு நிறத்தை கவுரவக் குறைச்சலாக கருதும் சமூகத்தை விளாசும் படமாக இருக்கும் என்கிறார்கள். படத்தில் வரும் கருப்பி… என் கருப்பி என்ற பாடல் இப்பவே மரண ஹிட்!

Read previous post:
வில்லங்கம் பண்ணும் விநியோகஸ்தர்! தள்ளிப் போகிறதா விக்ரம் படம்?

Close