வில்லங்கம் பண்ணும் விநியோகஸ்தர்! தள்ளிப் போகிறதா விக்ரம் படம்?
பேய் பங்களாவில் குடியேறியவன், விபூதி வாங்கியே ஓட்டாண்டி ஆனது போலாகிவிட்டது தயாரிப்பாளர்களின் பிழைப்பு. தினந்தோறும் அச்சம். அதை வென்று முடிக்கவே ஆயுள் பலத்தையெல்லாம் அள்ளிக் கொட்டுகிறார்கள். அப்படியொரு அச்சத்தை கொடுத்து அலற விட்டுவிட்டார் ஆரா சினிமாஸ் மகேஷ். தமிழில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்த இவர், சாமி 2 படத்தையும் வாங்கியிருக்கிறார்.
சுமார் ஒன்பது கோடிக்கு இப்படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கியவர் பத்தரை கோடிக்கு விற்றுவிட்டாராம். அதில் பாதி பணத்தைக்கூட தயாரிப்பாளர் ஷிபு தமீமுக்கு கொடுக்கவில்லை. ஆனால் படத்தின் பிரமோஷனுக்கு தேவையான மெட்டீரியல்களை கேட்டு வந்திருக்கிறார். பேலன்ஸ் அமவுன்ட் வரட்டும். அதற்கப்புறம்தான் அதெல்லாம் என்று இவர் சொல்லி வர… போன வாரம் சிக்கினார் ஷிபு தமீம். ஒரு எம்.எல்.ஏ உதவியோடு இவரை மடக்கிய மகேஷ், அப்படியே அவரை வலித்துக் கொண்டு வடபழனி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போய்விட்டார்.
அங்கு 9 கோடிக்குப் போடப்பட்ட ஒப்பந்தத்தை மாற்றி 7 கோடி என்று எழுத பிளான். அவ்வளவு இக்கட்டிலும் முடியாது என்று இவர் மறுக்க ஒரே களேபரம். அதற்கப்புறம் தயாரிப்பாளர் சங்கத்தினர் வந்து ஷிபுவை மீட்டிருக்கிறார்கள்.
பஞ்சாயத்து தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்து வருகிறது. ‘முதலில் போலீஸ் கம்ளைன்ட்டை வாபஸ் வாங்குங்க’ என்று கூறி வருகிறார்களாம். ஆனால் ‘ரெண்டு கோடியை குறைக்க சொல்லுங்க. வாங்குறேன்’ என்கிறாராம் மகேஷ்.
படம் முழுக்க பறந்து பறந்து அடிக்கும் விக்ரம், இந்த விஷயத்தில் கப்சிப் கபர்தார் ஆகிவிட்டார்.
முக்கிய குறிப்பு- இந்த களேபரங்களால் செப்டம்பரில் வரவேண்டிய படம் இன்னும் தள்ளிப் போகும் போலிருக்கிறது.