30 வருஷம் கழித்து போன் செய்த விஜய்யின் அம்மா!
‘நிலவே மலரே’ என்கிற படம் வந்து முப்பது வருஷங்கள் ஆகிவிட்டன. அந்தப் படத்தின் ஹீரோ யார் தெரியுமா? தற்போது திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் ஹீரோவான ரகுமான்தான். விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படம் அது.
படப்பிடிப்பு நடைபெறும் நேரத்தில் எஸ்.ஏ.சி க்கு மதிய சாப்பாடு எடுத்து வருபவர் திருமதி ஷோபனாதான். விஜய்யும் அஜீத்தும் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தின் படப்பிடிப்பில் கூட, அஜீத்திற்கும் சேர்த்துதான் சாப்பாடு எடுத்து வருவாராம் இவர். அப்படிப்பட்டவர் எத்தனை நாட்கள் ரகுமானுக்காகவும் கேரியர் கொண்டு வந்திருப்பார்? அந்த நட்பும் அன்பும் முப்பது வருஷம் கழித்து இப்போது வெளிப்பட்டால் எப்படியிருக்கும்? அந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார் ரகுமான்.
“துருவங்கள் பதினாறு படத்தில் நான் நடித்ததை பாராட்டி நிறைய பேர் போன் பண்ணினாங்க. ஆனால் எனக்கு ஒரு போன்தான் ரொம்ப ஆச்சர்யத்தை கொடுத்திச்சு. சூப்பர் ஸ்டார் விஜய்யின் (நாங்க சொல்லலேப்பா… ரகுமான் சொன்னது) அம்மா போன் பண்ணியிருந்தாங்க. உன் நடிப்பு பிரமாதம்னு பாராட்டுனாங்க. முப்பது வருஷம் கழிச்சு என் நம்பரை தேடிக் கண்டுபிடிச்சு அவங்களை பேச வச்சது இந்த படம்தான். அதுக்காகவே இப்படத்தின் டைரக்டர் நரேன் கார்த்திக்குக்கு நன்றி சொல்லணும்” என்றார்.
21 வயசு பையன். எப்படி இந்த படத்தை எடுத்து… முடிச்சு… ரிலீஸ் பண்ணி… என்று சந்தேகப்பட்டேன். படத்தை பாதியில் நிறுத்திட்டு போயிடுவாங்களோன்னு கூட சந்தேகப்பட்டேன். ஆனால் என்னை வியக்க வச்சுட்டார் கார்த்திக் நரேன் என்று நெகிழ்ந்த ரகுமானுக்கு, ஒரு விஷயத்தில் மட்டும் பெரிய நிம்மதி. இவரது மூத்த மகள், ரகுமானின் பல படங்களில் இவரை வில்லனாகவே பார்த்துவிட்டார். ஒருமுறை, அப்பா நீங்க நல்லவரா? கெட்டவரா? என்று கூட கேட்டாராம். என் மகள் இந்தப்படத்தை பார்த்து என்னை பாராட்டுனதுதான் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி என்றார்.
மகிழ்ச்சி தொடரட்டும்…
https://youtu.be/AUCjKKIJoXY