பத்திரிகையாளர் எழுதிய கதையில் விஜய் சேதுபதி!
“ஹீரோன்னா அவருக்கு ஒரு டேஸ்ட் வேணாம்? என்னடா படம் இது? த்தூ….” என்று காறித்துப்பாத குறையாக எழுந்து ஓடுகிறார்கள் ரசிகர்கள். பல ஹீரோக்களின் படங்கள் இப்போது அப்படிதான் இருக்கிறது. சற்றே வித்தியாசமாக முயற்சிக்கும் கதையாசியர்களையோ, இயக்குனர்களையோ அவர்கள் ஜெயிக்கும் வரை மனுஷனாக கூட மதிப்பதில்லை இந்த சினிமா சமூகம்! ஒரு காக்கா முட்டை மணிகண்டன்கள் இல்லை… ஓராயிரம் மணிகண்டன்கள் கோடம்பாக்கத்தில் சுற்றி சுற்றி வருகிறார்கள். ஆனால் அவர்களையெல்லாம் மதித்து ஒரு குழுவை நியமித்து கூட கதை கேட்பதில்லை பல முன்னணி (?) ஹீரோக்கள்.
அந்த வகையில் விஜய் சேதுபதிக்கு லைட் ஹவுஸ் பக்கத்தில் அதைவிட பெரிய சிலை வைத்து கும்பிடலாம்! விதவிதமான கதைகளில் நடிக்க விரும்பும் சில நடிகர்களில் இவர் முக்கியமானவர். அதற்காக நேரம் ஒதுக்கி கதை கேட்கிறார். சமீபத்தில் இவரும் காக்கா முட்டை மணிகண்டனும் வியந்து கேட்ட கதைதான் தற்போது படப்பிடிப்பில் இருப்பது. இந்த கதையை எழுதியவர் டி.அருள்செழியன். விகடன் குழுமத்தில் பல்லாண்டுகளாக பணியாற்றி வந்தவர். அதற்கப்புறம் தொலைக்காட்சி ஊடகத்திலும் தன் திறமையை நிரூபித்தவர்.
இவரது கதையை கேட்ட மாத்திரத்தில் வியந்து உடனடியாக படமாக்க கிளம்பிவிட்டார்கள் மணிகண்டனும் விஜய் சேதுபதியும். “கதையை மட்டும்தானே கொடுக்கிறீங்க? அதுக்கு என்ன துட்டோ வாங்கிக்கோங்க. டைட்டில்ல உங்க பேர் வராது” என்று சொல்கிற அபாயகரமான சூழலும் இங்கு பல கதையாசிரியர்களுக்கு நேரும். அந்த அபாயத்தையும் இவர்கள் தரவில்லை அருள்செழியனுக்கு. முதல் பத்திரிகை குறிப்பிலேயே கதை- டி.அருள்செழியன் என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஒரு முக்கியமான விஷயம். இவ்வளவு அற்புதமான கதையை சொல்ல அவர் அலையாத ஹீரோ இல்லை. பார்க்காத மேனேஜர்கள் இல்லை. இங்குதான் குப்பை குழியில் விழுவதற்கு நேரம் ஒதுக்கும் ஹீரோக்கள் கதை கேட்க நேரம் ஒதுக்குவதில்லையே? அதிர்ஷ்டம் இப்போது விஜய் சேதுபதி பக்கம்.
அசத்துங்க அண்ணனுங்களா…!