நாலரை கோடி கடனை நானே ஏற்றுக் கொள்கிறேன்! விஜய்சேதுபதி பெருந்தன்மையால் தப்பிய 96
முதலில் நாம் வெளியிட்ட செய்தி, ‘ஐயய்யோ… படம் இன்னைக்கு ரிலீஸ் இல்லையா?’ என்கிற அச்சத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டது. நல்லவேளை… ‘சேத்துல விழுந்தாலும் சிவனே, ஆத்துல விழுந்தாலும் அவனே’ன்னு தன்னை நம்பிய அத்தனை பேரையும் அரவணைத்து காப்பாற்றிவிட்டார் விஜய் சேதுபதி.
‘தனக்கு சேர வேண்டிய மூன்றரை கோடியை எண்ணி வச்சுட்டு படத்தை ரிலீஸ் பண்ணிக்கோங்க’ என்று கூறிவிட்டார் விஷால். அவரைத்தவிர படத்திற்கு மேலும் ஒரு கோடி பிரச்சனை. நேற்றிரவிலிருந்தே பேச ஆரம்பித்தவர்கள் காலை மணி 10.30 மணி வரைக்கும் பஞ்சாயத்தை இழுபறியாக்கிக் கொண்டிருக்க, 96 படத்தின் மீதிருக்கும் பெரும் காதலால் மொத்த கடனையும் தானே ஏற்றுக் கொள்வதாக கூறி பிரச்சனையை முடித்து வைத்திருக்கிறார் மக்கள் செல்வன்.
‘என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ, இடுப்புல முடிஞ்சதை அவிழ்க்க மாட்டேன்’ என்று அடம் பிடிக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில், மனம் குளிர வைத்துவிட்டார் வி.சே. காலம் அவரை இன்னும் உயரே கொண்டுபோய் வைக்கட்டும்.
துரும்பை கூட கிள்ளிப் போடாதவர்கள் கரும்புத்தோட்டத்தையே கடித்துத் தின்ன கிளம்புகிற காலத்தில், கரும்பாய் விழுந்து இனிப்பாய் முளைத்திருக்கிறார் விஜய்சேதுபதி. பாராட்ட வார்த்தைகள் ஏது?