விஜய் சேதுபதி மட்டும்தான் இப்படியிருக்க முடியும்! ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகள் வியப்பு!
கழுதை பாலிலேயே குளித்த விக்டோரியா மகாராணி தமிழ்சினிமா ஷுட்டிங்குகளுக்கு வந்தால் அவரே மூர்ச்சையாகி ப்ளாட் ஆனாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால், அதையெல்லாம் தாண்டிய அலட்டல் இருக்கும் சில முன்னணி ஸ்டார்களிடம். கார் கதவை டைரக்டர் ஓடி வந்து திறந்துவிட வேண்டும் என்று நினைக்கும் ஹீரோக்களும், ‘‘நான் வரும்போது வணக்கமே வைக்கலயே அவன். இன்னைக்கு ஷுட்டிங் கேன்சேல்” என்று ஓடிப்போன ஹீரோக்களும் நிறைந்த ஏரியா இது. இங்கு எல்லா அலட்டல்களையும் வைத்த கண் வாங்காமல் உள் வாங்கும் ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகளுக்கு விஜய் சேதுபதி மட்டும் சற்று விசித்திரமாக இருப்பார். ஏன்? விஷயம் அப்படி!
உடன் நடிக்கும் ஆர்ட்டிஸ்டுகளிடம் பேசினால் கூட நம் அந்தஸ்து என்னாகும் என்று நினைப்பவர்களுக்கு மத்தியில், கூட்டத்தில் பின்னால் நிற்கும் சாதாரண தினக்கூலி நடிகர் நடிகைகளிடம் அவர் பழகும் விதம் சொல்லில் அடங்கா விசித்திரம். ‘ஆண்டவன் கட்டளை’ படப்பிடிப்பில் நடந்த சம்பவம் இது. ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகளில் சிலர், ஷாட் இல்லாத நேரத்தில் முந்தானையில் முடிந்து வைத்திருந்த கடை முறுக்கு மற்றும் இலந்தை பழ சமாச்சாரங்களை எடுத்து கடித்துக் கொண்டிருந்தார்களாம். சட்டென்று அவர்களை நெருங்கி வந்த விஜய் சேதுபதி, “நானும் ரொம்ப நேரமா பார்க்குறேன். முந்தானையிலிருந்து எடுத்து வச்சு நீங்க மட்டும் தின்னுறீங்க, எனக்கு இல்லையா?” என்று உரிமையோடு அந்த முறுக்கை வாங்கி கடிக்க, பதறிப் போனார்களாம் அவர்கள்.
அவர் எவ்ளோ பெரிய நடிகர். நம்மகிட்ட பேசுறதே பெரிய விஷயம். இதுல நம்ம வச்சுருக்கிற முறுக்கை கூட பேதம் பார்க்காமல் வாங்கி தின்னுகிறாரே… என்று தவித்துப் போனார்களாம். “அவர் அப்படிதான். இவ்வளவு உயரத்திற்கு வந்த பின்பும் மாறாமலிருப்பதுதான் அவர் பாணி” என்கிறார் படப்பிடிப்பில் பங்கு கொண்ட ஒரு ஊழியர்.
இப்படியே இருங்க விஜய் சேதுபதி!