விக்ரம் வேதா விமர்சனம்

ஒரு ஜோடி டப்பா டைரக்டர்(ஸ்) ‘அடேங்கப்பா’ ஆனதுதான் இந்த படத்தின் மேஜிக். மார்க்கெட்டில் மந்திர சாவிகளாக இருக்கும் விஜய் சேதுபதியும், மாதவனும் சேர்ந்து திறந்த ‘பொக்கிஷம்’ விக்ரம் வேதா! ஆனாலும், திரைக்கதை என்கிற கார்ப்பெட்டில் எலி வாயை வைத்த மார்க்குகள் ஆங்காங்கே ஓட்டைகளாக அகப்பட்டாலும், எல்லாவற்றையும் மூடி தந்திரம் காட்டுகிறது இவ்விருவரது நடிப்பு. அதைவிட பெரும் ஸ்டைல் இக்கதை சொல்லப்பட்ட விதம்!

என்க்கவுன்ட்டர் போலீஸ் ஆபிசர் மாதவன், தன் சகாக்களோடு தாதா விஜய் சேதுபதியை போட்டுத்தள்ள கிளம்புகிறார். நடக்கும் ‘லப் டப்’ சூடுகளில் அகப்பட்டுக் கொண்டு அல்பாயுசில் உயிரை போக்கிக் கொள்கிறான் தாதாவின் அப்பாவித் தம்பி கதிர். அடுத்த காட்சியில் மீண்டும் பெரும் படையோடு தாதாவை தேடிக் கிளம்பும் மாதவன் முன் அதே தாதா ஆஜராக, வேதாளம் கதை சொல்கிறது. விக்ரமாதித்யன் கேட்கிறான். அதாவது விஜய் சேதுபதி ஒரு கதை சொல்ல, மாதவன் கேட்கிறார். “சார்… இந்த கதையின் என்ட், குத்தியவனை கொல்லணுமா, குத்த சொல்ல சொன்னான் பாரு, அவனைக் கொல்லணுமா?” என்று விஜய் சேதுபதி கேட்கும் கேள்விக்கு, விக்ர‘மாதவன்’ சொல்லும் பதிலை வைத்து அடுத்தடுத்த காட்சிகள் நகர, தியேட்டரே லப் டப் திகிலோடு அமர்ந்திருக்கிறது. பார்ட் 2 வுக்கு லீட் கொடுத்து கதையை முடித்த விதத்தில் புஷ்கர் காயத்ரியின் நம்பிக்கை பட்டொளி வீசுகிறது.

வரட்டும்… பார்ட் 23 வந்தால் கூட இந்த காம்பினேஷனை ரசிக்கலாம்தான்!

இனி எவரும் சீண்ட முடியாத உயரத்திற்கு போய்விட்டார் விஜய் சேதுபதி. அப்படியொரு அசால்ட் நடிப்பு. அந்த முதல் காட்சியில் நிதான நடை நடந்து, அவ்வளவு போலீஸ் கூட்டத்தையும் அலட்சியமாக கடந்து, மாதவன் முன் நின்று துப்பாக்கி தூக்கும் அந்த திமிர்…. தியேட்டரையே கதி கலங்க விடுகிறது. இன்னொரு காட்சியில் போலீஸ் துரத்த, ஹவுசிங் போர்டு கட்டிடங்களின் மேல் நிதானமாக நடக்கும் அந்த அலட்சியம் தெறி மாஸ். இப்படி படம் முழுக்க எதிரில் நிற்கும் மாதவன் என்ற சிங்கத்தையே தன் கடைவாயில் போட்டு மென்று விட்டு முன்னேறுகிறார் விஜய் சேதுபதி.

மாதவன் செய்யும் அந்த முதல் என்கவுன்ட்டர் அட்டகாசம். ஏதோ, குடும்பத்தோடு ரெஸ்ட்ராரென்ட்டுக்கு போனது போல அவ்வளவு என்ஜாய் பண்ணுகிறார் அந்த என்கவுன்ட்டரை. அதற்கப்புறம் மெல்ல, நாம் தப்பு பண்ணிட்டமோ என்று சுருங்கி நிறைய யோசித்து யோசித்து ஆக்ஷன் எடுக்கும் போது, அந்த வித்தியாசத்தை அவ்வளவு பிரமாதமாக வெளிப்படுத்துகிறார். இவருக்கும் ஷ்ரத்தாவுக்குமான அந்த ரொமான்ஸ்தான், ஊறுகாய் பானையில் தயிரை கொட்டியது போல, அவ்வளவு புளிப்பு.

ஷ்ரத்தாவின் பிரசன்ட்டேஷனை இப்படிதான் சொல்லணும். “வேற பொண்ணா கிடைக்கல உங்களுக்கு?”

அந்த அழுக்கு கூட்டத்தில் பளிச்சென படிக்கும் கதிர், குற்ற பின்னணியில் ஒரு நல்லவனாக வளர்கிறார். சேறோடு சேர்ந்த சந்தனமாக முடிந்துவிடுகிறது அவரது கதை. தன்னைவிட இரண்டு வயசு மூத்தவரான வரலட்சுமியை இவர் லவ் பண்ணும் காட்சிகளில் அப்படியொரு ரசனை. “எந்த ஆம்பளையும் கோவப்படுற தன் பொண்டாட்டி முன்னால…” என்று ஆரம்பிக்கும் அந்த டயலாக்கும், அந்த காட்சியும் ஐயே…

தன் தம்பியின் கையில் சுட சுட புள்ளி போட்டவனை ஏன் கடைசிவரை தன்னுடனேயே வைத்திருக்க வேண்டும் விஜய் சேதுபதி? அங்கேயே பழிவாங்கும் கதையின் முதல் முடிச்சு பல் இளிக்கிறதே டைரக்டர்ஸ்? அப்புறம் ஒரு நல்ல ஆபிசரை சுற்றி பணத்தாசை பிடித்த கூட்டம் இருக்கும்தான். ஆனால் அதை செயற்கை ஒழுகும் சினிமாட்டிக் சீனாக வெளிப்படுத்தி படத்தின் இயல்பு தன்மையையே நாசப்படுத்திட்டீங்களே கூட்டாளி?

படத்தில் நடித்த எல்லாருமே வடசென்னையில் ‘வூடுகட்டி’ வாழ்ந்திருக்கிறார்கள். முக்கியமாக போலீஸ் ஆபிசர் பிரேம். பலே நடிப்பு. பரிதாப முடிவு.

பி.எஸ்.வினோத்தின் ஆக்ஷன் மூடுக்கான டோர்ன், அவ்வப்போது ஆயாசத்தை ஏற்படுத்துவதையும் குறிப்பிட்டாக வேண்டும். அதே நேரத்தில் ஒவ்வொரு காட்சியிலும் வைக்கப்பட்ட கோணங்களின் தனி அழகை சொல்லாமலிருக்க முடியாது.

விஜய் சேதுபதி சொல்லும் அந்த மூன்றாவது கதையின் நீளத்தை குறைத்திருக்கலாம். எங்க போனீங்க எடிட்டர்?

சாம் சி.எஸ்-ன் இசையில் அந்த குத்துப்பாட்டு பிரமாதம். பின்னணி இசை பரபரப்பை கூட்டுகிறது.

தாதா கதையில் இந்த வேதா(ளம்) புதுசு. அந்த வேதாளத்திற்கே இந்த தாதா புதுசு.

-ஆர்.எஸ்.அந்தணன்

https://youtu.be/BWuJz7ns6dg

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பாதி பேட்டியில் வெளிநடப்பு! தனுஷை டென்ஷனாக்கிய சேனல்!

Close