விஜய் ஆன்ட்டனிக்கு ஒரு நீதி! தனுஷுக்கு வேறொரு நீதி! சரண்டர் ஆகுமா சங்கம்?
மாமியாருக்கும் மருமகளுக்கும் ஒரே சைஸ் குரல் என்றால், வீடே சங்கீதம்தான். ஆனால் அதெல்லாம் நடக்குமா? தயாரிப்பாளர் சங்கத்தின் கோபப் பார்வையும் கிட்டதட்ட அப்படியொரு ‘ஒரே குரல்’ ஃபார்முலாவுக்குள் அடங்கி ஒடுங்கிவிடும் போலிருக்கிறது. ‘திமிரு புடிச்சவன்’ படத்தை தயாரிப்பாளர் சங்கம் ஒதுக்கிய தேதியில் ரிலீஸ் செய்யாமல் வேறொரு தேதியில் ரிலீஸ் செய்தார் விஜய் ஆன்ட்டனி. இதனால் சிறு படங்களான காற்றின்மொழியும், உத்தரவு மகாராஜாவும் பெரிய நஷ்டத்திற்கு ஆளாகின.
அதற்கப்புறம் கடுப்பான தயாரிப்பாளர் சங்கம், விஜய் ஆன்ட்டனி நடித்து வரும் படத்தின் ஷுட்டிங்கை அதிரடியாக நிறுத்திவிட்டது. இந்த நேரத்தில்தான் தனுஷும் விஜய் ஆன்ட்டனி ரூட்டில் போக ஆரம்பித்திருக்கிறார். தனது மாரி2 படத்தை 21 ந் தேதியே ரிலீஸ் செய்வேன் என்கிறார். கிறிஸ்துமஸ் விடுமுறையை குறிவைத்துதான் இந்த களேபரம். இதே தேதியில் ஜெயம்ரவியின் அடங்க மறு, விஷாலே ரிலீஸ் செய்யும் டப்பிங் படமான கே.ஜி.எஃ ஆகிய படங்களும் வருகின்றன. அதனால் மாரி2 வுக்கு தேதியில்லை என்கிறது சங்கம். ஆனால் ‘வருவேன்… வந்தே தீருவேன்’ என்கிறார் மாவீரன் மாரி.
‘மீறி வந்தே… ரெட்டுதான்’ என்று கழுத்தில் கை வைக்க அஞ்சுகிறதாம் சங்கம். ஏன்? தனுஷ் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தை தயாரிப்பவர் கலைப்புலி தாணு. ரெட்… ஒயிட், எல்லோ, என்று ஜீபூம்பா கலர்களை வைத்துக் கொண்டு அவரை மிரட்ட முடியாது. மீறி தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை நிறுத்துகிறோம் என்று சங்கம் சொன்னால், அதை நொடியில் பிளந்துவிடுகிற ஆற்றலும் கொண்டவர் தாணு.
எதற்கு வம்பு? கீழே விழுந்தாலும் தாவங்கட்டையில் பிளாஸ்திரி போட வேண்டாம் என்று முடிவெடுத்த தயாரிப்பாளர் சங்கம், இன்று அனைத்து சங்கங்களையும் அழைத்து மீட்டிங் போட்டிருக்கிறது. அங்கே எடுக்கப்படும் முடிவுகள் இப்படியும் இருக்கலாம் என்கிறார்கள் இப்பவே.
1. விஜய் ஆன்ட்டனிக்கு மன்னிப்பு. தடை நீக்கம்.
2. தனுஷ் படத்தை 21 ந் தேதி வெளியிட அனுமதி.
விஜய் ஆன்ட்டனியை காப்பாற்றிய தனுஷ் என்றும் இந்த செய்திக்கு தலைப்பு வைத்துக் கொள்ளலாம். எல்லாம் உங்க சவுரியம்தான் வாசகர்களே…