நடிகர் சங்க செயலாளர் பதவி! விலகும் ஐடியாவில் விஷால்?
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டேயிருக்கிறது. நெருங்க நெருங்க பீவரும், அதன் கொதிப்பும் அதிகமாகிக் கொண்டே போவதில் வியப்பில்லை. காரணம்…? விஷால் இங்கேயும் தன் மூக்கை நுழைத்ததுதான். “அதெப்படி? உனக்குன்னு நடிகர் சங்கம் இருக்கு. அங்க போய் ஆட வேண்டியதானே? இங்கே ஏன்பா உன் ஆக்ஷன் அவதாரம்?” என்றெல்லாம் முணுமுணுப்புகள் எழுந்தாலும், முதலில் சரி பண்ண வேண்டிய இடமே இதுதான் என்று முண்டா தட்டிக் கொண்டிருக்கிறார் விஷால்.
சினிமா வியாபாரத்திலிருந்து, விளம்பரம் வரைக்கும் முறைபடுத்த வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருப்பதால், அவரும் ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் உள்ளே நுழைந்துவிட்டார். ஆனால் குஷ்புவை தனது அணியில் தலைவராக அறிவித்தவர், தான் மட்டும் ஒதுங்கியிருந்தே இயக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த நிலை மாறும் என்கிறது கோடம்பாக்கம். விஷாலை இடை நீக்கம் செய்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம். தனது வாய் கொழுப்புக்காக மன்னிப்பும் கேட்டுவிட்டார் அவர். இருந்தாலும், நீதிமன்றம் இன்னும் முழுமையான தீர்ப்பை வழங்காத நிலையில், சற்று பின்னாலேயே நின்று கவனித்துக் கொண்டிருக்கும் விஷால், தடை தளர்ந்த பிறகு வேகமாக முன்னுக்கு வரப்போகிறாராம்.
தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் பதவிக்கும் போட்டியிடப் போகிறாராம். ஒரே நேரத்தில் எப்படி இரண்டு முக்கிய சங்கங்களில் பொறுப்பில் நீடிக்க முடியும்? அங்குதான் திருப்பம் நிகழப் போகிறது. நடிகர் சங்கத்தின் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் இருக்கிறாராம் விஷால்.
சரத்குமார், ராதாரவி என்ற இருபெரும் சிங்கங்களை வென்று பெற்ற பதவியை அவ்வளவு எளிதாக ராஜினாமா செய்வாரா? விசாரித்தால், அதுதான் அவரது முடிவு என்கிறார்கள் விஷாலுக்கு அருகிலிருக்கும் சிலர்.
அரை பரீட்சை எழுதறதுக்கு மட்டும்தான் அவ்ளோ பில்டப்பா விஷால்?
https://youtu.be/gCOG88yFd1k