முதுகில் குத்திய தியேட்டர்காரர்கள்! அதிரடி ஆக்ஷனில் குதித்த விஷால்!


சினிமாவில் எழுதப்படும் கொடூர கதைகளை விட, நிஜத்தில் படு பயங்கர சகுனிகளாகவும், கூனிகளாகவும் இருப்பார்கள் சினிமாக்காரர்கள். ஏமாற்று, துரோகம், நம்பிக்கை மோசம், இன்னபிற 420 ஐட்டங்களுக்கு பெயர் போன கோடம்பாக்கத்தில், விஷாலின் முதுகில் சிலர் துவையல் அரைத்த கதைதான் இது.

ஏற்கனவே நைந்து போயிருக்கும் சினிமாவை எப்படி காப்பாற்றுவது என்று மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். தியேட்டருக்கு மக்கள் வராமல் போவதற்கான முதல் காரணமே கட்டணக் கொள்ளைதான். ஒரு குடும்பம் சினிமாவுக்கு போனால், ஒரு மாச சம்பளத்தை எண்ணி வைக்கணும் என்கிற நிலைமை. போதும் போதாதற்கு மத்திய மாநில அரசுகளின் இரட்டை வரியும் சேர்ந்து கொள்ள, போராட்டத்தில் குதித்தன சங்கங்கள்.

விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து அமைச்சர்களை சந்தித்தது திரையரங்க உரிமையாளர்கள் அமைப்பு. எப்படியோ பேசி பேசி டிக்கெட் விலையை உயர்த்திக் கொள்ள அரசிடம் அனுமதி வாங்கிவிட்டார்கள். மாநில அரசின் கேளிக்கை வரிதான் இப்போது ஒரே பிரச்சனை. அதுவரைக்கும் புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை என்று விஷால் அறிவித்துவிட…. நேற்றுதான் ஒரு புதிய சகுனி வேலை நடந்திருக்கிறது.

திரையரங்க உரிமையாளர் சங்கங்களின் முக்கியஸ்தர்களான இருவர், அமைச்சர் வேலுமணியை சந்தித்தார்களாம். நீங்க 10 பர்சென்ட் வரைக்கும் கூட கேளிக்கை வரி போட்டுக்கோங்க. தியேட்டர்ல நாங்க நிர்ணயிக்கிற விலையை கண்டுக்காதீங்க. இந்த விஷால்தான் எல்லாத்துக்கும் முட்டுக்கட்டையா இருக்கார் என்று குறை சொல்லிவிட்டு நகர, அடுத்த நிமிஷமே தகவல் விஷால் காதுக்கு வந்ததாம்.

அட நல்லவங்களா? எல்லாருக்கும் சேர்த்துதானே போராடிட்டு இருக்கோம் என்று நினைத்த விஷால், இவிங்க கொட்டத்தை முதல்ல அடக்கணும் என்று முடிவெடுத்திருக்கிறார்.

இனிமேல் தியேட்டர்களில் அம்மா குடிநீர் பாட்டில்தான் விற்கணும். அதுவும் அதே விலையில். அதுமட்டுமல்ல… அரசு நிர்ணயித்துள்ள டிக்கெட் ரேட்டான 20 ரூபாய், 50 ரூபாய், 70 ரூபாயை தாண்டி யாரும் டிக்கெட் விற்கக்கூடாது. ஆந்திர மாநிலத்தில் இருப்பது போல பார்க்கிங் கட்டணத்தை அறவே ஒழிக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாத தியேட்டர்கள் மீது மக்கள் அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்று அறிவித்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல… நாளையிலிருந்து மூன்று நாட்களுக்கு இதை நாளிதழ்களில் விளம்பரப்படுத்தவும் இருக்கிறாராம்.

தியேட்டர் அதிபர்கள், தயாரிப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதலால் சினிமா இன்டஸ்ட்ரி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆக மொத்தம் இந்த தீபாவளி, நமுத்துப் போய்தான் விடியும் போலிருக்கிறது!

ஒரே மெர்சலாயிருக்கேப்பா…?

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Caste Protects Santhanam !!

https://youtu.be/cvuYtolErRE

Close