இனிமே இப்படிதான்! விஷால் புது முடிவு!
பொன்மானைத் தேடி பூவோடு வந்தாலும், பொய் மானை காட்டி அல்லாட விடுவதில் சினிமாவுக்கு நிகர் சினிமாதான்! பதவிக்கு வந்த கையோடு கோடம்பாக்கத்தை கூட்டி பெருக்கி அள்ளிவிடலாம் என்று கணக்கு போட்டு வந்த விஷாலுக்கு, கண்ட இடத்திலும் கொசுக்கடி! நல்லது செய்யதான் நினைச்சேன். ஆனால் சொந்த விரல்களே கண்ணை குத்துதே என்று கவலைப்படுகிற அளவுக்கு புரட்டியெடுத்தார்கள் வில்லன்கள்.
நடிகர் சங்க கட்டிடத்திற்கு முதல் செங்கல்லை எடுத்து வைப்பதற்குள் சில்லு சில்லாக பெயர்ந்து விட்டார் விஷால். கட்டிடம் முழுமையாகி விட்டால் மொத்த பெயரும் விஷாலுக்கு வந்துவிடுமே என்று கருதிய ஒரு பிரிவு, ஒவ்வொரு செங்கல்லாக உருவாத குறைதான். நடிகர் சங்கத்தில் அப்படி என்றால், தயாரிப்பாளர் சங்கத்தில் வேறு மாதிரி குடைச்சல்கள். அந்த எரிச்சலில் சங்கத்திலிருந்து ஏழெட்டு கோடிகளை அள்ளி தெரு பிள்ளையாருக்கு உடைத்துவிட்டு நடையை கட்டி விட்டார் விஷால். ‘நான் என்ன என் பாக்கெட்லயா போட்டுட்டு போனேன். உறுப்பினர்களுக்குதானே கொடுத்தேன். தீர்ப்பு அவ்ளோதான்’ என்கிறாராம் கூலாக.
ஓகே… விஷாலின் லேட்டஸ்ட் அவதாரம் என்ன? ஒரு மண்ணாங்கட்டியும் இல்லையாம். ‘இனிமே எலக்ஷன், பொதுசேவைன்னு இறங்குனா என் புத்தியே என்னை கிள்ளி விட்ரும்’ என்கிற அளவுக்கு தெளிவாகிவிட்டார் மனுஷன்.
‘யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? இனிமே நான் கூல் பாய்’ என்று பேச ஆரம்பித்திருக்கிறாராம்.
ஆத்தோட போன கோவணம்… அதுமேல இனி எதுக்கு தனி கவனம்? விடுங்க விஷால்!