நயன்தாராவுக்கு விவேக் சாட்டையடி! பொது மேடையில் பரபரப்பு!
பொதுவாகவே விவேக் அப்படிப்பட்ட ஆள் இல்லை! பேச்சில் நகைச்சுவை இருக்குமே தவிர, கூர் தீட்டிய முள் இருக்காது. ஆனால் சென்னையில் நடந்த ‘காஷ்மோரா’ படத்தின் பிரஸ்மீட்டில், சற்று அதிகமாகவே பக்கோடா வறுத்தார். ஐயோ பாவம் நயன்தாரா. அந்த பக்கோடாவே நயன்தான்!
‘காஷ்மோரா’ படத்தில் கார்த்தியின் அப்பாவாக நடித்திருக்கிறார் விவேக். அதுமட்டுமல்ல, இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்வில் விவேக்குக்கு இது முக்கியமான படம். அவர் பேசமாட்டார். ஆனால் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள் என்கிற அளவுக்கு அவரது ரீ என்ட்ரிக்கு பாதை போட்டுக் கொடுத்துள்ள படம். காஷ்மோராவில் நயன்தாராவும் ஒரு முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். (ஹீரோயின் நயன்தாராதான் என்றால், ஸ்ரீ திவ்யா அடிக்கவே வந்துவிடுவார். அந்தளவுக்கு நயன்தாராவின் ரோல் கம்மி)
போகட்டும்… விவேக் பேசியது என்ன?
“நியாயமா இந்த நிகழ்ச்சிக்கு நயன்தாரா வந்திருக்கணும். ஆனா வரலே. ஏன்னு கேட்டா எல்லாரும் வாயடைச்சுப் போற மாதிரி ஒரு பதிலை வச்சுருக்கார். அதாவது நான் நடிச்ச படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகிட்டா, அந்த படம் சரியா போக மாட்டேங்குது என்பதுதான் அந்த பதில். அப்புறம் யார்தான் அவர் வரணும்னு நினைப்பாங்க? இது நல்ல ஐடியாதான். அப்படியே நயன்தாரா இன்னொன்னும் செஞ்சுருக்கலாம். நான் கடைசி பேமென்ட் வாங்குனா அந்தப்படம் சரியா போக மாட்டேங்குது. அதனால் கடைசி பேமென்ட் வேணாம்னு சொல்லிட்டா எவ்வளவு நல்லாயிருக்கும்?”
இப்படி விவேக் பேச்சில் காரம் தூக்கலாகிக் கொண்டே போக, பிரஸ்சுக்கே பெரும் குழப்பம். அப்புறம்தான் தெரிந்தது. படத்தில் நயன்தாராவுக்கும் இவருக்குமான காம்பினேஷன் காட்சிகள் ஒன்று கூட இல்லை. அது மட்டுமல்ல, அப்படி இருக்கக் கூடிய ஒன்றிரண்டு காட்சிகளையும் கிராபிக்ஸ் மூலம் தனித்தனியாக படமாக்கிவிட்டார்களாம்.
சின்னக் கலைவாணரை இப்படி சினம் கொண்ட ‘கவலை’வாணர் ஆக்கிட்டீங்களேப்பா?
To listen Audio Click below:-