இளையராஜா போன் பண்ணி என்ன சொன்னார்? ஃபீல் ஆகும் பிரகாஷ்ராஜ்!
கம்ப்யூட்டருக்குள் இசை வந்த பின், இரைச்சல் மட்டுமே பாட்டு என்றாகிவிட்டது. இந்த நிலையில் இன்னும் ஆர்மோனியப் பொட்டியும், லைவ் ரெகார்டிங்கும் குத்துயிரும் குலை உயிருமாக வாழ்வதெல்லாம் இளையராஜா போன்ற ஜீனியஸ்களால்தான். அதிலும், ‘வயது அறுபது. மாநிறம்’ படம் ராஜாவின் மற்றுமொரு வித்தையாக இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது அப்படத்தின் ட்ரெய்லர்!
இன்று பிரசாத் லேபில் மிக மிக எளிமையாக நடந்தது இப்படத்தின் பிரஸ்மீட். இளையராஜா வரவில்லை என்றாலும், பிரகாஷ்ராஜ் இளையராஜாவின் புகழ் பாடி நிகழ்ச்சிக்கு ருசி கூட்டினார்.
இந்தக்கதையை கன்னடத்தில் கேட்டவுடனேயே அதன் தமிழ் ரைட்ஸ்சை வாங்கிவிட்டேன். பொருத்தமான இயக்குனர் ராதாமோகன்தான். நான் அவரிடம் சொன்னபின் இந்த கதைக்காக அவர் அலைந்து திரிய ஆரம்பித்துவிட்டார் என்றார் பிரகாஷ்ராஜ்.
மனதை பிசையும் உள்ளடக்கம் கொண்ட கதைகளுக்கு பொருத்தம் இளையராஜாவின் பின்னணி இசை மட்டும்தானே? பொருத்தமாக பண்ணைபுர ராஜாவை தேடிப் போய்விட்டார்கள்.
படத்தை பார்த்த ராஜா, “எப்பய்யா படத்தை கொண்டு வந்து தரப்போறீங்க? நான் பேக்ரவுண்ட் இசைக்க தயாராகிட்டேன்” என்று கேட்டுக் கொண்டே இருந்தாராம். பிரகாஷ்ராஜின் டப்பிங் முடியாத சூழ்நிலையில், அவருக்காக படத்தின் இயக்குனர் ராதாமோகனே டப்பிங் பேசி படத்தை முடித்து இளையராஜாவிடம் கொடுத்துவிட்டார். அதற்கப்புறம் நடந்ததெல்லாம் மேஜிக்.
எந்தளவுக்கு இந்த படத்தோடு இளையராஜா ஒன்றிப்போனார் தெரியுமா? திருவண்ணாமலைக்கு சாமி கும்பிடப் போனவர், திடீரென பிரகாஷ்ராஜுக்கு போன் அடித்து, “அந்த ஆறாவது ரீல்ல நீ பேசுற வசனத்தை இன்னும் கொஞ்சம் ஹஸ்கி வாய்ஸ்ல பேசுனா நல்லாயிருக்கும்” என்று சொல்கிற அளவுக்கு!
இந்த சம்பவத்தை சொல்லி சொல்லி மாய்ந்து போனார் பிரகாஷ்ராஜ்.
விக்ரம் பிரபு, இந்துஜா நடித்திருக்கும் இப்படம் வயதானவர்களுக்கு வரும் ஞாபக மறதி நோய் சம்பந்தப்பட்ட கதை. அவ்வளவு பேரும் அப்பாக்களை நினைத்து அழ வேண்டி வரலாம்!