விஜய் இல்லேன்னா புதுமுகம்! ரிஸ்க் எடுத்த சுசீந்திரன்!
ஆசை – கல்யாணத்துக்குப் பிறகும் விடாது! இந்த தத்துவத்தை நிரூபிக்கப் போகும் நாள் ‘ஜீனியஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தினமாகதான் இருக்கும். யெஸ்… இப்படத்தின் ஹீரோ ரோஷன், சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்தவர். அதற்கப்புறம் இது வேலைக்காகாது என்ற முடிவோடு ஊருக்கு திரும்பி விட்டார். திருமணம் குடும்பம் பிசினஸ் என்று நாட்கள் 24 பெருக்கல் 7 ஆகிவிட்டது.
அதற்கப்புறம் நடந்ததுதான் ஆச்சர்யம். தன் மனைவியிடம் தனது சினிமா கனவு பற்றி ரோஷன் சொல்ல, திருமதியின் முழு சம்மதத்தோடு மீண்டும் சென்னைக்கு வந்திருக்கிறார். இயக்குனர் சுசீந்திரனை சந்தித்து ‘முதல்’ போட, அவரது அர்த்தபூர்வமான இயக்கத்தில் உருவாகிவிட்டது ‘ஜீனியஸ்’.
இந்த ஜீனியஸ் கதையும் சும்மாயில்லை. இயக்குனர் விஜய், அல்லு அர்ஜுன், ஜெயம் ரவி மாதிரியான ஹீரோக்களிடம் சொல்லப்பட்டு, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று கர்சீப் போட்டு வைக்கப்பட்ட கதை.
இவ்வளவு விஷயங்களையும் சொல்லி இந்த ஜீனியஸ் கதையின் பூர்வாங்கத்தை புட்டு புட்டு வைத்தார் சுசீந்திரன்.
வெண்ணிலா கபடிக்குழுவில் ஆரம்பித்து, சுசீந்திரன் இயக்கிய அநேக படங்கள் சொசைட்டிக்கு தேவையான படங்கள். ஒன்றிரண்டு கண்ணாமூச்சி காட்டினாலும், தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் சுசீந்திரன். அவரது இயக்கத்தில் ஒரு புதுமுகம் ஹீரோவாக நடிக்கிற படம் இது.
இந்தியில் வெளிவந்த பி.கே என்ற படத்தின் சாயல் இப்படத்தில் இருக்கலாம் என்று கூறியிருக்கிறார் சுசீந்திரன்.
எவ்வித காம்ப்ரமைசுக்கும் இடமில்லாமல் எடுத்திருப்பார் என்று நம்புவோமாக!