மாறி மாறி கொடும்பாவி எரிப்பு! சூடு பறக்கும் ரஜினி சரத் மோதல்! பின்னணி இதுதான்

‘தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ என்று ரஜினி சூடாக அரசியல் பேசிய சில வருஷங்களுக்கு பிறகுதான் சரத்குமார் அரசியல் கட்சியை துவங்கினார். இருவருமே அரசியலை பொருத்தவரை அதிக ஸ்கோர் எடுக்கவில்லை. இவருக்கு வெறும் எம்.எல்.ஏ பதவியை கொடுத்ததோடு நிறுத்திக் கொண்டது அரசியல். அவருக்கு அதுவும் இல்லை. சரத் அளவுக்கு தைரியமாக ஒரு முடிவை எடுக்காமலே காலத்தை கடத்திவிட்டார் ரஜினி.

அவர் அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா என்கிற கேள்விதான் உலகத்தின் மிக மிக பழமையான கேள்வியாக இருக்க முடியும். ஒருவேளை சிந்து சமவெளி கல்வெட்டுகளில் எங்காவது இந்த கேள்வி இருந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. இந்த சவசவப்பான ரப்பர் சூழ்நிலையில், தவிர்க்க முடியாத கேள்வியாக மீண்டும் அது உலவ ஆரம்பித்திருக்கிறது. வழக்கம் போல இதற்கும் காரணம் ரஜினியின் பேச்சுதான். துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய ரஜினி, தமிழக அரசியல் இப்போது அசாதாரண சூழ்நிலையில் இருப்பதாக கூறிவிட்டார்.

இதற்கு பதிலளித்த சரத், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று கூற, அதற்கப்புறம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ரஜினி பற்றி பதிலளிக்கும்படி ஆகிவிட்டது. ரஜினி அரசியலுக்கு வருவார் போலிருக்கே என்று ஒரு நிருபர் கேட்க, அப்படி வந்தால் முதலில் நான் எதிர்ப்பேன் என்று கூறிவிட்டார் சரத். இதை பொறுத்துக் கொள்ள முடியாத வேலூர் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த சோளிங்கர் ரவி என்பவர் தலைமையில் சரத்குமாரின் உருவப்படத்தை எரித்தார்கள்.

அதற்கப்புறம் சரத்குமார் ரசிகர்கள் சும்மாயிருப்பார்களா? திங்கட்கிழமை மூன்று வெவ்வேறு பகுதிகளில் ரஜினியின் கொடும்பாவி எரிக்கப்பட்டுள்ளது. ரஜினி மீது சரத் கோபமாக இருப்பதற்கு அவரது துக்ளக் விழா பேச்சுதான் காரணமா? அதெல்லாம் இல்லை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் ரஜினி விஷால் அணிக்கு சப்போர்ட் பண்ணினாராம். அதற்காகதான் இவ்வளவு கோபம்!

துள்ற ரெண்டு பேர்ல யாரு கயிறு? யாரு பாம்பு?ன்னு தீர்மானிக்க வேண்டியது மக்கள்தான் மவராசன்களே…

Read previous post:
ரசிகரின் மரணம்! விஜய் நேரில் அஞ்சலி!

Close