ஆளையே காணோம்! அதர்வாவின் அடுத்தடுத்த அல்வாக்களால் திணறும் திரையுலகம்?
கண்டெயினர் லாரியாகவே இருந்தாலும் கூட, கைக்கு அடக்கமான ஸ்டியரிங் இல்லேன்னா கண்டம்தான் அவ்வளவும்! தமிழ்சினிமாவில் முதலை பலம் கொண்ட நடிகர்கள் கூட, தன்னை வைத்து படம் எடுக்கும் இயக்குனருக்கோ, அல்லது தயாரிப்பாளருக்கோ கொஞ்சமாவது கட்டுப்படுவார்கள். அப்படி கட்டுப்படாத சிம்புயிசத்தை சேர்ந்தவர்களையும், கார்த்திக்யிசத்தை சேர்ந்தவர்களையும் ஜீவன் ஜெய் மாதிரி சின்ன சின்ன அலட்சியவாதிகளையும் சினிமாவே வலிக்காமல் ஒதுக்கி வைத்துவிடும். அந்த லிஸ்ட்டில் சேர்ந்துவிடுவாரோ என்று சமீபகாலமாக அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறாராம் அதர்வா.
விடிவெள்ளியாக வருவார்…. இல்லேன்னாலும் வரணும்.. என்று நம்பியது, ஆசைப்பட்டது திரையுலகம். ஏனென்றால் அவரது அப்பா மீது தமிழ்சினிமா கொண்ட அளவிலா பாசம் அது. நினைத்த நேரத்தில் நினைத்த போது சந்திக்கக் கூடிய அளவுக்கு இலகுவாக இருந்த முரளிக்கு (சமயங்களில் அவரும் குடைச்சல் கொடுத்திருந்தாலும்) சற்றும் சம்பந்தமில்லாத குணத்தோடு இருக்கிறார் அவரது மகன் அதர்வா என்பதுதான் இன்டஸ்ட்ரியின் அஜீரண ஏப்பம்.
உதவி இயக்குனர்களிடம் கதை கேட்க அலைய விடுவதில் ஆரம்பித்து, அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர்களின் தொடர்பு எல்லைக்கே வராமல் தத்தளிக்க விடுவது வரை அதர்வாவின் அட்ராசிடி பற்றி சொல்லிக் கொண்டே போகிறார்கள். இதில் இன்னொரு அதிர்ச்சி. அதர்வா நடித்த ஒரு படத்தின் ஷுட்டிங் மழை வெள்ளம் காரணமாக நிறுத்தப்பட்டதாம். மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பியது படப்பிடிப்பை துவங்கலாம் என்பதுதான் எல்லாருடைய திட்டமும். கூப்பிடுங்க. வர்றேன் என்று கிளம்பிப்போன அதர்வாவை இந்த நிமிஷம் வரைக்கும் தொடர்பு கொள்ளவே முடியவில்லையாம் இயக்குனரால்.
வெள்ளத்துல உயிரையும் உடமைகளையும் தவற விட்டவங்களை பார்த்துருக்கேன். ஹீரோவை தவற விட்டவனை பார்த்திருக்கீங்களா? என்று புலம்ப ஆரம்பித்துவிட்டாராம். இந்த நாட் ரீச்சபிள் பாய்க்கு, யாராவது அறிவுரை சொல்லி கரையேத்துனா கோடி புண்ணியம்!