வாசலுக்கே வந்து வரவேற்ற ரஜினி! எழுத்தாளர் பெற்ற இன்பம்!
பெரும்பாலும், எழுத்தாளர்களின் பணி எழுதுவதும், எழுதியதால் வந்ததை எண்ணுவதுமாக இருக்கும்! ஆனால் பாலகுமாரன் அப்படிப்பட்டவரல்ல. அவரே சித்தராக… அவரே முனிவராக… சமயங்களில் அவரே கடவுளாகவும் மாறிப்போனவர். அவரது அபிமானிகள் பலருக்கு பாலகுமாரனின் தோற்றமே பரவசத்தை ஏற்படுத்திவிடும். கிட்டதட்ட ஆன்மீகத்தில் கரைந்தே விட்ட பாலகுமாரன், ரஜினியை பொருத்தவரை எப்போதும் ஸ்பெஷல்!
பாலகுமாரனுக்கும் அவருக்கும் நடிகர் எழுத்தாளர் தாண்டிய ஒரு ஆன்மீக தொடர்பு இருக்கிறது. நேரில் சந்தித்தால் அது பற்றி பேசி பேசி உருகிவிடும் ரஜினி, பாலகுமாரன் கதைகள் என்றால் விழுந்து விழுந்து படிக்கிற வாசகரும் கூட. ஒருமுறை அதிகாலையில் நடந்த சம்பவம் இது. காலிங் பெல் இரண்டு முறை அடித்து ஓய… யாராக இருக்கும் என்ற சந்தேகத்துடன் கதவை திறந்த பாலகுமாரனுக்கு இன்ப அதிர்ச்சி. ரஜினியே வந்திருந்தார் அவர் வீட்டுக்கு.
உங்களோட ‘கள்ளியங்காட்டு நீலி’ கதை படிச்சேன். அதை சினிமாவா எடுக்கலாம்னு தோணுது. அந்த கதையை விலை கொடுத்துட்டு வாங்கிட்டு போகலாம்னு வந்தேன் என்று ரஜினி சொல்ல, கறந்த பாலை வாங்க கண்ணனே வாசலுக்கு வந்ததை போல மகிழ்ந்தார் பாலகுமாரன். இது மறக்க முடியாத பிளாஷ்பேக்.
இந்த நிலையில்தான் நேற்று பாலகுமாரனுக்கு ஒரு போன். வழக்கம் போல யாராக இருக்கும் என்ற சந்தேகத்தோடு எடுத்தவருக்கு எதிர்முனையில் பேசியது ரஜினி. “பேமிலியோடு வீட்டுக்கு வரணும்” என்று கேட்டுக் கொண்டாராம். அதற்கப்புறம் ரஜினியின் விருப்பப்படியே குடும்பத்தோடு சென்றார் பாலகுமாரன். என்ன ஆச்சர்யம். தள்ளாத நடையும் ஊன்று கோலின் உதவியுடனும் சென்ற பாலகுமாரனை வாசலுக்கே வந்து வரவேற்றிருக்கிறார் ரஜினி. அவரது கைகளை பற்றி வாஞ்சையோடு அவர் அழைத்துச் சென்றதை பிற எழுத்தாளர்கள் பார்த்திருந்தால், எழுத்துக்கு கிடைத்த பெருமையாகவே கூட நினைத்திருப்பார்கள்.
பல மணி நேரம் ரஜினியோடு செலவிட்டாராம் பாலகுமாரன். என்ன பேசியிருப்பார்கள்? ஏதேனும் புதுக்கதை கேட்டு அழைத்திருப்பாரா ரஜினி? கேள்விகள்… கேள்விகள்… பட் எதுவாக இருந்தாலும், அந்த நிமிஷம் அங்கே ஆன்மீகம் கரை புரண்டு ஓடியிருக்கும் என்பது மட்டும் சத்தியம்!