பொய்யுரைக்க முடியாது மிஷ்கின்! எழுத்தாளர் ஷாலின் மரிய லாரன்ஸ்

கடந்த இரண்டு வாரங்களாக கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தேன் . சில தினங்களாக காய்ச்சல் போன பிறகு ஒரு வினோத உணர்வு ,அசதி ,உடல் சோர்வு ,மன சோர்வு ,Low bp எல்லாம் சேர்ந்து வாழ்வில் துளியும் உற்சாகம் இல்லாமல் கடந்த நான்கு நாட்களை கடத்தினேன் .

நேற்று காலை அலைபேசி சிணுங்கியது ,நண்பன் விஜய் ரகுநாதன் பேசினான் . மச்சி “I loved துப்பறிவாளன் ” செம்ம படம் டீ என்றான் ,உலக சினிமா ரசிகனான அவன் . அவனை நம்பினேன் .நான் அடிக்கடி உலகத்தில் செய்யும் மிக பெரிய தவறு மனிதர்களை நம்புவது . நேற்று அதை திரும்பவும் செய்தேன் .

இரவில் உறக்கம் வரவில்லை என்பதால் , துப்பறிவாளன் இரவு காட்சி ஆன்லைனில் புக் செய்தேன் ,எனக்கும் என் இணையருக்கும். வடபழனியில் உள்ள பலாஸோவில் .சமீப காலமாக பலாஸோ மேல் அப்படி ஒரு ஈர்ப்பு .

நேற்று ஒரு வேளே தான் சாப்பிட்டேன் ,மதியம் ஜுரம் வந்த வயிற்றுக்கு சோறு பிடிக்கவில்லை .சரி நல்ல படம் பார்க்க போகிறோமே ,உணவிற்கு என்ன தேவை என்று மனதை தேற்றிக்கொண்டேன் .

இரவு 10.40 ஆட்டத்திற்கு சீவி சிங்காரித்து ,மேக்கப் போட்டு ,குட்டை கவுனோடு போய் சேர ,நேரம் சரியாக 10 .35 . சிக்கன் நகெட் ,டோனட் ,பழசாறு சகிதம் தியேட்டருக்குள் நுழையும் போது படம் துவங்கி இருந்தது .பார்த்த 20 செகண்டுக்குள்ளேயே இந்த படத்தில் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் -ன் தாக்கம் பயங்கரமாக இருப்பதை உணர முடிந்தது . இயக்குனரும் அதை துவக்கத்திலேயே ஒப்புக்கொண்டிருக்கிறார். இங்கேதான் பிரச்சனையே .ஷெர்லாக் ஹோம்ஸ்-ன் வெறிபிடித்த ரசிர்கர்களுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு பெரிய ஏமாற்றமாக இருக்கும். எனக்கு அப்படிதான் இருந்தது .

சிறுவயது முதலே ஷெர்லாக் கதைகளை படித்து ,பின்பு ராபர்ட் டௌனி ஜூனியர் ஆர்ப்பாட்டமாக நடித்த ஷெர்லாக் படங்களை பார்த்து ,பின்பு ஷெர்லாக் எனப்படும் பிரிடிஷ் டீவி தொடரை பார்த்து ,களித்து ,ஷெர்லக்க்காகவே வாழும் எனக்கு இந்த படம் பெருத்த ஏமாற்றம் .

கணியன் பூங்குன்றனார் வாழும் வீடு ,அவரின் உடை ,நண்பர் ,அவரின் பைத்தியக்காரத்தனம் ,இசைக்கருவி என்று எல்லாமுமே ஷெர்லாக்கில் இருந்து தழுவ பட்டிருக்கிறது அவரின் அறிவை தவிர .

ஒன்றை இங்கே நாம் புரிந்துகொள்ள வேண்டும் .இங்கே நாம் துப்பறியும் சாம்புவை பற்றிய படம் எடுக்கவில்லை .அப்படி இருந்தால் இந்த படம் செம்ம ,சூப்பர் என்று சொல்லலாம் .

ஷெர்லாக்கை தழுவி எடுக்கபட்டப் படம் எப்படி இருந்திருக்க வேண்டும் ??

ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள் ,ஷெர்லாக் ரசிகர்களிடம் ஒரு விசித்திர பழக்கம் இருக்கும். அது என்னவென்றால் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களை ஷெர்லாக் என்று நம்ப துவங்குவதுதான் . அவர்கள் நாடி நரம்புகளில் எல்லாம் அவர்கள் ஷெர்லாக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். எதிர்வீட்டு தாத்தா என் இறந்து போனார்? அப்போலோவின் நடந்தது என்ன? அம்மா வைத்த சாம்பார் ஏன் இன்று வேறு மாதிரி இருக்கிறது? என்று எடுத்ததுக்கெல்லாம் துப்பறிந்து கொண்டிருப்பார்கள். தங்களை அறிவுஜீவிகளாக எண்ணிக்கொண்டு சுற்றி இருக்கும் அனைவரையும் மூன்றாம் தர பிரஜையாகவே நினைப்பார்கள் . ஷெர்லாக் ரசிகர்கள் .

ஆக அப்படி ஒரு படத்தை கொடுக்கும்பொழுது மிக மிக அறிவாக சிலவிஷயங்களை செய்திருக்க வேண்டும் . இது போன்ற படங்களுக்கு வெறும் இயக்குனராக மட்டும் இருக்க முடியாது .ஒரு இயக்குனராக ,கிரிமினலாக , துப்பறிவாளனாக இருக்க வேண்டிய கட்டாயம் இதுபோன்ற படங்களின் இயக்குனருக்கு இருக்கிறது .

அடுத்து என்ன நடக்க போகிறது என்று ரசிகர்கள் எளிதாக கணிக்க கூடிய ஒரு திரைக்கதை.,தேவையே இல்லாத ஹீரோயின் பகுதி. ,போலீஸ்காரரே குற்றம் செய்யும் புளித்த கதை. தொழில் போட்டி கொலைகள் என்று படம் முழுக்க “cliche “”cliche ” cliche ” மட்டுமே .

என்னை கேட்டால் அதே கண்களும் , துணிவே துணை போன்ற படங்களுமே இதை விட சுவாரஸ்யமாக இருந்தது என்று சொல்லுவேன் . சமீபகாலத்தில் வந்த தெகிடி கூட வித்தியாசாமான கதை களத்தோடு இருந்தது .

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த படத்தின் ஒரே பலம் ,விஷால்தான் . நல்ல நடிப்பு ,ஸ்டைலிஷ் ஆன உடைகள் ,ஷெர்லாக் தொப்பி என்று அங்கங்கே எம்ஜியாரை நினைவு படுத்தி போகிறார் . படத்தை விஷால் ஒற்றையாளாக தூக்கி நிறுத்துகிறார் . பிரசன்னா அழகாக இருக்கிறார் . இந்த படத்தில் பிரசன்னாவின் பின்புறமும் நடித்திருப்பது , சிறப்பு .

என்னதான் கதையை கணிக்க முடிந்தாலும் முதல் பாகம் நன்றாகவே இருக்கிறது. டோனட் ,சிக்கன் நாககேட் துணையுடன் ,முதல் பாகத்தை ஓட்டமுடிந்தது .

இரண்டாம் பாகம்தான் துயரத்திலும் ,துயரம் .

பக்கத்துக்கு சீட்டு புதுமண பெண்ணின் வாடி போன மல்லியின் நாற்றம் குடலை புரட்ட ஆரம்பித்தது (நைட் ஷோவுக்கு பூ வச்சிட்டு எதுக்குமா வரீங்க ?).

முக்கிய விஷயம் AC குளிரில் குட்டை கவுன் அணிந்து இரவு காட்சிக்கு செல்லக்கூடாது என்று உணர்த்த நாள் நேற்று .குளிர் தாங்காமல் இரண்டு முறை சிறுநீர் கழிக்க செல்லவேண்டியதாயிற்று .அந்த இரண்டு இடைவேளையின் போதுதான் இந்த படத்திற்கு ஏன் சென்றேன் என்று வாழ்வின் முக்கிய கேள்விகளுக்கு பதில் தேட வேண்டியதாயிற்று .

science of deduction என்னும் முறைப்படி விஷால் விஷயங்களை கணிக்கிறார் , பொதுவாக ஷெர்லாக் சம்பந்தப்பட்ட படங்களில் அதற்கான லாஜிக் விளக்கப்படும். ஆனால் இங்கே விஷால் செய்வதற்கு ஒரு லாஜிக் க்கும் கொடுக்க இயக்குனர் எத்தனிக்கவில்லை .நேரம் இல்லாமல் போய் இருக்கலாம் .இல்லை தமிழ் ரசிகர்கள் முட்டாள்கள் இதெல்லாம் எதிர்பார்க்க மாட்டார்கள் என்று அவரே முடிவு செய்திருக்கலாம் . ஷெர்லாக் ஹோம்ஸ் மட்டுமல்ல , இயக்குனர் breaking bad எனப்படும் தொலைக்காட்சி தொடரையும் நன்றாக பார்த்து இருக்கிறார் , அதிலிருந்தும் பல காட்சிகள் தழுவப்பட்டிருக்கின்றன .

கடைசி ஒருமணிநேரம் படத்தை எப்படி எடுத்துக்கொண்டு போவது என்று இயக்குனர் திணறி இருப்பது பச்சையாக தெரிகிறது .

பாக்கியராஜ் ஏன்? எதற்கு ? புரில.

ஆண்ட்ரியா -ஜெய்சங்கர் படங்களில் வரும் CID சகுந்தலா கேரக்டரில் பின்னி பெடலெடுத்து இருக்கிறார் .

வினய் பாஸ்தா கிளறி பரிமாறிய விதம் “awesome director touch “. இனிமேல் பாஸ்தா சாப்பிட போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன் .

எப்பொழுதோ முடிய வேண்டியபடத்தை பிச்சாவரத்தில் சண்டைக்காட்சி வைப்பதற்காக மூன்று மணி நேரம் இஸ்த்திருப்பது அபாரம் .

மிஸ்கின் நூறு நல்ல படங்கள் கொடுத்திருக்கலாம் ,அதை எல்லாம் நினைவில் வைத்து cliche திருவிழாவான இந்த படத்தை அருமை என்று பொய்யுரைக்க முடியாது .

விஷாலை வைத்து தமிழ் ராக்கர்ஸ் அட்மினை கண்டுபிடிப்பது போல் கதை வைத்திருந்தால் கூட படம் சுவாரஸ்யமாக இருக்கும் வாய்ப்புகள் இருந்திருக்கும் .

தமிழ்நாட்டில் கதை பஞ்சம் என்பதற்கு இன்னொரு உதாரணம் இந்த படம் .

காப்பி அடிப்பதில் எந்த தவறும் இல்லை , ஆனால் அந்த காப்பியை ஒழுங்காக அடிக்கவில்லை என்பதுதான் என் ஆதங்கம் .

உங்களுக்கு இந்த படம் பிடித்திருந்தால் ,என் ஆழ்ந்த அனுதாபங்கள் . உங்கள் ரசனையை நான் வியக்கிறேன், அதை பற்றி ஆராய்ச்சி செய்ய விருப்பப்படுகிறேன் .

இந்த படத்தை பார்த்த பிறகு எனக்கு ஒரு தனி துணிச்சல் பிறந்திருக்கிறது .அத்தனை மாத்திரைகள் ஓட்ட முடியாத காய்ச்சலை இந்த படம் ஒட்டி இருக்கிறது என்பது தனி சிறப்பு .

என் நண்பன் விஜய் ரகுநாதனுக்கு : “டேய் நான் உனக்கு என்ன பாவம்டா பண்ணேன்?”

– ஷாலின் மரிய லாரன்ஸ் முக நூலில் இருந்து…

Read previous post:
சிநேகிதிகளை தேட வைத்த மகளிர் மட்டும்! சூர்யா ஆபிசில் குவியும் கடிதக் குவியல்கள்?

Close