பெருச்சாளிகள் ஒளியத் தலைப்பட்டு விட்டன! விஷால் ஆக்ஷன் பற்றி தயாரிப்பாளர் கஸாலி

வெற்றிக் கோட்டைத் தொடப் போகிறதா தயாரிப்பாளர்கள் சங்கம்?

போட்ட முதலீட்டுக்குப் பங்கமில்லாமல் திரும்பக் கிடைக்கும் சூழல் தமிழ் சினிமாவில் உருவாகியிருக்கிறது என பல குரல்கள், பல வகையான குரல்களில் ‘தெறி’க்க விடுகிறார்கள் விபரம் தெரிந்தவர்கள். இதைக் கேள்விப்பட்டு சந்தோசத்தில் ‘மெர்சலா’கிக் கிடக்கிறது தயாரிப்பாளர் சமூகம்.

முதலில் சில அடிப்படைப் பிரச்சனைகளை விளக்கிவிட்டால், பின்பு எதைச் சொன்னாலும் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்.

ஹீரோக்களை வைத்துப் படங்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

1. பெரிய அளவில் சம்பளம் வாங்கி, ரூ. 30 கோடிக்கும் மேல் தயாரிப்புச் செலவு ஆகும் படங்கள். ரஜினி, அஜீத், விஜய், கமல், சிவகார்த்திகேயன், சூர்யா, என்று நீளும் ஹீரோக்களின் படங்கள்.

2. அடுத்த லெவல் ஹீரோக்களின் படங்கள் ரூ. 10 கோடியிலிருந்து 30 கோடி வரை, சில சமயம் சிரித்த முக தயாரிப்பாளர்கள் கிடைத்தால் அதையும் தாண்டி தயாரிப்புச் செலவு ஆகும் படங்கள்.

3. பெயர் தெரியும், முகத்தைப் பார்த்தால் இன்னாரென்று அடையாளம் கண்டுகொள்ளப்படும் ஹீரோக்கள், ஆனால், இவர்கள் நடித்திருக்கிறார்கள் என்பதற்காக பெரிய அளவு வியாபாரம் எதிர் பார்க்க முடியாது, படம் நன்றாக இருந்தால் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டி போட்ட முதலீட்டைச் சேதாரமில்லாமல் எடுக்க முடியும், படம் சுமார் என்றால் தலையில் போட துண்டு வாங்கக்கூட காசு இல்லை என்ற நிலைமையை உண்டாக்கக் கூடிய நிலையிலிருக்கும் ஹீரோக்கள் நடிக்கும் படங்கள்.

4. ஆசைப் பட்டேன் படம் எடுக்கணும்னு. குனிய வச்சுக் குப்புறத் தள்ளி, மீசையில மண்ணை ஒட்ட வச்சு அப்படியே ஆசையிலயும் மண்ணள்ளிப் போடும், புது முகங்கள், சொந்தக் காசில் சூனியம் வைக்கும் நடிகர்கள் நடிக்கும் படங்கள். வெகு சில நேரம் வெற்றி பெற்று ஜாக்பாட் அடிப்பதும் உண்டு. அந்த ஜாக்பாட் அடிக்கும் இடம் எது என்று தெரியாததுதான் சினிமாவின் சுவாரசியம் அல்லது சோகம்.

எந்த ஹீரோவை வைத்துப் படம் எடுத்தாலும் போட்ட முதலீட்டைத் திரும்ப எடுக்கும் தயாரிப்பாளர்கள் அதிகபட்சம் 10% தான். மற்றவர்கள் எல்லோரும் நஷ்டமடைபவர்கள். அதுவும் சாதாரண நஷ்டமல்ல, வாழ்க்கையை ‘சதா’ ரணமாக்கும் நஷ்டம்.

வீட்டில் உள்ளவர்களை பகைத்துக் கொள்ளும் அளவுக்கு நஷ்டம், தலைமறைவு வாழ்க்கை வாழச் சொல்லும் நஷ்டம், சில நேரம் தற்கொலை செய்ய வைக்கும் நஷ்டம். இந்த நஷ்டம் என்பது தயாரிப்பாளர்களுக்கு மட்டும்தான்.

நடிகர்கள், டெக்னீசியன்கள், தியேட்டர் நடத்துபவர்கள், திருட்டு டீவிடீ தொழில் செய்பவர்கள், கேபிள் டீவியில் திருட்டுத் தனமாக சுடச்சுட படங்களைப் போடுபவர்கள், ஆன்லைனில் படம் போடும் திருடர்கள் இவர்கள் யாருக்கும் நஷ்டம் என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாது. எவ்வளவு பெரிய படம் வந்தாலும், எத்தனை மொக்கைப் படம் வந்தாலும் இவர்களுக்கு நிச்சயமாய் வருமானம் வந்து விடும்.

இந்த இடத்தில் சில படித்த, சினிமா தொழிலை வியாபாரமாய்க் கையாண்ட, சினிமாவை உண்மையாய் நேசித்தவர்கள் ஒன்று சேர்ந்து விவாதித்தபோது சிலபல உண்மைகள் தெரியவந்தன.

பிரச்சனை வெளியே இருந்ததைவிட, கட்டுச் சோத்துக்குள் பெருச்சாளியாய் சில சுயநல தயாரிப்பாளர்களால் உண்டானதுதான் இவ்வளவு நஷ்டத்துக்கும் காரணம் என்று தெரிய வந்தது.

சினிமா வியாபாரம் என்பது தியேட்டர், டீவி சேனல் தாண்டி அறுபதுக்கும் மேற்பட்ட வழிகளில் வருமானம் உண்டு என்ற புரிதல் ஏற்பட்டது. சரி, தியேட்டரிலிருந்தாவது நமக்கு ஒழுங்கான கணக்கும், நமக்குச் சேர வேண்டிய பங்குத் தொகையும் வருகிறதா என்றால் அதுவும் இல்லை. அங்கும் திருட்டு. சேனல் வியாபாரம் என்று தேடிப் போனால் பிச்சைக்காரனைவிடக் கேவலமாக நடத்தும் நிலைமை.

ஏதோ கொஞ்சமாச்சும் கிடைக்குதே என்று வெளிநாட்டு உரிமை வாங்குபவர்களிடம் சென்றால் அவர்கள் நடந்து கொ’ல்லு’ம் விதம்… அவர்கள் வீட்டு பாத்ரூமைக் கிளீன் பண்ணும் வேலைக்காரனை நடத்துவதைவிடக் கேவலமாக நடத்தும் கொடுமை.

ஒரு கட்டத்தில் ‘ஏண்டா இந்தக் கேடு கெட்ட தொழிலுக்கு வந்தோம்’ என்று ஏராளமான தயாரிப்பாளர்கள் நொந்து நொடிந்து போன நேரத்தில் விஷால் தலைமையில் புதிய அணி வெற்றி பெற்று சங்கத்தில் அமர்ந்தது. களவு போய்க்கொண்டிருக்கும் வியாபாரத்தை மீட்டெடுப்பது என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகளில் எல்லா இடங்களிலும் முட்டுக்கட்டை. நிமிர முடியவில்லை, நகர முடியவில்லை.

தியேட்டரே தியேட்டரே இறகு போடு என்று கேட்டபோது, தியேட்டர்களுக்குப் படம் அனுப்பும் “கியூப்”புடன் சேர்ந்து இறகு போடுவதற்குப் பதில் விறகு கொண்டு அடித்தது. கூட்டுக் கொள்ளையர்களிடம் எங்கிருந்து நேர்மையான பதில் கிடைக்கும்?

நாம் படம் கொடுத்தால்தானே அவர்களுக்கு வேலை? வழிக்கு வரும்வரை ஸ்டிரைக் என்று அறிவித்தது சங்கம். பழம் பெருச்சாளிகள், வேறு யாருமல்ல.. சில தயாரிப்பாளர்கள்தான் நீலிக்கண்ணீர் வடித்து அந்த ஸ்டிரைக்கை நடத்த விடாமல் தடுத்தது. வீரம் பேசி வாக்குறுதி கொடுத்த விஷாலுக்கு அவமானம். எந்தப் பக்கம் போனாலும் அணை கட்டும் இந்த இடைஞ்சல்களை என்ன செய்வது? தான் ஒரு ‘ஆம்பள’ என்று நிரூபிக்கத் தோதாக வந்து சேர்ந்தது ஃபெப்ஸி பிரச்சனை.

“இனி யாரை வைத்தும் ஷூட்டிங் செய்வோம்” என்ற அறிவிப்பு உண்மையிலேயே தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல்லானது. அவிழ்ந்து கொண்டிருந்த கோவணத்தை இறுக்கிக் கட்டத் தொடங்கினான் தயாரிப்பாளன்.

சமீபத்தில் கோவையில் திருட்டுத் தனமாக படத்தை ஒளிபரப்பிய ஒரு கேபிள் டீவி ஆளை அரெஸ்ட் செய்து, மற்றொரு லோக்கல் சேனல்மீது எஃப்.ஐ.ஆர் போட்டவுடன் கேபிள் டீவி கும்பல் கோபத்தோடு விழித்துக் கொண்டது. விரைவில் நேரடியாக படங்களை கேபிள் டீவியில்…. கவனிக்க, தயாரிப்பாளரிடம் காசு கொடுத்து ரைட்ஸ் வாங்கி போடப்படும் என்ற நிலை கனிந்திருக்கிறது.

அறுபதுக்கும் மேற்பட்ட சேனல்கள் ஓசியில் பாடல்களும், காமெடியும், படக் காட்சிகளும் போட்டு காசு பார்க்கும் நிலைக்கும் கிட்டத்தட்ட வந்து விட்டது ஆப்பு. சம்பந்தப்பட்ட தயாரிப்பளருக்குக் காசு கொடு என்று சங்கம் அறிவிப்பு கொடுத்திருக்கிறது.

எல்லாத் தியேட்டர்களையும் கணினி மயமாக்க வேண்டும். அதனை சங்கத்தில் இருக்கும் ‘சர்வரோ’டு இணைக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. இதனைச் செய்தால் தியேட்டர் திருட்டு குறையும்.

ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பணம் கொடுத்து பஸ்ஸில் படம் போடத் தயாராகி விட்டார்கள்.

வெளிநாட்டு உரிமை என்பது பெரிய முதலை. அதனைப் பல்லி சைஸ் என்று இதுவரை ஏமாற்றியது போதும் என்ற விழிப்புணர்வோடு நடவடிக்கைகளும் தொடங்கியிருக்கின்றன.

இண்டர்நெட்டில் உலாவரும் படங்கள் பெருமளவு தடுக்கப் பட்டிருக்கின்றன. விரைவில் இண்டர்நெட்டில் படங்களைப் போட்டு அதன்மூலம் வருமானம் வரப் போகிறது என்று விபரம் அறிந்த மாஞ்சோலைக் குயில்கள் கூவுகின்றன.

இன்னும் ஒருசில மாதங்களில் நிலைமை சீராகும் சாத்தியக்கூறுகள் தெரிகிறது.

தியேட்டர் வருமானம் என்பது அதிகபட்சம் 30 – 40% தான். மீத வருமானம் மற்றவற்றிலிருந்துதான்.

பெருச்சாளிகள் ஒளியத் தலைப்பட்டு விட்டன.

போட்ட பணத்தைத் திருப்பி எடுக்கும் உத்திரவாதமும், சில நேரங்களில் நல்ல லாபமும் கிடைக்கும் ஆரோக்கிய சூழ்நிலை கனிந்திருக்கிறது.

ஒரு விசயம்தான் மிக முக்கியம்: பணம் போடும் முதலாளிகள் அப்பாவியாகவும், விபரம் ஏதும் தெரியாதவராவும், பயந்தாங்கொள்ளியாகவும், புன்னகை மன்னனாகவும் இருந்தால் யாராலும் காப்பாற்ற முடியாது.

தொழிலைப் பற்றித் தெரியாதது தவறில்லை. தெரிந்து கொள்ள முயற்சி செய்யாமல் இருப்பதுதான் நஷ்டம் வருவதற்கான ஊற்றுக்கண்.

…கஸாலி,
இயக்குநர், தயாரிப்பாளர்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தீ காயத்தால் புறக்கணிப்பட்ட பெண்களை கெளவரவித்த ‘காஸ்மோக்ளிட்ஸ்’ விருது!

பிரபல பிலாஸ்டிக் சர்ஜரி மற்றும் உடல் எடை குறைப்பு மையமான ’சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி’ (Chennai Plastic Surgery) ‘காஸ்மோக்ளிட்ஸ் விருதுகள்’ (Cosmoglitz Awards) என்ற தலைப்பில்...

Close