எவனவன் / விமர்சனம்
கேமிரா வச்ச செல்போனெல்லாம் சாத்தானுக்கு சமம். கவனமாக கையாள வேண்டும். இல்லையென்றால், என்னாகும்? இதுதான் படத்தின் ஒன் லைன்! நிமிஷத்துக்கு நிமிஷம் முடிச்சுப் போட்டு ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கிற விதத்தில், க்ரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் ரிப்ளிக்காவாக இருப்பார் போல… இந்த படத்தின் டைரக்டர் ஜே.நட்டிகுமார்.
காதலி குளிப்பதை வேடிக்கையாகவும் அவளுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாகவும் படம் பிடிக்கிறான் ஹீரோ அகில். ஆட்டோவில் போகும் போது அந்த மொபைல் தவறிவிட…. அதற்கப்புறம் நடக்கும் தடதடப்புகள்தான் படம்! அது யார் கைக்கு போகிறது? அவன் ஏன் அகிலை அலைய விடுகிறான்? அவன் சொல்லும் எல்லாவற்றையும் கேட்ட பின்பு அந்த கேமிரா அகில் கைக்கு வந்ததா? இதில் போலீசின் ஆக்ஷன் என்ன? நடுவில் வந்து போகும் எம்.பி.க்கும் ஹீரோயினுக்கும் என்ன சம்பந்தம்? இப்படி கேன்டீனுக்கு போய் சோடா குடித்து விட்டு வருவதற்குள் கதை சந்து சந்தாக திரும்பி, உட்கார்ந்து ரசிக்கிறவனின் தியேட்டர் உறக்கத்தை கெடுக்கிறது. பிரபல நடிகர்கள் மட்டும் நடித்திருந்தால், இந்தப்படமே வேற லெவல்!
ஒரு தப்பை செய்துவிட்டு கடைசி வரை அதை சமாளிப்பதற்காக போராடும் அகில், நல்லவரா கெட்டவரா சந்தேகத்தை அவ்வப்போது ஏற்படுத்துகிறார். ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், இந்தப்படத்தில் வரும் வில்லன் கூட கெட்டவனில்லை என்பதுதான். “நீ இதை செய்… அதை செய்… அப்பதான் உன் மொபைல் உன் கைக்கு வரும்” என்று மிரட்டும் சரண், அப்படி செய்யச் சொல்லும் செயல்கள் எல்லாம் செம வேடிக்கை. பிற்பாடு அவர்களுக்கு இவர் கொடுத்த தண்டனைக்கான காரணம் வெளிப்படும் போது, சரணை பார்த்து ‘நல்லவனே… வா’ என்று நாக்கு புரள விடுகிறது சம்பவங்கள்!
கதாநாயகி மட்டும் பிஞ்சிலேயே பழுத்தது போல சற்றே முற்றல். ஆனால் நடிப்பில் ஸ்கோர் பண்ணுகிறார்.
படத்தில் வின்சென்ட் அசோகனும், சோனியா அகர்வாலும் உள்ளே நுழைந்ததும் கதை விசாரணை வளையத்துக்குள் வந்துவிடுகிறது. வி.அசோகனின் எக்சர்சைஸ் காட்சி மட்டும் ரியல் போலிருக்கிறது. மனுஷன் மீசை வைத்த ஜெயமாலினி போல என்னா முறுக்கு?
சோனியா அகர்வாலுக்கு இது சொல்லிக்கொள்ளும்படியான படம். அதை உணர்ந்து நடித்திருக்கிறார் அவரும்.
பாடல்களோ, ஒளிப்பதிவோ பெரிதாக ஈர்க்காவிட்டாலும், கதையின் வேகத்தில் எல்லாம் மறந்து போகிறது.
எவண்டா அவன் என்று நம்மையும் படத்தோடு இழுத்துக் கொண்டு அந்த க்ரைம் பாயை தேட வைத்த ஸ்பீடுக்காகவே இயக்குனர் நட்டிக்குமாருக்கு ஒரு கெட்டி மேளம்….
-ஆர்.எஸ்.அந்தணன்