வேலாயுதமும் சூலாயுதமும் விரட்டுதே… அண்டர் டென்ஷனில் யோகிபாபு!

முட்டு சந்துல நம்பர் ஒன் போகிறவர்களை தடுக்கணுமா, அந்த இடத்தில் சாமி படத்தை ஒட்டு…. என்கிற சீப்பான சித்தாந்தத்திற்குள் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள் ஆல் ஏரியா கடவுள்களும். ‘ஒண்ணுக்கு’ சமாச்சாரத்தை விட ஒப்பில்லா சமாச்சாரமாக இன்னொன்றை கண்டு பிடித்திருக்கிறார்கள் சினிமாவில். ஒரு சாமி படத்தை விளம்பரமா போடு. அதை பார்க்கிறவனின் பக்தி மீது ஒரு குத்து விட்டோம்னா போதும், கும்பலா கிளம்பி வந்து பப்ளிசிடி கொடுத்துடுவா(னு)ங்க என்கிற நினைப்புதான் அது.

‘காக்டெயில்’ என்றொரு தமிழ்ப்படம். யோகிபாபு முருகக் கடவுள் வேஷத்தில் அருள்பாலிக்க, மயிலுக்கு பதிலாக கிளி என்பதாக அமைந்திருக்கிறது அந்த போஸ்டர் டிசைன். நல்லவேளை… டாஸ்மாக் சமாச்சாரம் ஏதும் அந்த போஸ்டரில் இல்லை. அப்புறம் எதற்கு டென்ஷன்? அழகே உருவான முருகனை யோகிபாபு உருவத்தில் பார்த்து தொலைப்பதா என்கிற டென்ஷன் ஏறி, சம்பந்தப்பட்ட படக்குழு மீது போலீசில் புகார் கொடுக்கிற வேலையில் இறங்கிவிட்டன சில இந்துத்வா அமைப்புகள்.

இனிமேலும் சும்மாயிருந்தால், வேலாயுதம் சூலாயுதமெல்லாம் வேண்டாத தொல்லைகளை தரக்கூடும் என்பதால் உடனடியாக சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் காக்டெயில் பட இயக்குனர் முருகன். (பார்றா… இவரு பெயரும் முருகன்)

“நிச்சயமாக யார் உணர்வுகளையும் புண்படுத்தும் விதமாக இந்த படத்தின் கதையும் சரி, இந்த போஸ்டரும் சரி உருவாக்கப்படவில்லை.. என் பெயரிலேயே முருகனை கொண்டுள்ள நானும் ஒரு முருக பக்தன்.. யோகிபாபுவும் ஒரு முருக பக்தர். அதனால் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இப்படி செய்யும் எண்ணம் எங்களுக்கு துளியும் இல்லை. இந்த படத்தின் கதைப்படி முருகன் சிலை ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே இடம்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில்தான் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாங்கள் வடிவமைத்தோம் முருகனையும் சிவனையும் கொண்டாடும் நாம் திரு விழாக்களில் முருகர் வேடமிடுகிறோம். சிவன் வேடம் அணிகிறோம். மாறுவேடப் போட்டிகளில், தமிழர் கலை சார்ந்த பண்பாட்டு நிகழ்ச்சிகளில் வேடங்கள் அணிகிறோம்… எம் முருகப் பெருமானை வேடமிட்டு ஆராதிப்பது தமிழக மக்களின் வாடிக்கை தானே..? அதையே சினிமாவில் காட்டும்போது மட்டும் எப்படி தவறாகி விடும்..?

என்று கூறியிருக்கிறார் முருகன். இதோடு விடுவதாக இல்லை படக்குழு. நாளை தமிழ்நாடு முழுவதும் தங்கள் விளக்கம் போய் சேரும் விதத்தில் போஸ்டர் அடித்து ஒட்டவும் போகிறார்களாம்.

இன்னும் இரண்டு தினங்களில் திருத்தணி முருகன் சன்னதியில் தனது திருமணத்தை ரகசியமாக நடத்த திட்டமிட்டுள்ள யோகிபாபு, முருகனின் திருவிளையாடலுக்கு ஆளாகிவிட்டார் என்பது மட்டும் புரிகிறது.

முருகாவ்…..!

Read previous post:
Dagaalty – Moviebuff Sneak Peek |

https://www.youtube.com/watch?v=A5XlqzU43n0

Close