தம்மடிப்பது காதலுக்கு நல்லதல்ல!
‘சிகரெட் இஸ் இன்ஜுரியஸ் டூ லவ்! லவ் இஸ் இன்ஜுரியஸ் டூ லைஃப்!’ இப்படியொரு அறிவிப்போடு ஒரு ட்ரெய்லர் ஓடத் துவங்கினால் எப்படியிருக்கும்? அப்படியே சரிந்திருந்த சீட்டை முன்னுக்கு தள்ளியபடி, எழுந்து உட்கார்ந்தது பிரஸ்! இப்படி படக்கென கவனத்தை தன் பக்கம் திருப்பிக் கொள்கிற இளைஞர் கூட்டம் ஒன்று எப்போதாவதுதான் வரும். அவர்களை சரியாக அடையாளம் கண்டு கொண்டு முதுகில் தட்டிக் கொடுக்கும் வழக்கமும் பிரஸ்சுக்கு உண்டு. சில தினங்களுக்கு முன் அந்த சம்பவம் நடந்தது.
கோவையிலிருந்து கிளம்பி வந்திருக்கிறது அந்த இளைஞர் கூட்டம். “கைல காசு இல்ல. முதல்ல அங்க இங்க கடன் வாங்கிதான் இந்த படத்தை ஷார்ட் பிலிம்மா எடுத்தோம். வேடிக்கை பார்க்க வர்ற பிரண்டே, மதிய சாப்பாடும் வாங்கிக் கொடுத்துட்டு போவான். படத்தை முடிச்சுட்டு அதை இன்டர் காலேஜ் காம்படிஷனுக்கு அனுப்புனோம். பொதுவா இது மாதிரி காதல் படங்களுக்கு அங்கு அனுமதியில்ல. ஆனால் முதன் முறையா இந்த படத்திற்கு அனுமதி கிடைச்சது. எங்கெல்லாம் கல்லூரிகளில் குறும்பட விழா நடக்குதோ, அங்கெல்லாம் பரிசுகளை தட்டிக் கொண்டு வந்தது எங்க படம்”.
“பேசாமல் இதை சினிமாவா எடுத்திட்டால் என்னன்னு தோணும்போதுதான், இன்னொரு நண்பன் வந்தான். அவர் விவசாயி. வயல்ல சம்பாதித்ததை சினிமாவில் கொட்டியிருக்கான்” என்று ‘காதல் கண் கட்டுதே’ படத்திற்கு முன்கதை சுருக்கம் சொல்கிறார் சிவராஜ். இவர்தான் இப்படத்தின் இயக்குனர். இந்தப்படத்தின் ஹீரோ, ஹீரோயின், எடிட்டர், எல்லாரும் இவரது நட்பு கூட்டம்தான். அதிலும், படத்தின் ஹீரோயின் அதுல்யா ஸ்பெஷல். வேலை கேட்டு இக்கம்பெனிக்கு வந்தவர், படத்தின் ஹீரோயின் ஆகிவிட்டார். யார் தலையிலும் இன்னும் சினிமா திமிர் ஏறவில்லை. முட்டையிலிருந்து எட்டிப் பார்க்கிற கோழி குஞ்சு போல திருதிருவென விழிக்கிறார்கள்.
ஆனால் படம் பேசும் போலிருக்கிறது. ஒவ்வொரு ஷாட்டும், ஒவ்வொரு டயலாக்கும் மனசின் உள்ளே போய், சவுக்யமா என்று கேட்கிறது.
வா… என் இளைஞர் கூட்டமே! புதிய சினிமா கண் விழிக்கட்டும்…
பின்குறிப்பு- இப்படத்தை மதுபானக்கடை என்ற படத்தை இயக்கிய கமலக்கண்ணனின் மாண்டேஜ் மீடியா புரடக்ஷன்தான் உலகம் முழுக்க வெளியிடுகிறது. கற்றாரை கற்றாரே காமுருவர் என்பது இதுதானோ?
https://youtu.be/jU9K1Sa6i1k