கோழி பிரியாணியும் குவாட்டரும் வாங்கிக் கொடுத்துதான் இந்த இடத்துக்கு வந்தேன்! -பவர்ஸ்டார் சீனி பேச்சால் பரபரப்பு

உலகத்திலேயே பெரிய சவால், காமெடி பண்ணுவதுதான்! எவ்வளவுதான் விழுந்து புரண்டாலும், எதிராளி வாய் ‘இடிச்சுக்கோ’ன்னு இருந்துச்சுன்னா, அந்த காமெடிக்கும் அர்த்தமில்லை, நடிச்சவருக்கும் மரியாதையில்லை. இப்படியொரு ஆபத்தான ஏரியாவில்தான் நம்ம பவர் ஸ்டார் சீனிவாசனையும் இழுத்துவிட்டுவிட்டு போய்விட்டார் சந்தானம். ‘லத்திகா’ படத்தை எப்படியாவது சிரமப்பட்டு இறுதிவரை இருந்து பார்த்தவர்களுக்குதான் தெரியும், சீனிவாசன் யார் நாற்காலிக்கு ஆசைப்பட்டார் என்று. பாகப்பிரிவினை சிவாஜி, பாசமலர் சிவாஜியையெல்லாம் மிஞ்சுகிற நடிப்பை வெளிப்படுத்த முயன்றிருப்பார் அதில். ஆனால் அவரை காமெடி திலகமாக்கி, ஒவ்வொரு படத்திலும் அவரை நோகடித்த பெருமை சந்தானத்தையே சாரும்.

‘இந்த உலகம் இன்னுமா நம்பள நம்புது?’ என்று பவரே வெட்கிப்போகிற அளவுக்கு அவரை காமெடி கேரக்டரில் நடிக்க வைக்கப் பிரியப்படுகிறார்கள் பல்வேறு இயக்குனர்கள். இது ஒருபுறமிருக்க, மேடை பேச்சில் தன்னை மிஞ்ச ஆள் இல்லை என்பதை நிரூபித்தார் அவர். நம்பிக்கை சந்துரு இயக்கி நடித்திருக்கும் மு.பு.ஜாக்கிரதை என்ற குறும்பட வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார் பவர் ஸ்டார் சீனிவாசன். அங்குதான் அவரை பேச்சை ஆரவாரத்தோடு ரசித்தது ரசிகர் கூட்டம்.

என்னை சுற்றி வளைச்சு கைது செஞ்சதாவெல்லாம் எழுதுறாங்க. என்னை எதுக்கு சுற்றி வளைக்கணும்? வா ன்னு போலீஸ் கூப்பிட்டா வந்துட்டு போறேன்? நான் ஏதோ எல்லாரையும் ஏமாத்திட்டதாக சொல்றாங்க. அப்படியெல்லாம் இல்லீங்க. பணக்காரன்ட்ட வாங்கி ஏழைக்கு கொடுக்கிறேன். அவ்ளோதான். இன்னைக்கு என்னை எல்லாரும் பவர் ஸ்டார் பவர் ஸ்டார்னு கொண்டாடுறாங்க. இந்த இடத்துக்கு நான் சாதாரணமா வந்துடல. அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன். கோடிக்கணக்குல செலவு பண்ணியிருக்கேன்.

என்னோட லத்திகா படத்தை தியேட்டர்ல எடுத்துடலாம்னு போனேன். எடுக்காதீங்க சார். மக்களை தியேட்டருக்குள்ள வரவழைக்கணும்னா ஒரு டிக்கெட்டு ஃபிரியா கொடுத்து பிரியாணியும் 100 ரூபா பணமும் கொடுத்தா உள்ள வருவாங்கன்னு சொன்னாங்க. சரி கொடுங்கன்னு சொல்லி 100 நாள் ஓட்டுனேன். அதுக்கு வெற்றி விழா கொண்டாடனும்னு சொன்னாங்க. அதுக்கு ஐம்பது லட்சம் செலவு பண்ணி வெற்றி விழா கொண்டாடுனேன். அப்புறம் சொந்த ஊர்ல கொண்டாடுலேன்னா எப்படின்னு கேட்டாங்க. சரி அங்கயும் கொண்டாடுவோம்னு அங்க முப்பது லட்சம் செலவு பண்ணினேன். இப்படி பல லட்சத்தை இறைச்ச பிறகுதான் பவர் ஸ்டார்னு ஒத்துகிட்டாங்க.

‘நான் ஒண்ணும் ஈசியா சும்மா வளர்ந்ததுடல, தெரியுமா?’ என்றார் பவர் ஆதங்கத்தோடு. அயிர மீன அயர்ன் பாக்சுல வச்சு தேய்ச்சு கருவாடுன்னு சொல்லுது கமர்ஷியல் உலகம். ம்… நாமும் கூட்டத்தோடு கூட்டமா நின்னு கைதட்றத தவிர வேற வழியில்ல போலிருக்கே?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கட்டுக்கட்டாக பணத்தை விட்டவர் காகித கப்பலை மிதக்கவிட்டார்! இது ‘கப்பல்’ ஆடியோ விழா?

ஒரு காகித கப்பலை டைரக்டர் ஷங்கர் கொடுக்க, அதை தன் கையால் அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் மிதக்கவிட்டார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். கடந்த சில வருடங்களில் சொந்தப்படம் எடுத்து,...

Close