இரண்டாம் உலகம் – விமர்சனம்

செல்வராகவனின் உலகம் விசித்திரமானது. தனது திரைக்கதை நேர்த்தியை ரெயின்போ காலனியிலிருந்து காலி செய்துவிட்டு எப்போது புதுப்புது உலகங்களில் சஞ்சாரிக்க ஆரம்பித்தாரோ, அப்போதிலிருந்தே அவரது விசித்திரம் தயாரிப்பாளர்களை தரித்திரமாக்கி வருகிறது. இரண்டாம் உலகமும் அவர் வார்த்தைகளில் கேட்டால் ஃபேன்டஸிதான். ஆனால் ஏதோ பேன்ஸி ஸ்டோரில் ஊசி பட்டன் வாங்க போவது மாதிரி மிக சாதாரணமாக இந்த படத்தின் கதையை மண்டைக்குள் அடக்கிக் கொண்டு எவ்வித ஸ்கிரிப்ட்டும் இல்லாமல் கிளம்பியிருக்கிறார் போலிருக்கிறது. படம் நெடுகிலும் (தனிப்பட்ட) செல்வராகவனுக்கு கற்பனை வறட்சி.

ஏழை குழந்தைகளின் மீதும், வயதான பெரியவர்கள் மீதும் அன்பு செலுத்துகிற ஆர்யாவை ஒரு டாக்டர் நேசிப்பதில் ஆச்சர்யமில்லை. நேசிக்கிறார் அனுஷ்கா. அதை வெட்கத்தை விட்டு ஆர்யாவிடம் சொல்ல, ‘எனக்கு கல்யாணத்தில் விருப்பமில்லீங்க’ என்று கூறிவிடுகிறார் ஆர்யா. காதல் தோல்வியில் லேசாக வெம்பும் அனுஷ்கா, வீட்டில் பார்க்கிற மாப்பிள்ளைக்கு ஓ.கே சொல்ல, அது தெரியாமல் காதல் சடக்கென பூக்கிறது ஆர்யாவுக்குள்ளும்! 24 மணி நேரத்தில் மீண்டும் அவர் காதலோடு அனுஷ்காவை அணுக, அவ்விடத்தில் சிக்னல் நஹி. மீண்டும் விரட்டி விரட்டி காதலிக்கிறார் ஆர்யா.

அதே நேரத்தில் வேறொரு உலகத்தில் வேறொரு ஆர்யாவும் அனுஷ்காவும் வாழ்கிறார்கள். ஒரு முரட்டுப்புலியாக இருக்கும் அனுஷ்காவுக்கு ஆர்யா மீது காதலே இல்லை. ஆனால் இவர் அவரை தொடர்ந்து விரட்ட, வாள் சண்டை வீராங்கனையான அனுஷ்காவுக்கும் அந்த உலகத்தின் ராசாவுக்குமே முட்டிக் கொள்கிறது. நம்ம ஊரு வில்லன் போலவே அனுஷ்காவை கடத்திப் போய் அந்தபுரத்திலே வைக்கிறான் அவன். மீட்க வரும் ஆர்யாவிடம் நிபந்தனை ஒன்றை வைக்கிறான். எப்படியோ போராடி நிபந்தனையை நிறைவேற்றுகிறார் ஆர்யா. ஆனால் அப்போதும் காதல் வராத அனுஷ்கா ஆர்யாவை ஜந்து போல பார்க்க, முதலாம் உலகமான இங்கேயும், இரண்டாம் உலகமான அங்கேயும் ஏகப்பட்ட மாற்றங்கள்.

பூலோக அனுஷ்கா திடீரென இறக்கிறார். அதற்கப்புறம் ஆர்யா ஒரு கட்டத்தில் சுயநினைவிழக்கிறார். ஒரு அமானுஷ்ய உந்துதலோடு பிரிமியர் பத்மினி காருடன், பர்ஸ், பர்சுக்குள் அனுஷ்கா போட்டோ மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, பெட்ரோல் பங்க் ரசீது, நாலாவது குறுக்குத் தெருவிலிருக்கும் சேட்டுக் கடை பில் சகிதம் அந்த வேறொரு உலகத்திற்கு பயணமாகிறார் பூலோக ஆர்யா. போன இடத்தில் அவர் அனுஷ்காவை பார்க்க, அவருக்கும் இவருக்கும் காதல் என்று இரண்டாம் உலக ஆர்யா நினைக்க, ‘உஸ்… அப்பாடா. படத்தை முடிக்கிறீங்களா ப்ளீஸ்’ என்று கதறுகிற ரசிகனின் கெஞ்சலை புரிந்து கொள்ளாமல் ‘மூன்றாம் உலகமும் வரப்போவுதுரா மக்கா. சாக்கிரத….’ என்கிற ஒரு சின்ன எச்சரிக்கை ‘லீட்’டோடு… ‘எ பிலிம் பை செல்வராகவன்’.

அனுஷ்கா படம் நெடுகிலும் வெவ்வேறு மாதிரி தோற்றங்களில் வருகிறார். (இது கெட்டப் சேஞ்ச் அல்ல, வேறு ஏதோ செட்டப் சேஞ்ச்) ஆனால் குண்டு கொழுக் மொழுக் பொம்மை போல பம்மி பம்மி சென்று ஆர்யாவின் அருகில் அமர்ந்து காதலை சொல்ல தடுமாறுகிறாரே, அந்த காட்சி க்ளாஸ்! அதற்கப்புறம் ஆர்யாவின் தோழிகளாக வரும் வானரங்களின் வாயில் வழக்கமான செல்வராகவன் வந்து உட்கார்ந்து கொண்டு பேசும் வசனங்கள் சுவாரஸ்யமான கலாட்டா. ‘இந்நேரம் அவளை வேற எவனும் பிக்கப் பண்ணியிருப்பான்’ என்று ஆர்யாவை பதற வைக்கும் அந்த ஒல்லிப்பிச்சு நடிகரின் செலக்ஷனும் நடிப்பும் கூட பிரமாதம்.

அது கெடக்கு. ஆர்யா எப்படி? ஸ்மார்ட்! ஆனால் அந்த இறுகிப் போன முகத்தில் எவ்வித தசை நகர்வும் நடிப்பசைவும் ஏற்படவில்லையா? தேமே…! பட், ஓரிடத்தில் ரொம்பவே ரசிக்க வைக்கிறார். அனுஷ்காவின் காலேஜ் வாகனத்தில் தொற்றிக் கொண்டு கிளம்புகிற அவர், அங்கு தன் சாயம் வெளுத்ததும் அந்த நாற்பதை தாண்டிய புரபசரை பார்த்து, ‘நான் உங்களைதான் நேசிக்கிறேன்’ என்று ரெக்கார்டை திருப்பிப் போடுவதெல்லாம் செல்வா ஸ்பெஷல். இந்த ஸ்பெஷலை ரசிக்கிற நமக்கு கை கால் விளங்காத அப்பாவுக்கு ஆர்யா செய்யும் டாய்லெட் சேவைகளைதான் சகிக்க முடியவில்லை. (இதுவும் கூட செல்வா ஸ்பெஷல்தான்) இதை நேரடி காட்சியாக விளக்காமல் வேறொரு ரூபத்தில் கன்வே பண்ண முடியாதா செல்வராகவன்?

டைரக்டர் காட்டும் இரண்டாம் உலகத்தில் நம்ம உலகம் போல எல்லாமே இருக்கிறது. நம்ம ஊரு கொச்சை தமிழ் உட்பட! அதற்காக பொறம்போக்கு, மொள்ளமாரி வார்த்தைகளை கூடவா வைக்கணும்? அந்த உலகத்தை காட்சிப் படுத்தியதில் இருக்கிற அழகு, அங்கு திரியும் கேரக்டர்களுக்கு இல்லையே? எல்லாருமே தமிழ்சினிமாவில் காலகாலமாக காட்டப்பட்ட கேரக்டர்களின் எச்சங்களாகவும் மிச்சங்களாகவுமே இருக்கிறார்களே? (லொக்கேஷன் சேஞ்ச் என்பதைதான் செல்வா இரண்டாம் உலகம் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ?)

படத்தில் கடவுள் என்றொரு அம்மா வருகிறார். பள்ளிக்கூட சிறுமி போல தோற்றமளிக்கும் அவரை அம்மா என்று ஏற்றுக் கொள்ளவே நமது ரத்தத்தின் ரத்தம் இடம் கொடுக்கவில்லை. அவரும் எந்நேரமும் வானத்தை பார்த்தபடி ஒரு இரட்டை இலைக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டேயிருக்கிறார். செல்வராகவனை தெளிய வைத்து கேட்டாலொழிய அந்த குறியீடு நமக்கு விளங்கவே விளங்காது. கதைக்கு முக்கியமான இந்த அம்மாவை ஊர் உலகமே வணங்குகிறது. ஆனால் அவர் காப்பாற்றி வைத்திருக்கும் அனுஷ்கா மீது கொலை வெறியோடு பாய்கிறது அதே ஊர் உலகம். என்ன லாஜிக்கோ? ‘என்னது, இந்த படத்துக்கு இவ்வளவு கேள்வி தேவையா?’ என்று சுய குட்டு குட்டிக் கொள்ளவும் தோன்றுவதால் இதோடு கப்சிப்.

மிக அருமையான மெலடிகளால் அசத்துகிறார் ஹாரிஸ் ஜெயராஜ். ஆனால் அந்த பாடல்களையும் முழுசாக கேட்க, பார்க்க விட்டாரா என்றால் அந்த விஷயத்திலும் பாவத்தை கட்டிக் கொண்டார் செல்வா. இந்த படத்திற்கு பின்னணி இசையமைக்க மாட்டேன் என்று அவர் ஒதுங்கியதன் பின்னணி இப்போது புரிந்து போனதால், ‘மனசார மன்னித்தோம் ஹாரிஸ்’. மாட்டிக் கொண்ட அனிருத் என்ன செய்திருக்கிறார்? அவரும் பெரும் குழப்பம் குழம்பி பல காட்சிகளை சும்மாவே ஓட விட்டிருக்கிறார். பின்னணிக்காக மெனக்கட்டிருக்கும் பல காட்சிகளில் சில காட்சிகள் சொதப்பல்.

ஒளிப்பதிவாளர் ராம்ஜி மட்டும் தனது இருப்பை கடைசிவரை நிலைநாட்டியிருக்கிறார். வாழ்க. கிராபிக்ஸ் காட்சிகளில் பிரமாண்டம் தெரிகிறது. குறிப்பாக அந்த மிருகத்துடன் ஆர்யா கட்டிப்புரளும் காட்சிகளை குழந்தைகள் உலகம் கொண்டாடும்.

ஃபேன்டஸி என்ற பெயரில் செல்வராகவன் நடத்தும் ஸ்டார் ஓட்டல் ட்ரீட்டெல்லாம் வேண்டவே வேண்டாம். எப்போதும் ஸ்டெல்லா மேரீஸ், குயின்மேரீஸ் வாசல்களில் நின்று கொண்டு வடை விற்பாரே, அதில் நாலைஞ்சு சுட்டுத்தர சொல்லுங்கள் அது போதும்!

-ஆர்.எஸ்.அந்தணன்

 

3 Comments
  1. DASS says

    Why this kolaveri selvaragavan sir ? Nangalum evlo neram than valikathathu mathiri nadikirathu ? mmmMudiyala !

  2. chellathiru says

    First half super, after interval booaring, anushka acting well.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஆணி அடிச்சா அஜீத் சார் மூட் அவுட் ஆவாராம்…..

தமிழ்சினிமா க்ளைமாக்சுகளை பிலிம் இல்லாமல் கூட எடுத்துவிடலாம். ஆனால் பின்னி மில் இல்லாமல் எடுக்கவே முடியாது. ஹீரோயினை கடத்திக் கொண்டு வந்து இங்குதான் வைப்பார்கள். வில்லன் கூட்டத்தை...

Close