எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடக்கம்
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவுரையின்படி, மாணவர்களின் நலன்கருதி பல்வேறு புதிய நடைமுறைகள் இவ்வாண்டு தேர்வுத்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி தேர்வு தொடங்கும் நேரம் 45 நிமிடம் முன்னதாக அதாவது 9.15 மணிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தேர்வறையில் மாணவ- மாணவியரின் மன இறுக்கத்தைப் போக்கி, விடைகளைத் திட்டமிட்டு தேர்வுகளை நன்முறையில் எழுதுவதற்காக, வினாத்தாளினை மாணவ- மாணவியருக்கு வழங்கியவுடன், அதனை முழுமையாகப் படிப்பதற்காக (9.15 மணி முதல் 9.25 மணி வரை) 10 நிமிட கால அவகாசம் வழங்கப்படுகிறது.
விடைத்தாளுடன் இணைக்கப்பட்டுள்ள முகப்புப்படிவத்தில் அச்சிடப்பட்ட தேர்வர்களின் புகைப்படம், பதிவெண் விவரங்களை தேர்வர் சரிபார்த்துக்கொள்ள (9.25 மணி முதல் 9.30 மணி வரை) 5 நிமிட கால அவகாசம் வழங்கப்படுகிறது. தேர்வு நேரம் 9.30 மணி முதல் 12.00 மணி வரை ஆகும்.
மாணவ-மாணவிகளுக்கு விடைத்தாள் வழங்கிய பின்னர், விடைத்தாளில் பூர்த்தி செய்யவேண்டிய தேர்வரின் பதிவெண் முதலான விவரங்களை பதற்றத்தின் காரணமாக தேர்வர்கள் தவறான பதிவுகளை மேற்கொள்வதால், தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, இவ்வாண்டு தேர்வுத்துறை மாணவரின் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் அச்சிட்ட முகப்புச்சீட்டை விடைத்தாளுடன் இணைத்தே வழங்குகிறது. மாணவர் முகப்புச்சீட்டில் அச்சிடப்பட்ட விவரங்களை சரிபார்த்து கையெழுத்திட்டால் மட்டுமே போதுமானது.
முதன்மை விடைத்தாளில் பக்கங்களின் எண்ணிக்கை 30 பக்கங்களாக இவ்வாண்டு அதிகரிக்கப்பட்டுள்ளதால், தேர்வர்கள் கூடுதல் விடைத்தாள்கள் பெறுவதில் ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்படுகிறது. தேர்வர்களின் முன்னிலையில் வினாத்தாள் உறை திறக்கப்பட்டு விநியோகிக்கப்படும்.
தேர்வு மையமாக செயல்படும் பள்ளிகளில், தேர்வு நேரங்களில் அப்பள்ளிகளை சார்ந்த தாளாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் தேர்வு நடக்கும் வளாகத்தில் இருக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 11,552 பள்ளிகளிலிருந்து மொத்தம் 10,38,876 மாணவ-மாணவியர்கள் தேர்வெழுத பதிவு செய்துள்ளனர். இவர்களில் மாணவர்கள் 5,30,462 பேர் மாணவியர் 5,08,414 பேர் ஆவர்.
பள்ளி மாணவர்களைத் தவிர 286 தேர்வு மையங்களில் 74,647 தனித்தேர்வர்கள் தேர்வெழுத பதிவு செய்து உள்ளனர்.
மொத்தத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 11 லட்சத்து 13 ஆயிரத்து 523 பேர் எழுதுகிறார்கள்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் டிஸ்லெக்சியா, கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் இதர உடல் ஊனமுற்றோருக்கான சொல்வதை எழுதுபவர், ஒரு மொழிப்பாடம் தவிர்ப்பு மற்றும் கூடுதல் ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
வினாத்தாள் கட்டுப்பாடு மையங்களில் 24 மணிநேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர்கள் ஆகியோரால் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு வினாத்தாள் காப்பிட மையங்களிலும் கூடுதல் கண்காணிப்பிற்கு பள்ளிக்கல்வி துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் இரண்டு இரவுக்காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் ஜெனரேட்டர் வசதி செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்டத்தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கல்வித்துறை அலுவலர்களுடன் இணைந்து செயல்படுவார் கள். அக்குழுவில் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியாளர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் மாவட்டங்களில் அவர்தம் எல்லைக்குட்பட்ட தேர்வு மையங்களை திடீர் பார்வை செய்து முறைகேடுகள், ஒழுங்கீனங்கள் எதுவும் நடைபெறாவண்ணம் தீவிரமாகக் கண்காணிப்பார்கள்.
தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க தமிழ்நாடு முழுவதிலும் 5 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாள்களை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்து கொள்ளல், தேர்வுத்தாள் மாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் செய்தல், போன்ற செயல்பாடுகள் கடுங்குற்றங்களாகக் கருதப்படும். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு விதிகளின்படி உரிய தண்டனைகள் வழங்கப்படும். காப்பி அடித்தால் தண்டனை உண்டு. எனவே, தேர்வர்கள் ஒழுங்கீனச்செயலில் ஈடுபட்டு தங்கள் எதிர்காலத்தை பாழாக்கிக் கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தேர்வு மையங்களில் ஒழுங்கீனச்செயல்கள் புரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயலுமேயானால் பள்ளி தேர்வு மையத்தினை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தினை இரத்து செய்திட பள்ளிக்கல்வி இயக்குனருக்கு பரிந்துரை செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறைவாசிகளும் கல்வியில் ஏற்றம் கண்டிட, சிறையிலேயே கடந்த சில வருடங்களாக தேர்வு மையம் அமைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, எஸ்.எஸ்.எல்.சி தேர்வினை 45 சிறைவாசிகள் சென்னை-புழல் சிறையிலும் 74 சிறைவாசிகள் திருச்சி மத்திய சிறையிலும் தேர்வெழுதுகின்றனர்.
இவ்வாறு கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.