நிர்வாணமாக திரியும் சுற்றுலா பயணிகள்: பெரு அரசு எச்சரிக்கை
தென் அமெரிக்காவில் உள்ள பெருநாட்டில் உலக அதிசயங்களில் ஒன்றான ‘மச்சு பிச்சு’ உள்ளது. இது உருபம்பா மாகாணத்தில் கஸ்கோ பகுதியில் உள்ள மலை உச்சியில் 7,970 அடி உயரத்தில் அமைந்துள்ள நகரமாகும்.
இது 15–ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதை உலகில் உள்ள பராம்பரிய சின்னங்களில் ஒன்றாக ‘யுனெஸ்கோ’ நிறுவனம் அறிவித்துள்ளது.
எனவே, சுற்றுலாதலமான இதை பார்வையிட உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர். இது பெருநாட்டுற்கு அன்னிய செலாவணியை வாரி வழங்கி வருகிறது.
அதே நேரத்தில் பாரம்பரியம் மிக்க பெருமை வாய்ந்த இந்த ‘மச்சு பிச்சு’வுக்கு தற்போது களங்கம் சேர்க்கும் பலவித நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.
அதாவது இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் ஆடைகளை களைந்து நிர்வாணமாக சுற்றித் திரிகின்றனர். பாரம்பரிய சின்னங்கள் முன்பு நின்று போட்டோ எடுத்து அதை இன்டர்நெட்டில் உலா விடுகின்றனர்.
இந்த நடவடிக்கை பெருநாட்டிற்கும், ‘மச்சு பிச்சு’விற்கும் களங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே, சமீபத்தில் அங்கு நிர்வாணமாக சுற்றி திரிந்ததாக 4 அமெரிக்கர்கள், 2 கனடாக்காரர்கள், 2 ஆஸ்திரேலியர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதை தொடர்ந்து பெரு அரசு தங்கள் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு குறிப்பாக ‘மச்சு பிச்சு’விற்கு வருபவர்களுக்கு சில கட்டுப்பாடுகளையும், நடைமுறைகளையும் விதித்துள்ளது.
‘மச்சு பிச்சு’வில் நிர்வாணமாக சுற்றி திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.