லேப்டாப்பை அதிவிரைவாக பிரித்து, பொருத்துவதில் 9 வயது கோவை சிறுமி சாதனை
பத்தே நிமிடங்களில் லேப்டாப் கம்ப்யூட்டர்களை பிரித்து, பின்னர் மீண்டும் பொருத்தி சாதனை படைத்த கோவையை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பிரிட்டைன் நாட்டிலுள்ள உலக சாதனைகளை அங்கீகரிக்கும் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ளது.
கோவை மாவட்டத்தின் கோயில்பாளையம் பகுதியில் கம்ப்யூட்டர்களை பழுது நீக்கும் தொழில் செய்து வருபவர், பிரபு மகாலிங்கம். இவரது மகள் ஆதர்ஷினி(9) அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறாள்.
துறுதுறுப்பு மிகுந்த சிறுமியான ஆதர்ஷினி, தந்தையின் கடைக்கு வரும் போதெல்லாம் அவர் வேலை செய்வதை உன்னிப்பாக கவனித்து வந்தாள். பின்னர், மெதுவாக லேப்டாப்களை பிரிப்பதும், பின்னர் ஒன்று சேர்த்து பொருத்துவதுமாக முயற்சி செய்து வந்த அவள், காலப்போக்கில் பதினைந்தே நிமிடங்களுக்குள் ஒரு லேப்டாப்பை முழுமையாக பிரிப்பதும், பின்னர் அதனை இயங்கும் நிலைக்கு பொருத்துவதுமாக பழகி வந்தாள்.
இன்னும் விரைவாக இந்த பணியை செய்ய முணைந்த ஆதர்ஷினி, அதனை பத்தே நிமிடங்களுக்குள் செய்து முடிக்கும் அளவுக்கு முன்னேறினாள். இதற்காக தமிழ்நாடு சாதனைப் பட்டியலிலும், பின்னர், தேசிய சாதனைப் பட்டியலிலும், அதனைத் தொடர்ந்து, ஆசிய சாதனைப் பட்டியலிலும் இடம் பிடித்த அவள், தற்போது உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளாள்.
அவளது இந்த சாதனையை கவுரவிக்கும் விதமாக பிரிட்டைன் நாட்டில் உள்ள உலக சாதனை பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்க முடிவு செய்தது. வியட்னாமில் உள்ள ஹோ சி மின் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற விழாவில் ஆதர்ஷினிக்கு இந்த கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.