2.0 / விமர்சனம்

கையடக்க போனுக்குள் மெய்யடக்கிக் கிடக்கிறது நாடு! சந்தோஷம் மனுஷனுக்கு. சங்கு பறவைகளுக்கா? என்று பதறியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார், மீண்டும் பிறந்தால் ஷங்கர்னு பெயர் வைக்கலாம். அப்படியொரு சிந்தனை… அக்கறை… அன்பு… இன்னும் என்னவெல்லாமோ! இந்த உலகம் நமக்கானது மட்டுமல்ல, மற்ற மற்ற உயிர்களுக்காகவும்தான் என்பதை சொல்ல, சுமார் ஐநூறு கோடியை கொட்டி இறைத்திருக்கிறார்கள். அச்சப்படாமல் பேங்க் லாக்கரை அவிழ்த்த லைகாவுக்கு கோடான கோடி ‘குருவி வணக்கம்’!

திடீரென கையிலிருக்கிற செல்போன்கள் பறக்கிறது. சிம் கார்டு இல்லாமல் ‘சிவனே’ என்று கிடக்கும் கடை போன்கள் கூட பறக்கின்றன. இந்த அட்ராசிடியில் நாடே அல்லோலப்பட, பறக்கிற போன்கள் போகிற திசை தேடிப் போகிறார் விஞ்ஞானி வசீகரன். செல்போன் டவர்களினால் சிட்டுக்குருவிகள் மட்டுமல்ல, உலகத்தின் எந்த மூலையிலிருந்தோ இங்கு வரும் பறவைகள் கூட திக்குமுக்காடுகிற சம்பவத்தை அறிகிறார். இப்படி செல்போன்களை பறக்கவிட்டு, நாட்டையே பதறவிடும் அந்த ராட்சதப் பறவை வேறு யாருமல்ல, பட்சிராஜா என்கிற முன்னாள் பறவை ஆராய்ச்சியாளரின் ஆவிதான் என்று தெரியவர… விஞ்ஞானி என்ன செய்தார் என்பதுதான் 2.0

எந்திரன் முதல் பகுதியில் செயலிழக்க செய்து சிறை வைக்கப்பட்ட சிட்டி ரோபோவை இந்த செகன்ட் பார்ட்டில் மீண்டும் கொண்டு வருகிறார் வசீகரன். பட்சிராஜாவுக்கும் சிட்டிக்கும் நடக்கிற ஃபைட்டில் யாருக்கு வெற்றி என்பது க்ளைமாக்ஸ்.

ஹாலிவுட் பிரமாண்டங்களுக்கு இணையான ஒரு தமிழ் படத்தை உயிரைக் கொடுத்து உருவாக்கிய வகையில் முதல் கைதட்டல் ஷங்கருக்குதான். வெறும் பேன்டஸி என்ற அளவோடு முடித்துக் கொள்ளாமல் ஒவ்வொரு மனுஷனின் இதயத்திற்குள்ளும் புகுந்து புறப்படுகிற அளவுக்கு ஒரு கதைக் கருவை உருவாக்கியிருக்கிறாரே… அதுதான் விசேஷம்! தன் ஸ்டைலில் ஒரு அழுத்தமான பிளாஷ்பேக்கை உருவாக்கி, அந்த வாயில்லாத பறவைகளுக்காக பார்வையாளனின் இதயத்தையும் சேர்த்து பேச வைத்திருக்கிறார். எல்லாம் சரி. ஆனால் ஒரு கட்டத்தில், போதும் நமது ஸ்கிரீன் ப்ளே. இதற்கப்புறம் இது கிராபிக்ஸ் வல்லுனர்களுக்கான ஏரியா என்று ஒதுங்கிக் கொண்டதுதான் ஷாக்! அர்த்தமில்லாத மோதல்களால் நேரம்தான் நகர்கிறது.

தன் ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட தீனி போட்டிருக்கிறார் ரஜினி. சிட்டி வெர்ஷன் 2.0 என்று வருகிற அந்த ரஜினியிடம் மட்டும் அநியாயத் துள்ளல். அவரையே இன்னும் கொஞ்ச நேரம் மிரட்ட விட்டிருக்கலாமோ என்கிற அளவுக்கு இருக்கிறது. எமியை இழுத்துப் பிடித்து அணைப்பதும், குக்கூய்… என்று விசிலடிப்பதும், ‘இந்த நம்பர் ஒன் நம்பர் டூ பாப்பா விளையாட்டெல்லாம் நம்மகிட்ட வேண்டாம். நான் எப்பவும் சூப்பர் சிட்டி’ என்று முழங்குவதும்… நிமிஷத்துக்கு நிமிஷம் அள்ளிக் கொண்டு போகிறார் அந்த ஸ்பெஷல் ரஜினி. ஐயகோ, அவருக்கும் ராட்சத பறவைக்குமான சண்டையில் அவரையும் கட்டிப்போடுகிறது கதையோட்டம்! அப்புறம் இன்னொரு குட்டி ரஜினி வருகிறார். குள்ளமணி கெட்டார். இருந்தாலும் குழந்தைகள் ரசிப்பார்கள். ஆனால் ரஜினிக்கென ஒரு இமேஜ் இருக்கே ஷங்கர் சார்?

படத்தின் ஹீரோவே அந்த ராட்சத பறவை அக்ஷய் குமார்தான். பறவைகளிடம் அன்பு செலுத்துகிற ஒருவர் அதே பறவைகளுக்காக நியாயம் கேட்டு அரசு அதிகாரிகளிடமும் அமைச்சர்களிடம் அலைந்து அலைந்து மனம் வெறுத்து எடுக்கிற முடிவும், அதை தொடர்ந்த ராட்சத அவதாரமும் மிரட்டல். நியாயம் முழுக்க வில்லன் பக்கமே இருப்பதால், ரஜினியின் ஒவ்வொரு ஆக்ஷனும் ‘தப்பு பண்றீங்களே தலைவா…’ என்றே படுகிறது. அதுவே இந்தப்படத்தின் ஆகப்பெரிய இடைஞ்சலும் கூட! முடிவும் அந்த ராட்சத பறவைக்கேதான் சாதகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தமிழ்சினிமா வழக்கப்படி ஜெயிப்பது ஹீரோவாகதானே இருக்க முடியும்? ஹ்ம்….ம்!

பொம்மை போல வருகிறார் எமி. ஏதோ தியேட்டரில் கொஞ்சம் கொஞ்சம் சிரிப்பு சப்தம் கேட்கிறதென்றால் அது இந்த எமியின் புண்ணியத்தால்தான்.

ஒரு வைபரேட் சவுண்ட்… அதற்கப்புறம் வருகிற லட்சக்கணக்கான செல்போன் குவியல்… அப்புறம் நடக்கிற மர்டர்… இப்படி டெம்ப்ளேட் பழிவாங்கலில் சில நேரத்தில் சோர்ந்து போய்விடுகிறது தியேட்டர். கூடவே அந்த கண்ணாடியும் உறுத்த துவங்கி அடிக்கடி கழற்றவும் தோன்றுவது எனக்கு மட்டும்தானா?

மிதமிஞ்சிய கிராபிக்ஸ் காட்சிகளும் சற்றே திகட்டலை ஏற்படுத்துகிறது. ஆமாம்… 3டி ன்னு சொன்னாங்க, இமைக்கருகில் வந்து போகிற பொருட்கள் ஒன்றோ இரண்டோதான்!

பின்னணி இசையில் பின்னி பெடல் எடுத்த ரஹ்மானுக்கு பாடல்களை பின்னோக்கி தள்ளி பெரும் துரோகம் இழைத்துவிட்டார் ஷங்கர். இரண்டு பாடல்கள். இரண்டும் பிரமாதம். குறிப்பாக அந்த புள்ளினங்காள்… நா.முத்துகுமாரின் வரிகளுக்காகவும் மயங்க நேரிடுகிற நேரம்!

நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு ராஜ கம்பீரம். இன்னும் நீண்டு அயற்சியை ஏற்படுத்தக் கூடிய அபாய கட்டத்திலெல்லாம் ஷார்ப் கத்தி கொண்டு சமன் செய்திருக்கிறார் எடிட்டர் ஆன்ட்டனி.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் 600 கோடியில் வெளியான படம். உலகம் முழுக்க வெளியான ஒரே தமிழ்ப்படம்.

‘2பாயின்ட்0’ பெருமையான படம்தான். ஆனால் அருமையான படமா? விவாதம் ஸ்டார்ட்ஸ்…

-ஆர்.எஸ்.அந்தணன்

5 Comments
  1. தமிழ் நேசன் says

    டேய் அந்தணா …. நீ யாரோட ஆளுன்னு தெரியும் டா. கவர் வாங்கி கொண்டு சிலரை மட்டும் கவர் பண்ணுவதில் நீ கில்லாடிடா. என்ன செய்ய …. தலைவர் ரஜினி அவர்களின் 2 .0 படத்தின் மாபெரும் வெற்றி மற்றும் வசூலில் புரட்சி செய்து கொண்டு இருக்கையில் …. உனக்கு வயிறு எரிய தானே செய்யும்…
    போயி தண்ணிய குடிடா. தமிழக மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்ற ஒரே தலைவர், சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தாண்டா. அடுத்து தமிழ் புத்தாண்டு தினமாக தைத்திருநாள் முதல் நாள் பொங்கல் அன்று சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் பேட்ட படம் வெற்றி வாகை சூட வரவிருக்கிறது. ….
    கவர் வாங்கி பொழப்பை நடத்தும் …. நீ , பிஸ்மி செருப்பு எல்லாம் எங்கயாவது போயி சாவுங்கடா.
    (என்னுடைய கருத்தை எடிட் டெலீட் செய்யாமல் கருத்து சுதந்திரம் அனைவர்க்கும் பொதுவானது என உணர்ந்து செயல் படவும்)

  2. DANIEL says

    2.0 ALL TIME BLOCKBUSTER MOVIE IN ENTIRE WORLD.
    ONE & ONLY SUPER STAR RAJINI IN & AS 2.0 MASSIVE HIT IN ALL OVER INDIA.
    LONG LIVE OUR INDIAN CINEMA GOD RAJINI.

  3. Sarath says

    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நான்கு கெட்டப்புகளில் நடித்துள்ள 2.0 படம் உலகம் முழுவதும் ரூ. 600 கோடியை வசூலித்து ஹாலிவுட்டையே வாய்ப் பிளக்க வைத்திருக்கிறது. ஹாலிவுட்டின் பெண்டாஸ்டிக் பீட்ஸ், ரபீல் பிரேக்ஸ் த இன்டர்நெட் போன்ற படங்களின் வசூலை நான்கே நாட்களில் முறியடித்து விட்டது. இன்று ஐந்தாம் நாளில் ரூ. 600 கோடி வசூல் கிளப்பில் நுழைந்துள்ளது 2.0.

    தமிழகத்தில் மட்டும் 5 நாட்களில் ரூ. 120 கோடியை வசூலித்துள்ளது. வட இந்தியாவில் நான்கு நாட்களில் ரூ. 90 கோடியை குவித்த 2.0 இன்று ரூ.110 கோடியை தொட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கில் ரூ. 100 கோடியை குவித்த முதல் டப்பிங் படம் என்ற சாதனை 2.0 விற்கு கிடைத்துள்ளது.

    அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் 2.0 வசூல் பலரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது. சென்னை நகரில் 2.0 படத்திற்கு கிடைத்த வரவேற்பு பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை. இதுவரை 12 கோடியை வசூலித்துள்ளது 2.0. ஐந்து நாட்களில் ரூ. 600 கோடியை குவித்துள்ள இந்தப் படம் இனி வரும் நாட்களில் ரூ. 1000 கோடியை தொடும் என்பது சினிமா ஆர்வலர்களின் கருத்து .

  4. Amir says

    இந்திய சினிமாவிலேயே ரூ. 600 கோடிக்கு எடுக்கப்பட்ட முதல் படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0. 2.0 படம் மாஸ் வரவேற்பு பெற்றதோடு வசூலில் கலக்கி வருகிறது.

    4 நாட்களில் ரூ. 400 கோடி வசூலித்த இப்படம் முதல் வார முடிவில் ரூ. 500 கோடி வசூலித்திருக்கிறது. இதனை இப்பட தயாரிப்பு நிறுவனம் லைகா உறுதிப்படுத்தியுள்ளனர்.

    சரி ரஜினியின் இந்த 2.0 ஏழு நாள் முடிவில் சென்னையில் மட்டும் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரத்தை பார்ப்போம்.

    ரூ. 2.76 கோடி
    ரூ. 2.21 கோடி
    ரூ. 2.63 கோடி
    ரூ. 2.89 கோடி
    ரூ. 1.43 கோடி
    ரூ. 1.29 கோடி
    ரூ. 1.17 கோடி

    தமிழ்நாட்டை முதல் வார முடிவில் எடுத்துக் கொண்டால் படம் ரூ. 125 கோடிக்கு வசூலித்திருக்கிறது.

  5. Raja says

    சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படம் கடந்த நவம்பர் 29ம் தேதி வெளியானது. அதன் பிறகு இரண்டு வாரங்களுக்கு வேறு புதுப் படம் எதுவும் வெளியாகவில்லை. இந்தியா முழுவதும் 2.0 தான் பரபரப்பாக ஓடியது. வெளிநாடுகளிலும் இந்தப் படத்திற்கு ஏக வரவேற்பு. வேறு எந்த இந்திய படமும் செய்யாத வசூல் சாதனை செய்தது. அந்த இரண்டு வாரங்களில் வெளியான ஹாலிவுட் படங்களில் வசூலையெல்லாம் ஜஸ்ட் லைக் தட் தாண்டியது.

    இந்த நிலையில் கடந்த டிசம்பர் 16ம் தேதி தமிழில் துப்பாக்கு முனை, ஜானி ஆகிய படங்களும், இந்தியில் கேதார்நாத், தெலுங்கில் சில புதுப்படங்கள் வெளியாகின. இவற்றுக்காக சில காட்சிகளை மட்டுமே திரை அரங்குகள் ஒதுக்கின. 2.0விற்கே முன்னுரிமை தந்தன. காரணம் குடும்பம் குடும்பமாக இந்த படத்திற்கு பார்வையாளர்கள் வந்ததுதான்.

    டிசம்பர் 21ம் தேதி கிருஸ்துமஸை முன்னிட்டு பல பெரிய படங்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் வெளியாகின. தமிழில் மாரி 2, அடங்கமறு, சீதக்காதி, சிலுக்குவார்ப்பட்டி சிங்கம், கேஜிஎப், கனா என அரை டஜன் படங்கள். எல்லாமே ஓரளவு நட்சத்திர மதிப்புள்ள படங்கள். இந்தப் படங்களுக்கான 2.0 காட்சிகள் குறைக்கப்பட்டன. சில அரங்குகளில் படத்தை எடுக்க வேண்டிய சூழல். ஆனாலும் முக்கிய அரங்குகள் பல 2.0வை பிரதான அரங்குகளிலும், மற்ற புதிய படங்களை சிறிய அரங்குகளிலும் திரையிட்டு சமாளித்தன.

    ஆனால் புதிய படங்களின் ரிசல்ட் எதிர்ப்பார்த்த மாதிரி அமையவில்லை. மாரி 2, அடங்க மறு படங்களுக்கு ஓரளவு கூட்டம் இருந்தது. சீதக்காதி படம் எடுத்த எடுப்பிலேயே விழுந்துவிட்டது. கனா, சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் போன்றவை ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை மாலையே கூட்டமின்றி காணப்பட்டது. கேஜிஎப் கர்நாடகாவில் மட்டும் ஹிட்டடித்துள்ளது.

    ஹிந்தியில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட ஷாருக்கானின் ஜீரோ படுத்தோல்வியை தழுவி அதிர்ச்சி தந்துள்ளது. இதனால் மீண்டும் 2.0 படத்திற்கான காட்சிகளை அதிகரித்துள்ளன பல அரங்குகள். சில அரங்குகள் புதுப்படங்களை தூக்கிவிட்டு மீண்டும் 2.0 படத்தையே திரையிட்டுள்ளனர். இதனை #Chittiisbackwithbang என்ற ஹாஷ் டேக்குடன் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றன. கிருஸ்துமஸ் விடுமுறை, அரையாண்டு தேர்வு விடுமுறை, புத்தாண்டு விடுமுறை போன்றவைக் காரணமாக குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் குவிவதால் 2.0 தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதிலுமே நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சுற்றி வளைத்த விஸ்வாசம்! சூது கவ்விய பேட்ட!

Close