வெட்டிபுடுவோம் வெட்டி…. ரெகுலர் சினிமாக்காரர்களை அலறவிடும் கிராமம்
வேல்டு சினிமா, ஓல்டு சினிமா, டிஜிட்டல் சினிமா, ஆரோ த்ரி டி படம், அப்புறம் யாரோ திருடிய படம்னு தமிழ்சினிமாவில் வகைகளுக்கு பஞ்சமில்லை. தியேட்டருக்குள் வருவதற்கும் ஆளுமில்லை. ஆனால் இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டு ‘ஆக்சுவலி…. நாங்க இந்த கதையை யோசிக்கும் போதே வெளியில் மழை பெஞ்சுது. வீட்டுக்குள்ளு குளிரடிச்சுது. இந்த கதையை எழுதிட்டு பேனாவை கீழே வைக்கும்போது அந்த பேனாவே ஓ…ன்னு அழுதுச்சுன்னா பாருங்களேன்’ என்றெல்லாம் பில்டப் கொடுக்கிற இயக்குனர்களை பிரஸ்மீட் தோறும் பார்க்க முடிகிறது.
இந்த பொல்லாத போங்குகளுக்கு மத்தியில் ‘போங்கய்யா நீங்களும் உங்க பில்டப்பும்…’ என்று ஒட்டு மொத்த சினிமா இன்டஸ்ட்ரிக்கும் பெப்பே காட்டுகிறது ஒரு கிராமம். அந்த கிராமத்திலிருக்கிற அறுபது எழுபது பேர் சேர்ந்து ஒரு படம் எடுத்துவிட்டார்கள். படத்தின் பெயர் ‘வெம்பூரின் அங்காளி பங்காளி’. (அங்காளி பங்காளி என்று இன்னொரு படமும் தயாராகிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தில்) ஊரிலிருக்கிற இவர்களே நடித்து இவர்களே தயாரித்து இவர்களே பார்க்கிற திட்டத்தில் உருவான படம்தானாம் இது. வைகாசி மாசம் ஊர்ல திருவிழா வரும்ங்க. அந்த நேரத்துல எங்கிருந்தாவது கரகாட்ட கோஷ்டி, தவுல் கோஷ்டின்னு வந்து இறங்குவாங்க. ஆபாசமா ஆட்டம் போடுவாங்க. அவங்க துணியை அவுக்கும் போதே, இங்கயிருக்கிற பெண்களெல்லாம் எழுந்து வீட்டுக்குள்ள ஓடுவாங்க.
இல்லேன்னா திரையை கட்டி எம்ஜிஆர் படம், சிவாஜி படம், ராமராஜன் படம்னு போடுவாங்க. எத்தனை நாளுக்குதான் இன்னொருத்தர் நடிச்ச படத்தை பார்த்துட்டு இருக்கிறது. நம்மளே ஒரு படம் எடுத்து நம்ம திருவிழாவுல போடுவேமேன்னு தோணுச்சு. கௌம்பிட்டோம்ல…. என்றார் படத்தின் இயக்குனர் கே.விஜய். திரைக்கதை, கிராபிக்ஸ், எடிட்டிங் என்று முக்கியமான வேலைகளை இவரே பார்த்திருக்கிறார். கதை வசனத்தை மு.பொன்னரசன் என்பவர் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு ஆனந்த் குமார். பின்னணி இசை முரளி, நாராயணன்.
துத்துக்குடி பைபாஸ் சாலையில் அமைந்திருக்கிறது இந்த வெம்பூர் கிராமம். ‘படத்தை பார்த்துட்டோம். எங்க ஊருக்குள்ள யாருக்கும் தெரியாம கேமிரா வச்சுட்டா எப்படியிருக்குமோ, அப்படியிருக்கு. கிராமத்து அரட்டைகள், சண்டைகள்னு பரிபூரணமா அந்த கிராமத்து மனிதர்களை பார்த்து சந்தோஷப்படலாம். ஆனால் இது எல்லாமே எங்களுக்கும் எங்க கிராமத்திற்கும் மட்டும்தான் சொந்தம். வெளியில் எந்த தியேட்டர்லேயும் போடுற ஐடியா இல்ல. வேணும்னா யூ ட்யூப்ல போடுறோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க என்கிறார் கே.விஜய்.
இப்படி ஊருக்கு ஊர் படம் எடுத்து அவங்களே போட்டுகிட்டா எங்க பொழப்பு என்னாவறது?ன்னு பெப்ஸி அமைப்பு, அந்த சங்கம் இந்த சங்கம்னு கௌம்பி , வெம்பூர் அருவாவுக்கு வேலை வச்சிராதீங்க. கிராமத்து மனுஷங்களுக்கு கோவம் ஜாஸ்தி. ஆமாம். சொல்லிபுட்டோம்….