ஹன்சிகா இடுப்பில் தாயத்து? கட்ட வைத்த பேய் பட ஷுட்டிங் !

பக்தி படங்கள் என்றால் விரதமிருந்து நடிப்பார்கள் நடிகைகள். ஷுட்டிங் நாட்களில் ‘சகல வஸ்து’ விரதமிருக்கும் இவர்கள், எப்படா ஷுட்டிங் முடியும் என்று காத்திருந்து கட்டி மேய்வது சர்வ சகஜம். பேய் படங்களுக்கு இப்படியெல்லாம் ஏதும் விதிமுறைகள் இருக்கிறதா? சுந்தர்சியின் ஸ்டேட்மென்ட்டை கேட்டால், இனி இதுபோன்ற படங்களில் நடிக்க வரும் நடிகைகள், இடுப்பில் ரகசிய தாயத்துடன் வந்தாலும் வரக்கூடும். ஏனென்றால் திகில் அப்படி.

சுந்தர்சி யின் லேட்டஸ்ட் திரைப்படம் அரண்மனை. காமெடி படம் எடுத்தால் அதில் கடைசி எல்லை வரைக்கும் போய் விடுவது அவரது வழக்கம். படம் பார்க்க வருகிற அத்தனை பேரையும் உண்டியலில் சில்லரையை போட்டு குலுக்குவதை போல குலுக்கி எடுத்துவிடுவார். அதுவே காதல் படங்கள் என்றால், அடுத்த வருஷம் ரிட்டையர் ஆகப் போகும் ஆட்களையும் கூட யாருக்காவது லவ் லெட்டர் கொடுக்கிற அளவுக்கு புத்தி பேதலிக்க விட்டுவிடுவார். இப்போது இது பேய் பட முறை. யார் யாரெல்லாம் அர்த்த ராத்திரியில் எழுந்து அலறி வைக்கப் போகிறார்களோ? தொழிலை இவ்வளவு நேர்த்தியாக செய்யும் சுந்தர்சியை படப்பிடிப்பில் ஒரு ஆவி வந்து கண்காணித்திருக்குமோ என்று எண்ண வைக்கிறது ஒரு ஷுட்டிங் ஸ்பாட் செய்தி. இது சுந்தர்சியின் வாயாலேயே சொல்லப்பட்டிருப்பதால், திரைக்கதை வசனத்தின் மற்றும் கற்பனையின் ஒரு பகுதி என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

ஐதராபாத்தில் மணி கொண்டா என்ற இடத்தில் மூன்று கோடி செலவில் ஒரு பிரமாண்டமான அரண்மனை செட் போடப்பட்டதாம். படத்தில் நடிக்கும் எட்டு வயது சிறுமி சம்பந்தப்பட்ட காட்சிகளை நள்ளிரவில் படமாக்கிக் கொண்டிருந்தார்களாம் சுந்தர்சி யும் ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமாரும். லைட்டிங் வைக்கும் நேரத்தில் தனியாக அமர்ந்திருந்த சிறுமி பக்கத்தில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தாளாம். யார்ட்ட பேசிட்டு இருக்கே என்று சுந்தர்சி கேட்க, இந்த அங்கிளிடம்தான் என்று அவள் கை காட்டிய இடத்தில் ஒருவரும் இல்லை. பயத்தில் ‘உச்சா’ போகாத குறையாகிவிட்டார்களாம் யூனிட்டில்.

எப்படியோ? படமாக்கப்பட்ட அந்த காட்சியை எடிட் சூட்டில் வந்து போட்டுப் பார்த்தால், கரண்ட் கட். என்னென்னவோ சப்தம் என்று அந்த இடமே ரணகளமானதாம். இந்த விஷயத்தை நல்ல வேளையாக ஹன்சிகாவிடம் சொல்லவில்லை அவர். சொல்லியிருந்தால் ஹன்சிகா மோத்வானி என்னாகியிருப்பாரோ? ஒருவேளை சுந்தர்சியே அவருக்கு தாயத்து கட்டும்படி ஆகியிருந்தாலும் ஆச்சர்யமில்லை.

அதெல்லாம் இருக்கட்டும்… தியேட்டரில் டிக்கெட்டுடன் ஆளுக்கொரு ஹெல்மெட்டும் இலவசமாக கொடுப்பார்களோ?

பின்குறிப்பு- இந்த படத்தில் சந்தானத்துடன் லட்சுமிராய் செம குத்தாட்டம் போட்டிருக்கிறாராம். முதன் முறையாக மனோபாலாவும் கோவை சரளாவும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். (ரொம்ப முக்கியம்)

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வெட்டிபுடுவோம் வெட்டி…. ரெகுலர் சினிமாக்காரர்களை அலறவிடும் கிராமம்

வேல்டு சினிமா, ஓல்டு சினிமா, டிஜிட்டல் சினிமா, ஆரோ த்ரி டி படம், அப்புறம் யாரோ திருடிய படம்னு தமிழ்சினிமாவில் வகைகளுக்கு பஞ்சமில்லை. தியேட்டருக்குள் வருவதற்கும் ஆளுமில்லை....

Close