தமிழ்சினிமா இயக்குனரை பிடித்தது பெண் ஆவி! உதவி இயக்குனர்கள் குய்யோ முறையோ…

“அப்படியே கதைக்குள்ளே போய் கரைஞ்சே போயிட்டேன்…” என்று சொல்கிற இயக்குனர்களை லூசு என்றெல்லாம் கருதும் ஊர் உலகம். “என்னய்யா இவன்… கதை சொல்லும் போதே அழுது மூக்கை துடைச்சு நம்ம சட்டையில துடைக்குறான்” என்று சில இயக்குனர்களிடம் கதை கேட்ட ஹீரோக்கள், நாலு முறை குளித்து நல்ல நிலைக்கு திரும்பி வந்த நாட்களும் இங்கே சகஜம்!

எழுதுற கதை வேறு. வாழுற நிலை வேறு என்று இருக்க முடியாமல், கதையோடு கதையாகிப் போகும் இயக்குனர்களால் மட்டுமே நல்ல படத்தை கொடுக்க முடியும் என்பதுதான் யதார்த்தம். அப்படியொரு இயக்குனராக மாறிவிட்டார் கீரா என்றால், அடப்போய்யா என்பீர்கள். அதுவே ஒரு சம்பவத்தோடு சொன்னால்…? அப்படியா நடந்துச்சு என்று அதிர்ச்சியாவீர்கள். முதல்ல கீரா யாருன்னு சொல்லுய்யா என்பவர்களுக்கு ஒரு சின்ன நினைவூட்டல். பச்சை என்கிற காத்து என்ற படத்தை இயக்கியவர் இந்த கீரா. அதற்கப்புறம் சில கால இடைவெளிக்குப் பின் ‘மெர்லின்’ என்ற படத்தை இயக்கி விரைவில் திரைக்கு கொண்டுவரவிருக்கிறார்.

இவருக்கு நடந்த திகில் சமாச்சாரம்தான் இந்த செய்தியின் சாரம்சம்.

ஒரு திகில் சினிமா எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தவர், தன் அறையில் கதையெழுத அமர்ந்தாராம். ஏன் அங்க இங்க போவானேன்? நம்ம தெருவுலேயே நாலு வீடு தள்ளி சூசைட் பண்ணிகிச்சே, ஒரு பொண்ணு. அதோட கதையையே எழுதுவோமே என்று நினைத்தவர், தினந்தோறும் ஒரு சம்பவமாக யோசித்து எழுத ஆரம்பித்திருக்கிறார். அந்த கதை வளர வளர தன் உதவி இயக்குனர்களிடம், “அந்த பொண்ணே இன்னைக்கு என் கனவுல வந்தா. இதை எழுது… அதை எழுதுன்னு சொன்னா…” என்றெல்லாம் அளந்து விட்டிருக்கிறார். அவர்களும் இதை உண்மை என்று நம்பி, சற்றே அச்சத்துடன் நடமாட ஆரம்பித்திருக்கிறார்கள்.

இங்குதான் ஒரு அதிர்ச்சி. உதவி இயக்குனர்களிடம் சும்மா பொய்க்காக சொன்ன விஷயம், அப்படியே நிஜமாக நடக்க ஆரம்பித்ததாம். தனிமையில் இருக்கும் நேரங்களில், தன் அருகில் ஒரு பெண் இருப்பதை போலவே உணர ஆரம்பித்தாராம் கீரா. சமயங்களில் அவள் தன்னை தொடுவது போலவெல்லாம் தோன்றுமாம். பதறிப்போன அவர், மனநல மருத்துவரிடம் ஓட அவர் என்னென்னவோ சொல்லி ஆவி தெளித்து அனுப்பியிருக்கிறார். இப்போது சம்பந்தப்பட்ட ரூமை காலி பண்ணிவிட்டு வேறொரு அறைக்கு ஷிப்ட் ஆகிவிட்டார் கீரா.

“இந்த படத்தை நான் ரிலீஸ் பண்ணுவதற்குள் அவள் மீண்டும் வருவாளோன்னு அச்சமா இருக்கு” என்கிறார் அவர்.

இந்த படத்தில் விஷ்ணுபிரியன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அஸ்வினி நடிக்கிறாராம். இந்த பேய் பயத்தை யூனிட்டிலும் பரவ விட்டிருக்கிறார் கீரா. படம் வெளிவருவதற்குள் யாரெல்லாம் நடு ராத்திரியில் எழுந்து குய்யோ முய்யோ என்று கதறப் போகிறார்களோ?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Joker Thank’s Giving and Success Meet Stills Gallery

Close