அமீரை இறக்கிவிடு… அப்புறம் தானா நடக்கும்! இயக்குனர் சங்கம் வகுக்கும் புது வியூகம்?
இதில் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை நடுநிலையாளர்களின் பார்வைக்கு விட்டுவிடுவதுதான் சரி. அதற்கு முன், பிரச்சனை என்ன என்பதை சொல்லணும் அல்லவா? இதோ-
தமிழ் சினிமாவில் எந்த தலைப்பு வைத்தாலும், அதுக்கு நான்தான் சொந்தக்காரன் என்று சொந்தம் கொண்டாட கிளம்பிவிடுகிறார்கள் சிலர். இந்தப் போக்கு இங்கு பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. (கதையே என்னோடது என்று கிளம்புகிறது இன்னொரு கூட்டம். அது வேற சமாச்சாரம்) இந்த பஞ்சாயத்துக்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்த இயக்குனர் சங்கம், ‘இனி படத் தலைப்புகளை நாங்களே பதிஞ்சுக்குறோம்’ என்று தயாரிப்பாளர் சங்கத்தை நாட, அங்கு கடுமையான ‘கேட்’ போட்டு தடுத்துவிட்டது நிர்வாகம். படம் எடுக்கிற எங்களுக்குதான் தலைப்பும் சொந்தம். அதை வேறொரு அமைப்பிடம் விட்டுத்தர முடியாது என்று கூறிவிட்டார்கள் அங்கே.
ஆனால் இதில் பலத்த முறைகேடு நடப்பதாக இப்போதும் புலம்புகிறார்கள் இயக்குனர்கள். நாம் ஒரு நல்ல தலைப்போடு கில்ட் அல்லது தயாரிப்பாளர் சங்கத்திற்கு போனால், இந்த தலைப்பு ஏற்கனவே பதிஞ்சுருக்கே என்று கூறி அனுப்பி விடுகிறார்கள். அப்புறம் போன் பண்ணி, கொஞ்சம் செலவாகும். நீங்க சரின்னா, நாங்க சம்பந்தப்பட்டவங்ககிட்ட கேட்டு வாங்கித் தர்றோம்னு சொல்றாங்க என்றெல்லாம் குற்றம் சாட்டுகிறார்கள் இவர்கள்.
கட்… விஷயத்துக்கு வந்துவிடுவோம். நாம உரிமையை நாமளே மீட்டெடுக்கணும்னா, நம்மள்ல ஒருவர் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தலைவர் ஆகணும். அதுக்கு ஒரே வழி டைரக்டர் அமீர், அல்லது சேரனை உள்ளே இறக்கி போட்டி போட வைக்கறதுதான் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், முதல் கலகம் ஸ்டார்ட் ஆகியிருக்கிறது. போக போக இனி என்னவெல்லாம் காதில் விழப்போகுதோ?