சிம்பு இல்லாத இடத்தில் சிம்புவால் சண்டை! யாரு கொடுத்த கீ சார் இது?

ஜல்லிக்கட்டு, கோழி பைட், ரேக்ளா ரேஸ் இதையெல்லாம் விட பிரமாதமான பொங்கல் அதிரடி ஒன்று உண்டென்றால் அது சினிமா மேடைகள்தான். ‘கீ’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிலும் அப்படியொரு அடிதடி! ஜீவா நடித்திருக்கும் இப்படத்தை ட்ரிப்பிள் ஏ புகழ் மைக்கேல் ராயப்பன்தான் தயாரித்திருக்கிறார். காலீஷ் இயக்கியிருக்கிறார்.

விஷால், விஜய் சேதுபதி, ஜீவா, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், சிம்புவின் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ பட பஞ்சாயத்தையும் கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தினார் தயாரிப்பாளர் தேனப்பன். ஏற்கனவே சிம்புவை வைத்து ‘வல்லவன்’ என்ற படத்தை தயாரித்து, தாறுமாறாக சேதப்பட்டவர் இவர்.

“சிம்பு மீது மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்து இவ்வளவு நாளாச்சு. ஆனால் அதன் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தலைவர் விஷால்தான் சொல்ல வேண்டும். நானும் இதற்கு முன் வல்லவன் படம் எடுத்து படாத பாடு பட்டிருக்கேன். நான் புகார் கொடுக்கல. ஆனால் மைக்கேல் ராயப்பன் புகார் கொடுத்திருக்கார். அதற்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே கூட்டத்திலிருந்து பாய்ந்து வந்தார் ‘வின்னர்’ பட தயாரிப்பாளர் ராமச்சந்திரன்.

இவர் தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும் கூட. “அதை பேச வேண்டிய இடம் இதுவல்ல. சங்கத்துக்கு வந்து பேசுங்க” என்று கூக்குரல் இட, அவருக்கு தேனப்பன் பதில் சொல்ல… ஒரே கசாமுசா. இதையெல்லாம் கவனித்தபடி மேடையிலிருந்த விஜய் சேதுபதி, ‘ஆள விடுங்க. கிளம்புறேன்’ என்று மேடையை விட்டு இறங்கவே போய்விட்டார். நிலைமை அப்படி.

நல்லவேளையாக பிரச்சனை ஓய்ந்தது. ஆனால் அதே மேடையில் இதற்கு பதிலளித்த விஷால், “தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் கேட்டு பல நாள் ஆச்சு. ஆனால் ஏதாவது பதில் வந்தால்தானே? என்ன பண்றதுன்னே தெரியல. இந்த இடத்தில் நான் இதை அறிவிக்கிறேன். ஒரு பைசா கூட முன் பணம் வாங்காமல் நான் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். படம் முடிந்து என்ன பிசினஸ் ஆகுதோ, அதற்கப்புறம் சம்பளம் கொடுத்தால் போதும் என்று சொல்ல… ஒரே கைத்தட்டல்!

உலகத்தில் தலைசிறந்த சொல்…. செயல்! சமீபத்தில் வேலைக்காரன் படத்தில் வந்த இந்த வசனத்திற்கு உயிர் கொடுத்த விஷாலுக்கு நிஜமாகவே ஒரு ஹாட்ஸ் ஆஃப்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஒரு கதை சொல்லடடுமா சார்! யாரும் பார்க்காத அந்த ஐந்து நிமிஷத்தில் என்ன பண்ணினார் ஹீரோ?

https://www.youtube.com/watch?v=xXNtDp71ZWs&t=37s

Close