ஓடி ஒளியும் கவுதம்மேனன்! ஒரு விளம்பர வில்லங்கம்?
அச்சம் என்பது மடமையடா என்று தலைப்பு வைத்துவிட்டு, இப்படி தன் கம்பெனி பெயரைக் கூட போட முடியாமல் அச்சத்திலிருக்கிறாரே கவுதம்? இன்று வெளிவந்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் விளம்பரம் இப்படி உச் கொட்ட வைத்திருக்கிறது இன்டஸ்ட்ரியை.
பல மாதங்களாக போராடி போராடி இந்தப்படத்தை முடித்துவிட்டார் கவுதம்மேனன். படத்தின் தயாரிப்பாளரும் இவரே என்பதால் கொடுக்கல் வாங்கல்களில் ஏராளமான குழப்பம். சிம்பு படப்பிடிப்புக்கு வரவில்லை என்று அவர் மேல் பழியை தூக்கிப் போட்டார் கவுதம். எவ்வளவு காலத்திற்குதான் இடிக்கு மத்தளமாக இருப்பது? நிஜ நிலவரத்தை புட்டு புட்டு வைத்துவிட்டார் சிம்பு. “முதல்ல சம்பளத்தை ஒழுங்கா கொடுங்க. அப்புறம் நான் ஒழுங்கா வர்றேனா, இல்லையான்னு விமர்சனம் பண்ணுங்க” என்று காச் மூச் ஆகிவிட்டார்.
படம் ஆரம்பித்து நாற்பது சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போனார் அப்படத்தின் நாயகியான பல்லவி சுபாஷ். மீண்டும் மஞ்சிமா மோகனை வைத்து படத்தை தொடர்ந்த வகையில் சில லட்சங்கள் நஷ்டம் கவுதமுக்கு. இப்படி நாலாபுறமும் சேதாரமான அவருக்கு, அந்த நஷ்டத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் படத்தை உடனே ரிலீஸ் செய்தாக வேண்டும். இந்த நிலையில்தான் இன்றும் நேற்றும் வந்த பட விளம்பரங்களில் எந்த தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் இல்லை. ‘போட்டான் கதாஸ்’ நிறுவனத்தின் சார்பில்தான் இந்தப்படம் தயாரிக்கப்பட்டது. இது கவுதமுக்கு சொந்தமான நிறுவனம். இப்போது அந்த பெயரைக் கூட போட முடியாதளவுக்கு அவரைச்சுற்றி அலகு குத்தி ஆடுகிறது பிரச்சனை.
விரைவில்… என்று விளம்பரங்களில் ரிலீஸ் காலம் குறிப்பிடப்பட்டிருந்தாலும், கவுதமின் நல்ல நேரத்தை பொறுத்துதான் அந்த ‘விரைவில்’ என்பதற்கான அர்த்தமே விளங்கும். அதுவரைக்கும் ‘அச்சம் என்பது இருக்கும்டா….’
To listen Audio Click below:-
https://youtu.be/D_PP4DCwQSY