தனுஷ் விஜய் சேதுபதிக்குப் பின் நம்ம சந்தீப்தான்! சுசீந்திரன் ஆசை!
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொண்டார். நேற்று அவரது ஆபிஸ் மற்றும் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியிருந்ததால், விஷாலின் வருகையும் அவரது பேச்சும் உற்று கவனிக்கப்பட்டது. நட்புக்காக இந்த நிகழ்சியில் கலந்து கொண்டதாக குறிப்பிட்ட விஷால், ரெய்டு விஷயத்தில் பெரிதாக சர்ச்சை கிளப்பாமல் தனது உரையை அமைத்துக் கொண்டார்.
விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசியபோது படத்தின் ஹீரோ சந்தீப் கிஷனை தனுஷ், விஜய்சேதுபதி லெவலுக்கு உயர்த்திப் பேசினார்.
“நான் மகான் அல்ல திரைப்படம் எப்படி வெற்றிப்படமாக அமைந்ததோ அதை போலவே இந்த திரைப்படமும் வெற்றி படமாக அமையும். பாண்டிய நாடு போலவே இந்த படத்திலும் அனைத்து பாடல்களும் ஆல்பமாக ஹிட்டாகியுள்ளது. இமான் அண்ணனோடு நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். நாயகன் சந்தீப் கிஷன் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவரோடு நான் ஜீவா திரைப்படத்திலேயே இணைந்திருக்க வேண்டும். ஜீவா திரைப்படத்தை முதலில் தமிழ் மற்றும் தெலுங்கில் Bi-lingual படமாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து தமிழில் விஷ்ணு விஷாலை வைத்தும் தெலுங்கில் சந்தீப்பை வைத்தும் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து ஆரம்பித்தேன்.”
“ஆனால் அதுக்கு கடுமையான உழைப்பு தேவைப்பட்டது. இரண்டு நாள் படபிடிப்புக்கு பின் தான் இரண்டு மொழிகளிலும் வெவ்வேறு ஹீரோவை வைத்து படமெடுப்பது கடினம் என்பது எனக்கு தெரிந்தது. சில காலத்துக்கு பிறகு சந்தீப்புடன் இணைந்துள்ளேன். தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பிறகு பி மற்றும் சி செண்டர் நாயகனாக சந்தீப் வருவார். ஒரு நடிகன் டயலாக்கை எளிதாக பேசிவிடலாம். ஆனால் அவர் நடிப்பின் மூலமாக அனைவரையும் ஹோல்ட் செய்கிறார். சந்தீப் என்ற மிக சிறந்த நடிகனை இந்த படத்தில் நான் பார்த்தேன். அவருடைய நடிப்புக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும் என்றார் இயக்குநர் சுசீந்திரன்.