சுவாதி கொலை! இயக்குனர்களின் மனநிலை!
நா.முத்துக்குமாரின் மரணத்திற்கு முன்பே, நாட்டு மக்களை உலுக்கிய வேறொரு மரணம் இலங்கை தமிழர்களுக்காக உயிரோடு தன்னை எரித்துக் கொண்ட முத்துக்குமாரின் மரணம். அந்த தகன மேடையில் தமிழ்சினிமாவின் உணர்வு பூர்வமான இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து நின்றார்கள். முழங்கினார்கள். “இன்னும் ஆறு மாதங்களுக்கு நாங்கள் துவங்குகிற எல்லா படத்தின் ஹீரோவின் பெயரும் முத்துக்குமார்தான்” என்று சூளுரைத்தார்கள். அதை செய்தார்களா, இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் அப்படியெல்லாம் பேச வைத்த மரணம் அது.
அதற்கப்புறம் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது ஸ்வாதியின் மரணம்தான். இந்த கொலைக்கு முன்பே அப்படியொரு கான்சப்டுடன் ‘குற்றமே தண்டனை’ படத்தை இயக்கியிருந்தாலும், படம் வெளியாகிற நேரத்தில் ஸ்வாதியின் கொலை பற்றியும் தனது பேட்டிகளில் பேசும்படி தள்ளப்பட்டார் இயக்குனர் மணிகண்டன்.
‘சினிமாவை பார்த்துவிட்டுதான் செய்தேன்’ என்று குற்றப்பின்னணியில் சிக்குகிறவர்கள் மறக்காமல் குறிப்பிடுகிற வழக்கம் இன்றளவும் தொடர்கிறது. அண்மையில் செயின் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர், போலீசிடம் சொன்ன வாக்குமூலம் என்ன தெரியுமா? நான் ‘மெட்ரோ’ படத்தை பார்த்துவிட்டுதான் இந்த தொழிலுக்கே வந்தேன்!
இதையெல்லாம் தொடர்ந்து கவனித்து வந்திருப்பார் போல… அண்மையில் வ.கீரா இயக்கியிருக்கும் ‘மெர்லின்’ என்ற படத்தின் நிகழ்ச்சிக்கு வந்திருந்த இயக்குனர் வசந்தபாலன் ஒவ்வொரு இயக்குனருக்கும் புரியும்படி ஒரு விஷயம் சொன்னார்.
மிக மோசமான காலக்கட்டத்தில் இன்று நாம் நின்று கொண்டிருக்கிறோம். ஒரு தலைக்காதலால் பெண்களை கொலை செய்கிறார்கள். இந்த சூழலில் இயக்குனர்கள் பொறுப்பாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
நெற்றிப் பொட்டில் விழுந்த மாதிரி வசந்த பாலன் சொல்லியிருக்கும் இந்த விஷயத்தை இனிமேலாவது பின்பற்றுவார்களா இயக்குனர்கள்?