படத்துல மூணு சிம்புவாம்! தாங்குவீங்களா மக்கா?
பூர்வ ஜென்மத்தில் நாய் ஜோடி ஒன்று சல்லாபிக்கும் போது நடுவில் கல்லெறிந்த பாவத்திற்காக முதலிரவே கொண்டாட முடியாத ஒருவனை பற்றிய கதையைதான் படமாக்கிக் கொண்டிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படி விதவிதமா எப்படிதான் சிந்திக்கிறார்களோ என்று உதவி இயக்குனர்கள் பலர், அர்த்த ராத்திரியில் எழுந்து திருநீறு பூசிக் கொண்டு நித்திரையை கன்ட்டினியூ பண்ணுகிற அளவுக்கு, கோடம்பாக்கத்திற்கு பேரதிர்ச்சி கொடுத்து வருகிறார் ஆதிக்.
எங்கு திரும்பினாலும், இவரும் சிம்புவும் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் ட்ரிப்பிள் ஏ படத்தை பற்றியும், ஜி.வி.பிரகாஷும் இவரும் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் ‘வெர்ஜின் மாப்பிள்ளை’ படத்தை பற்றியும்தான் பேச்சு.
ஒரே நேரத்தில் இரண்டு ஹீரோக்களை வைத்து படம் எடுக்கிறார் என்று பெயர் எடுத்தாலும், சிம்புவுக்கு மூன்று கெட்டப் கொடுத்து எடுத்து வருவதால், “ஒரே நேரத்தில் நான்கு ஹீரோக்கள் கணக்கு வருகிறதே…” என்று மூக்கில் விரல் வைக்கிறது முட்டுசந்து குரூப்.
“ஒரு சிம்புவையே சமாளிக்க முடியாது. இதுல மூணு சிம்புவை எப்படிய்யா கட்டுப்படுத்தி ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு கொண்டு வர்றாரு இந்தாளு?” என்று இமயமலையை புரட்டிப் போட்ட மாதிரி, இவரது சாதனையை சிலாகிக்க தவறவில்லை அவர்கள். அப்பா சிம்பு, அவரைத்தவிர மகன்கள் இருவரும் சிம்பு என்று மூன்று கெட்டப்புகளில் தோன்றினாலும், “என்னோட வித்தியாசமான மேனரிசங்களால் மூன்று பேருக்கும் மூன்று விதத்தில் வித்தியாசம் கொடுக்கிறேன்” என்று இம்சித்து வருகிறாராம் சிம்பு.
சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் சிலருக்கே இந்த அலர்ஜியால் உடம்பெல்லாம் தடிப்பு. படமாகி தியேட்டருக்கு வரும்போது, யாருக்கெல்லாம் யூரியாவை இறைத்த மாதிரி புல்லரிக்கப் போகிறதோ? அந்த ஆதிக்குக்கே வெளிச்சம்!