என்னது…தொடரி படம் பார்த்துட்டுதான் கீர்த்தியை நடிக்கக் கூப்பிட்டாங்களா?
சாவித்திரியை பற்றி நான் ஏன் தெரிஞ்சுக்கணும்? என்று நினைப்பவர்கள் கூட, கீர்த்தி சுரேஷின் அழகான முகத்திற்காக தியேட்டருக்கு வருவார்கள். ஓவியத்தோடு ஓவியமாக ஐக்கியமானது போல, சாவித்திரியின் கதைக்குள் கரைந்தே போய்விட்டார் கீர்த்தி சுரேஷ். சாவித்திரி…. ஜெமினிகணேசனின் ராணி மட்டுமல்ல… அந்த கால இளசுகளின் ஆக்சிஜன்!
கணக்கில்லாமல் காதலும், அந்த காதல்களுக்கு துரோகம் பண்ணாமல் கல்யாணமும் பண்ணி வந்த ஜெமினி கணேசனுக்கு வாழ்க்கைப்பட்ட சாவித்திரியின் கடைசி காலம், நாடே துயரப்பட்டு கண்ணீர் வடித்த காலம். குடிக்கு அடிமையாகிவிட்ட சாவித்திரி, தன் புகழ், பணம், அந்தஸ்து எல்லாவற்றையும் குடிக்கு தாரை வார்த்துவிட்டு அதனுள்ளே கரைந்து போயிருந்தார். தெருவுக்கொரு மதுக்கடை ஜொலிக்கும் இந்த காலத்தில், குடியின் கொடுமையை சாவித்திரியின் சம்பவங்களால் சொல்லப் போகிறார்கள். அந்தப்படம்தான் நடிகையர் திலகம்.
‘முதலில் இந்தப்படத்தில் நடிக்க நான் தயங்கினேன். ஏன்னா அவ்ளோ பெரிய நடிகை. அவங்க வாழ்க்கையை பற்றி சொல்லும்போது ஏதும் தப்பாகிடக் கூடாது. என்று பயந்தேன். ஆனால் மிக நாசுக்காக நயமாக அவங்க புகழுக்கு குந்தகம் ஏற்படா விதத்தில் இந்தப்படம் வரும்னு தோணுச்சு. அதற்கப்புறம்தான் ஒப்புக்கிட்டேன்’ என்றார் கீர்த்தி சுரேஷ்.
ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்திருக்கிறார். நடிகையர் திலகம் படத்தின் வசனத்தை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். இதற்காகவே நிறைய சாவித்திரியின் படங்களை திரும்ப திரும்ப போட்டுப் பார்த்தாராம். கீர்த்தி சுரேஷ் அபாரமாக நடித்திருக்கிறார் என்று இவரும் சர்டிபிகேட் வாசித்தார்.
காதை கிட்ட கொடுங்க. தொடரி படத்தை பார்த்துவிட்டுதான் இந்தப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தாராம் டைரக்டர் நாக் அஷ்வின். என்னாங்கய்யா இது?