பட்ட காலிலேயே படுதே கண்ணன்?
கடந்த முறை விஷால் அறிவித்த ஸ்டிரைக் எந்தளவுக்கு பிசுபிசுத்துப் போனது என்பதை பற்றி எழுதினால், மீராகதிரவன், ஆர். கண்ணன் போன்ற இயக்குனர்களின் சாபமும், அதன் ஓலமும் தெரியும். ‘இவன் தந்திரன்’ என்ற படம் வெளியான இரண்டாம் நாளே ஸ்டிரைக் என்று அறிவிக்கப்பட்டது. தியேட்டர்களிலிருந்து வாபஸ் பெறப்பட்ட இவன் தந்திரன், அடுத்த முறை வரும்போது பார்க்க ஆளில்லை. மீரா கதிரவனின் ‘விழித்திரு’ வரும்போதும் இதே போல் சிக்கல்.
எப்படியோ போராடி அடுத்த படத்தை தயாரித்து இயக்கிக் கொண்டிருக்கிறார் ஆர்.கண்ணன். படத்தின் பெயர் ‘பூமராங்’. அதர்வா நடிக்கும் இப்படத்தின் ஷுட்டிங் முடிய இன்னும் பத்தே நாட்கள்தான் இருக்கிறது. துரதிருஷ்டம்… மீண்டும் ஸ்டிரைக். ‘ஏங்க… சுற்றி சுற்றி வந்து என் பாக்கெட்டையே கிழிக்கிறீங்க’ என்று கதறி அழாத குறையாக கேட்டாராம். ‘எனக்கு மட்டும் சலுகை கொடுங்க. படத்தை முடிச்சுர்றேன். இப்ப விட்டா இன்னும் ஆறு மாசத்துக்கு அதர்வா கால்ஷீட் எனக்கு இல்ல. வட்டி வட்டிமேல வட்டின்னு சிக்கலாகிடும்’ என்று கண்ணன் கேட்க… ‘உங்க ஒருத்தருக்கு மட்டும் சலுகை வழங்கினா, மற்றவங்களை கண்ட்ரோல் பண்றது சிக்கல்’ என்று மறுத்துவிட்டதாம் சங்கம்.
ஒருவகையில் இந்த விடாப்பிடி போராட்டம் அவசியம்தான் என்றாலும், அதில் சிக்கி கண்ணன் மாதிரி சின்னஞ்சிறு எறும்புகள் கன்னாபின்னாவென சேதம் அடையுதே… என்ன செய்ய?