டில்லியின் கதவை தட்டுது ஐ போன காரியம் காயா? பழமா?
தமிழ்சினிமாவில் 100 கோடிக்கு படம் எடுத்துவிட்டு ஐயோ குடையுதே… என்று ஐயோடக்சுக்கு அலையும் கூட்டம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருக்கிறது. இப்படி வெடிக்கிற வரைக்கும் பலூன் ஊதும் வழக்கத்தை கொண்டு வந்தது எந்திரன் படம்தான் என்றாலும், அதன் வசூல் 100 கோடியை தாண்டிவிட்டதாக பலரும், இல்லையில்லை நஷ்டம் என்று சிலரும் இப்பவும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்சினிமா மார்க்கெட் இந்தி சினிமா போல பெரியது அல்ல. அதற்கேற்றார் போல செலவு செய்யாவிட்டால், கையில சுடு கஞ்சிதான் என்று கவலைப்படும் விநியோகஸ்தர்களும் இங்கு இருக்கிறார்கள்.
ஐ எப்படி? வழக்கம் போல 100 கோடிக்கு மேல் விற்கும் முயற்சி நடந்து கொண்டேயிருக்கிறது. வியாபாரம் 200 கோடியை தாண்டும் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய தொகையை உள்ளடக்கிய ஒரு படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காவிட்டால், மொத்த படத்திற்குமே வாயுத்தொல்லைதான் என்பதை மிக சரியாக உணர்ந்து வைத்திருக்கிறார்கள் அத்தனை பேரும். அதனால் என்ன செய்யவேண்டும்? படத்திற்கு எப்படியாவது யு சர்டிபிகேட் வாங்கியாக வேண்டும்.
தமிழ்நாட்டில் அமைந்துள்ள சென்சார் போர்டு ஐ க்கு யு/ஏ வழங்கிவிட்டதல்லவா? இதை மாற்றி யு பெறும் முயற்சியுடன் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்களாம். பேச வேண்டியவர்களிடம் பேசி காரியத்தை சாதித்துக் கொள்ள பெரும் முயற்சி நடந்து வருகிறது. ஒருவேளை அது தள்ளிப் போனால், யு கிடைக்கிற வரைக்கும் படத்தை வெளியிடுவது சிரமம்தானாம். யு வேணும்னா இதையெல்லாம் வெட்டுங்க என்று ஒரு பெரிய லிஸ்ட்டையே கொடுத்திருக்கிறதாம் சென்சார். வெட்டாம யு வாங்குறேன் என்பதுதான் இப்போதைய முயற்சி.
‘இந்த பஞ்சாயத்து முடியாது. பொங்கலுக்கு ஐ வரவும் வராது. அதனால் நம்ம குதிரையை பூட்டுங்கப்பா’ என்று அனேகன் படத்தை களத்தில் இறக்க துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்களாம் அப்படக் குழுவினர்.
ஒரு யானை படுத்தா எத்தனை குதிரை கிளம்புது பாருங்கப்பா…