அதிகாலை 4 மணி! அம்மாவை புதைத்த இடத்தில் அஜீத்!
அஜீத்தை பொருத்தவரை அவர் ‘அம்மா’ விசுவாசி! அஜீத் ஷாலினி திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய ஜெயலலிதா, ‘மை சன்’ என்றுதான் குறிப்பிடுவாராம் அவரை. அஜீத்தின் அம்மா பாசம், கலைஞர் கருணாநிதியின் மேடையிலும் எதிரொலித்த கதையைதான் நாடே அறியுமே? சமயங்களில் அம்மாவுக்குப்பின் அக்கட்சிக்கு அஜீத் தலைமை ஏற்பார் என்கிற அளவுக்கு அவரது ரசிகர்கள் இரட்டை இலை மேனியாவில் சிக்கித் தவிப்பதெல்லாம் இன்னொசென்ஸ் என்றாலும், இனிப்பான வதந்திதான்.
அப்படியொரு அன்பு வட்டத்திலிருக்கும் அஜீத், ஜெயலலிதா மறைந்த பின் நேரில் வராமல் போனால் அவருக்கே வலிக்குமல்லவா? பல்கேரியாவில் படப்பிடிப்பிலிருந்த அவரிடம் விஷயத்தை சொன்னார்களாம். பதறியடித்துக் கொண்டு கிளம்பிவிட்டார் சென்னைக்கு. தனது வருகை தாமதம் ஆனாலும் முதலில் தன் அஞ்சலி கடிதம் போய் சேரட்டும் என்று ஒரு இரங்கல் கடிதத்தையும் அனுப்பி வைத்திருந்தார் அஜீத்.
நேற்றிரவு சென்னை வந்து சேர்ந்த அஜீத், வந்ததும் இறங்காததுமாக பதறியடித்துக் கொண்டு அம்மா புதைக்கப்பட்ட இடத்திற்கு ஷாலினியோடு வந்து சேர்ந்தார். அதிகாலை 4 மணி சுமாருக்கு அவர் வந்ததாக கூறுகிறார்கள். அவ்வளவு அதிகாலையிலும் அவரது வருகையை அங்கிருப்பவர்கள் செல்போன் மூலம் படம் எடுத்து நாட்டுக்கு அஜீத்தின் வருகையை உறுதிபடுத்திவிட்டார்கள்.
அம்மா நினைவிடத்திலிருந்து அப்படியே நேராக மறைந்த பத்திரிகையாளர் சோ வீட்டுக்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு கிளம்பினார் அஜீத்.
இன்று சசிகலாவை நேரில் சந்தித்து தனது ஆறுதலை தெரிவிப்பார் என்கிறது கூடுதல் தகவல்கள்!
https://youtu.be/xJPmAADDZx0